கடையடைப்பு : வெற்றியா தோல்வியா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
தமது கட்சியின் கட்டுப்பாட்டிலிருக்கும் உள்ளூராட்சி சபைகளை வைத்துக்கொண்டு கடையடைப்பை இலகுவாக அமுல்படுத்தலாம் என்று சுமந்திரன் சிந்தித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல கடையடைப்பு முழு வெற்றி பெறவில்லை. அது முழுமையாகத் தோற்கவும் இல்லை; முழுமையாக வெற்றி பெறவும் இல்லை. குறிப்பாக மக்கள் அதிகமுடைய யாழ்ப்பாணத்தில் அது பெருமளவுக்குச் சொதப்பிவிட்டது.கிழக்கில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது.வன்னியிலும் அது பாதி வெற்றி,பாதி தோல்வி என்ற நிலைமைதான்.
இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று சுமந்திரன் திட்டமிட்டு உழைத்தார். கடையடைப்பை எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவரும் அவருடைய அணியும் சகல மாவட்டங்களிலும் கடுமையாக உழைத்தனர். வெற்றியைக் குறித்த சந்தேகங்கள் இருந்த காரணத்தாலும் விமர்சனங்களின் விளைவாகவும் கடையடைப்புக்கு நேர வரையறையையும் அறிவிக்க வேண்டிவந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு கடையடைப்பு பூரண வெற்றி பெறத் தவறியது.
உண்மையில் இது தமிழரசுக் கட்சியின் அல்லது சுமந்திரனின் போராட்டம் அல்ல. முழுத் தமிழ் மக்களும் இனமாகப் போராட வேண்டிய விடயம் இது. முல்லைத்தீவில் இறந்த இளைஞர் யார்? அவர் இறப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது யார்? இதில் படைச் சிப்பாய்களுக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு என்ன ? போன்ற விடயங்களைத் தனியாக ஆராயலாம். தமிழ்ப் பகுதிகளில் முகாமிட்டிருக்கும் படையினருக்கும் அந்த படை முகாம்களை அண்டியிருக்கும் பகுதிகளில் வாழும் ஒரு பகுதி குற்றவாளிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. இது ஒருவகையில் குற்றப் பின்னணியைக் கொண்ட தொடர்புதான்.தமிழ்ப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில குற்றவாளிகள் படைத்தரப்பினரோடு பல்வேறு வகையான உறவுகளைக் கொண்டிருக்கின்றார்கள். போதைப்பொருள் விநியோகம்,பாலியல் தொழில், அரச சொத்துக்களைக் கள்ளமாக விற்பது போன்ற பல விடயங்கள் இதில் சம்பந்தப்படுகின்றன. தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் போதைப்பொருள் வலைப் பின்னலும் இப்படிப்பட்டதுதான் என்ற குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள்.
முல்லைத்தீவில் சம்பந்தப்பட்ட இளைஞர் வாழும் குடியிருப்பு ஜீவன் குடியிருப்பு என்று அழைக்கப்படுகிறது. வறிய அக்குடியிருப்பைச் சேர்ந்த ஒரு சிறு பகுதியினர் முத்தையன் கட்டுப் பகுதியிலுள்ள படை முகாமோடு தொடர்புகளை ஏற்கனவே வைத்திருக்கிறார்கள். இந்த தொடர்புகளின் விளைவாகத்தான் அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தக் குற்றப் பின்னணியை வைத்துக்கொண்டு இதில் அரசியல் இல்லை, அந்த இளைஞரின் மரணம் கொலை அல்ல, இதில் படையினர் குற்றவாளிகள் இல்லை, என்பது போன்ற விளக்கங்களை ஒரு பகுதி தமிழர்களும் தமிழர்களே எழுதி வருகிறார்கள். சுமந்திரனை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அல்லது கடையடைப்பை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டும் ஒரு பகுதி அரசியற் செயற்பாடடாலர்களும் அவ்வாறு எழுதி வருகிறார்கள்.அது தவறு. அங்கே ஒர் அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஒரு படை முகாம் இருந்த காரணத்தால்தான் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கே ஒரு படை முகாம் இருந்தமை என்பது தமிழ் நோக்கு நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கான ஒரு படை முகாம்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. எனவே தமிழ்ப் பகுதிகளில் படையினரின் பிரசன்னத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அங்கே அந்த முகாம் இருந்ததை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த முகாம் அங்கு இருந்தபடியால்தான் அந்தக் குற்றச்செயல் இடம்பெற்றது. எனவே அடிப்படைக் காரணம் படைப்பிரசன்னம்தான்.