இளைஞர்களை சமூகப்பிறழ்வான செயல்களில் இருந்து கிராம மட்ட அமைப்புக்கள் மீட்க வேண்டும் என்கிறார் வடக்கு ஆளுநர் !
Share

பு.கஜிந்தன்
இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
அளவெட்டி தெற்கு கலைவாணி ஜனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வு 20ம் திகதி அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், சனசமூக நிலையத்தின் தலைவர் வை.சின்னப்பு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். சிறிய இடத்திலிருந்து இன்று இந்தச் சனசமூக நிலையம் வளர்ச்சியடைந்திருக்கின்றமைக்கு, சனசமூக நிலையத்தின் தலைமைத்துவமும் மக்களின் பங்களிப்புமே காரணம் என்று குறிப்பிட்டார்.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்தபோதும், யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோதும், தற்போது ஆளுநராக இருக்கின்றபோதும் இங்கு வந்திருக்கின்றேன் என்றும் அவ்வாறு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
தலைவர் தனது உரையில் தமது பிரதேச வீதிகள் சீரின்மை தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அது தொடர்பில் தனது உரையில் பதிலளித்த ஆளுநர், தற்போதைய அரசாங்கம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றது என்றும், அதற்கு அமைவாக இந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த ஆண்டு சிலவற்றை புனரமைப்பதுடன் எஞ்சியவற்றை அடுத்த ஆண்டுகளில் புனரமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களின் ஆர்வமும், பங்களிப்பும் இருந்தால்தான் அபிவிருத்திகளை விரைவில் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்தச் சனசமூக நிலையம் நூற்றாண்டுகளை கடந்து சேவையாற்றவேண்டும், என்றார்.
இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன், பிரதேச கிராம அலுவலர் க.அஜந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.