காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா- பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல்
Share

குரு அரவிந்தன்
கனடா, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 – 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கை நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், ஊடகவியலாளரான பி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து நடேஸ்வரக்கல்லூரிக் கீதம் ஆகியன யமுனா சிறீதரன், வாசுகி கோகுலன், சின்னராசா தாசன், கிருஸ்ணபிள்ளை நீலவண்ணன் ஆகியோரால் பாடப் பெற்றன. ஜெனீக்கா டேவிட்சனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் மார்கண்டு நிர்மலன் அவர்களின் உரை இடம் பெற்றது.
தொடர்ந்து காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரி அதிபர் திரு. பி. பாலகுமார் அவர்களின் பதிவு செய்யப்பட்ட காணெளி உரை இடம் பெற்றது. அவர்தனது உரையில் அதிபாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட பாடசாலையின் முன்னேற்றம் பற்றியும், இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் மாணவர்கள் பற்றாக குறை பற்றியும் குறிப்பிட்டு, பாடசாலையைக் கல்வி சார்ந்து முன்னேற்றத் தேவையான அவசர தேவைகள் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மேலதிக விபரங்களை மகாலிங்கம் குமாரகுலதேவன் தனது உரையில் எடுத்துச் சொன்னார்.
தொடர்ந்து மேரி அசோக், சதானந்தபவன் வாகீசன், சின்னராஜா தாசன், ஆகியோரின் திரையிசைப்பாடல்கள் இடம் பெற்றன. அதன்பின் வைஸ்நவி நந்தீஸ்வரன், ஜெனீக்கா டேவிட்சன் ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அதன் பின் இரவு விருந்து இடம் பெற்றது. பிரதம விருந்தினராக வரவிருந்த பழைய மாணவர் வல்லிபுரம் ஆனந்தலிங்கம் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.
நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் சேவையைப் பாராட்டி அருளப்பு ரஞ்சன், சுந்தரம் சந்திரா, நடராஜா முரளிதரன், செல்வரட்ணம் பிரபாகரன், கோபால் உமைபாலன் ஆகியோர் விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். மன்றத்தின் செயலாளர் வாசுகி கோகுலனின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.