தமிழ்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நோக்கத்துக்காக படையினர் நிலை கொண்டிருப்பதுதான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், அந்தப் படைப் பிரசன்னத்திற்கு எதிராக சுமந்திரன் அழைத்த போராட்டம் சரி. கடையடைப்பு என்று போராட்டம் சரியாக இல்லையா என்ற விவாதம் ஏற்கனவே தமிழ் அரசியல் பரப்பில் ஆழமாக நடந்திருக்கின்றது. கடையடைப்பு அல்லாத வேறு போராட்ட வடிவங்களை தமிழரசுக் கட்சி யோசித்திருக்கலாம். அப்படி யோசிப்பதற்கு தேவையான போராட்டப் பாரம்பரியம் அவர்களிடம் இல்லை என்று கூற முடியாது. 1950 களில் தந்தை செல்வாவின் தலைமையில் சத்தியாக்கிரகம் செய்த ஒரு கட்சி. அந்த சத்தியாகிரகத்தில் அடி வாங்கிய ஒரு கட்சி. ஆனால் அங்கிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 75 ஆண்டுகலின் பின்னரும் ஒரு புதிய போராட்ட வடிவத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பொருத்தமான காரணங்களுக்காக, பொருத்தமான விதங்களில் போராட வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அந்தக் கட்சியிடம் இல்லை என்பதால்தான் அவர்கள் நமத்துப்போன போராட்ட வடிவங்களைத் தெரிவு செய்கிறார்கள். அந்த அடிப்படையில் கடையடைப்பை விமர்சிக்கலாம். ஆனால் படைப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தை விமர்சிக்கத் தேவையில்லை.
அது தமிழரசுக் கட்சி,சுமந்திரன், சிவஞானம் மட்டுமல்ல ஏனைய எல்லாக் கட்சிகளும் இணைந்து போராடியிருக்க வேண்டிய ஒரு போராட்டம். அது முழுத் தமிழ் இனத்துக்குமான ஒரு போராட்டம். எனவே கட்சி கடந்து இனமாகத் திரண்டு நடத்தியிருக்க வேண்டிய ஒரு போராட்டம். ஆனால் அவ்வாறு கட்சி கடந்து இனமாகத் திரள முடியவில்லை என்பதுதான் தமிழ் அரசியலில் உள்ள மிகப்பெரிய சாபக்கேடு.
கட்சி கடந்து இனமாகத் திரள முடியாத அளவுக்குத் தமிழ் அரசியல் பரப்பு தொடர்ந்து சிதறிக் காணப்படுகிறது. 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்துக்கள் அதிகமாகத் தெரியும் ஒரு அரசியல் சூழலில் கூட, தமிழ் மக்களால் ஒன்றாகத் திரண்டு,ஒரு இனமாக ஒரு முக்கிய விடயத்துக்கு எதிராகப் போராட முடியவில்லை.
படைப் பிரசன்னத்தை அகற்ற வேண்டும் என்ற ஒரு போராட்டத்தில் மட்டுமல்ல, சில கிழமைகளுக்கு முன் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுத வேண்டும் என்ற விடயத்திலும் அவ்வாறு தமிழ்த் தரப்பானது, கட்சி கடந்து இனமாகத் திரள முடியவில்லை.
அந்தக் கடிதத்தை எழுத வேண்டும் என்று முதலில் தொடங்கியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். அந்தக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து அந்தக் கடிதத்தை எழுதிய பின் தமிழரசுக் கட்சியிடம் அதில் கையெழுத்திடுமாறு கேட்டன. அந்த கடிதத்தில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால் தமிழரசுக் கட்சி கேட்கும் திருத்தங்களைச் செய்வதற்குத் தாங்கள் தயாராக இருந்ததாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது. கடிதத்தின் முதல் வரைவை தமிழரசுக் கட்சியின் பிரதானிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவிட்டு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் பொறுத்திருந்ததாகவும் கஜேந்திரக்குமார் ஒர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடுவதில்லை என்ற முடிவை ஐந்து நாட்களின் பின் அறிவித்தது. அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான காரணம் உண்டு.அதுதான் ஏற்கனவே கூறப்பட்டது போல இந்த விடயம் இனமாக திரண்டு எதிர்கொள்ள வேண்டிய ஒன்று என்பது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒரு இனமாக நின்று, ஐநாவுக்கு, ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளுக்கு, ஒரு செய்தியைக் கூற வேண்டிய இடம் அது. ஆனால் இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் கட்சி கடந்து இனமாகத் திரள முடியவில்லை. அதற்குப் பெரும்பாலும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பு.
