LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில் ஆரம்பம்

Share

(28-03-2025)

எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர் செய்யும் நடவடிக்கை மார்ச் 28ம் திகதி வெள்ளிகிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம் பொது நூலகம் அம்மன் கோவில் வீதி தாள வட்டுவான் சந்தி நற்பிட்டிமுனை புறநகர் பகுதி கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை கல்முனை ஆதார வைத்தியசாலை வங்கிகள் தனியார் நிறுவனங்கள் கல்முனை மாநகர பகுதிகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பகுதி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி ஆகியவற்றில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் உட்பட பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

குறித்த நடவடிக்கைகள் யாவும் அண்மையில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கலந்துரையாடலின் பின்னர் கல்முனை பிராந்தியத்தில் கட்டம் கட்டமாக உரிய உரிய திணைக்களங்கள் கல்முனை மாநகர சபை என்பவற்றுடன் இணைந்து பொதுப் போக்குவரத்து விதிமுறைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமுத்திர ஜீவ கண்காணிப்பின் கீழ் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி யும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய கட்டுப்பாடுகளை அமுல் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீர் செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.