இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை
Share

– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு !
இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே
வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் றுஷங்கன், மேலும் கூறுகையில்,
வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு சிகரம் தரும் தீர்வு தொழில்மையமான கற்கைத்துறைகளாக க.பொ.த.(உ/த) கலைத்துறை பாடநெறிகள் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை எமது நாட்டில் தொடர்ந்தும் எந்தவிதத் தீர்வும் இல்லாமல் நீடித்து வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் கணிசமான தொகையினர் இவ்வாறு தம்மை வேலையற்ற பட்டதாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வீதிகளில் இறங்கிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறை பட்டதாரிகள் என்பது தெரியவரும்.
மேலும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பாடச் சேர்மானங்கள் மூலம் கிடைக்கக்கூடிய எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கான வாய்ப்புக்கள் எவை என்பது குறித்தோ, பல்கலைக்கழக நுழைவுக்குத் தேவையான இசட் புள்ளிகளை பெறுவதற்கு இந்தப் பாடச் சேர்மானங்கள் எவ்வாறு துணை புரியும் என்பதுபற்றியோ மாணவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.
அதுமட்டுமல்லாது பல்கலைக்கழக பட்டக்கல்வி மட்டத்திலும் தொழில்மையமான பாடத் தெரிவுகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதில்லை.
தாம் பட்டக்கல்வியைத் தொடரும் பாடங்களுக்கு தொழிற்சந்தையில் இருக்கும் கேள்வி என்ன? தமது பாடங்களில் தொழில்மையமான இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் எவை என்பதுபற்றியெல்லாம் தெரியாமலே மாணவர்கள் பட்டக்கல்வியையும் பூர்த்திசெய்கிறார்கள்.
இதனாலேயே, பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னரும் தொழில்வாய்ப்பு பெற முடியாதவர்களாக இந்த மாணவர்கள் காணப்படுகின்றனர்.
பட்டக்கல்வியை நிறைவுசெய்தவர்களின் நிலையே இதுவாயின், க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைப் பாடங்களைக் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களின் நிலை இதைவிட மோசமானது.
இந்தளவுக்கும், இலங்கையில் அதிகளவு மாணவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது கலைத்துறையிலேயே கல்வி கற்று வருகிறார்கள்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இது இன்னமும் அதிகமாகும்.
தொழில்வாய்ப்புக்களும், தொழில் கல்விக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவுள்ள இந்தப் பகுதிகளிலுள்ள இவ்வாறு கலைத்துறையைத் தெரிவுசெய்து கற்கும் மாணவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைமைக்கே ஒவ்வொரு வருடமும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம் வடக்கு மாகாணத்தில் 15 வருடங்களுக்கு மேலாக கல்வி-தொழில் வழிகாட்டி சேவையை வழங்கி, கருத்தரங்குகள் மூலமாகவும், சிகரம் இளையோர் மாதாந்த சஞ்சிகை, பிரசுரங்கள், இலங்கையிலேயே முன்முதலாக தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி கையேடு என்பவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில்மையமான கல்விக்கான வழிகாட்டலை வழங்கி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடித் தொழிற்பயிற்சிகளின் மூலம் உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து, ஒரு தனியார் தொழில் முயற்சியாக இந்தச் சேவையை வழங்கியைமையைக் கௌரவித்து இலங்கை வர்த்தக கைத்தொழில் மன்றங்களின் சம்மேளத்தினால் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்ற அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனம், கலைத்துறை மாணவர்களின் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கான புத்திபூர்வமான செயன்முறைத் தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.
உயர்தரக் கலைத்துறைப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, தொடர்பாடல் ஊடகக் கற்கைகள் துறை, விருந்தோம்பல் மற்றும் வடிமைப்புத் துறை, அழகியல், கலை-இலக்கிய கற்கைகள் துறை, வர்த்தகம் சந்தைப்படுத்தல் கற்கைகள்துறை, சட்ட கற்கைகள் துறை, பொதுச்சேவை – அபிவிருத்தி கற்கைகள் துறை என்று 6 தொழில்மையமான கற்கைகள் துறைகளாக கலைத்துறை பாடங்களை வகைப்படுத்தி, இவற்றில் மாணவர்களுக்கு அதிகம் பொருத்தமான துறையை அவர்களது இயல்பான ஆற்றல், ஆர்வம், இயல்தகைமை என்பவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்வதற்குத் தேவையான வாழ்க்கைத்தொழில் உளவியல் மதிப்பீட்டையும் செய்து, அவரவருக்குப் பொருத்தமான துறைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்பாடலுக்கான ஆங்கில பாடநெறியை கட்டாய பாடமாக வழங்குவதுடன், அவர்கள் தெரிவுசெய்யும் துறைகளுக்குத் தேவையான தொழில்சார் திறன்விருத்திப் பயிற்சிகளையும் மேலதிகமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதுமே தொழில் ஒன்றில் இணைந்துகொள்வதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் பகுதிநேரமாக தொழில்செய்துகொண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவும், கிடைக்காவிட்டால் முழுநேரமாகத் தொழில்செய்துகொண்டு பகுதிநேரமாக வெளிவாரிப் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கும் மாணவர்களால் இயலுமாக இருக்கும்.
அத்துடன் ஏப்ரல் மாத பிற்பகுதியில் இந்தக் கற்கைநெறிகளையும் நாம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவிருப்பதால், ஏற்கனவே க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி அல்லது தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாதவர்களும், சாதாரணதரத்துக்கு மேல் கல்வியைத் தொடர முடியாதவர்களும் உரிய தயார்ப்படுத்தல் கற்கைநெறிகளைக் கற்றுத்தேறி, இந்தத் தொழில்வாண்மையான கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு, பல்கலைக்கழக அல்லது பட்டக்கல்வி நுழைவுக்கு முன்னரோ, அன்றி, அவற்றை நிறைவுசெய்தவுடனேயோ மாணவர்கள் தொழில்திறன்களை விருத்திசெய்து, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுவதால், பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னர் வேலையற்ற பட்டதாரிகள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டு வீதிகளில் நின்று போராடவேண்டிய இழிநிலையும் அவர்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமல்லாது வழி மாறி செல்லும் நிலையும் தடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.