ஏனென்றால் தமிழரசுக் கட்சி தமது அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல தமிழ்ச் சிவில் சமூகங்கள் மீதும் ஒருவித வெறுப்போடு காணப்படுகிறது. இந்தக் கடிதம் எழுதும் நகர்வை முன்னெடுத்த சிவில் சமூகங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சி ஒருவித ஒவ்வாமை உணர்வோடு காணப்படுகிறது. இந்த ஒவ்வாமை உணர்வு இப்பொழுதுதான் ஏற்பட்ட ஒன்று அல்ல. சிவில் சமூகங்கள் தனக்கு எதிராக செயல்படுவதாக தமிழரசுக் கட்சி நம்புகின்றது. சிவில் சமூகங்கள் தனது அரசியல் எதிரியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்துகின்றன என்றும் அது நம்புகின்றது. எனவே சிவில் சமூகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் தன்னைப் பலவீனப்படுத்துவதற்கு என்று அக்கட்சி நம்புகின்றது.
தமிழ் மக்கள் பேரவையில் தொடங்கி தமிழ்ப் பொது வேட்பாளர் வரையிலும் சிவில் சமூகங்கள் தனது முதன்மையை சோதனைக்கு உள்ளாக்குவதாக தமிழரசுக் கட்சி பயப்படுகின்றது. அந்த அடிப்படையில்தான் ஐநாவிற்கு எழுதப்பட்ட கூட்டுக் கடிதத்திலும் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போட விரும்பவில்லை. இதை தமிழரசுக் கட்சியின் முடிவு என்றுகூடச் சொல்ல முடியாது. அது பெருமாளவிற்கு சுமந்திரனின் முடிவுதான். அந்த முடிவை அவர் சிவஞானத்தையும் வைத்துக் கொண்டு சொன்னார்.அந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேறு சிந்தனைகளும் வேறு அபிப்பிராயங்களும் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுடைய குரல் வெளியே ஒலிப்பதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் சுமந்திரனின் பக்கம் நிற்கின்றார்கள் என்றிருந்தால் நடந்து முடிந்த கடையடைப்பு முழு வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால் வடக்கு கிழக்கு தழுவிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி தமது கட்சிதான் என்று சுமந்திரன் அடிக்கடி கூறுவார்.அப்படிப் பார்த்தால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு கடை அடைப்பை ஏன் முழுமையாக வெற்றிகரமாக நடத்த முடியவில்லை?
கடையடைப்பு முழு வெற்றி பெறவில்லை என்பதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவதாகத் தெரிகிறது.அது தவறு. அது கொண்டாடப்பட வேண்டிய விடயம் அல்ல. ஏனென்றால் ஒரு இனமாக சிந்தித்து, எல்லாருமாகச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு விடயம். கடையடைப்பு முழு வெற்றி பெறாததை வைத்து அரசாங்கம் தனது படைகளை விலக்கிக் கொள்ளாது என்று கூறப்படும் விளக்கம் குதர்க்கமானது. அதேசமயம் கடையடைப்பை சுமந்திரன் செய்கிறார் என்பதற்காக அவருடைய அரசியல் எதிரிகள் அது தோற்க வேண்டும் என்று பிராத்தித்ததோ அல்லது அது முழு வெற்றி பெறவில்லை என்பதை பார்த்து திருப்திபடுவதோ தமிழ் மக்கள் ஒரு இனமாகத் திரளமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது.
அதாவது கடந்த இரண்டு மாதங்களுக்குள் தமிழ் மக்கள் தாங்கள் ஒரு இனமாகத் திரள முடியாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள் என்பதனை இரண்டு தடவைகள் நிரூபித்திருக்கிறார்கள். இதை மேலும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் மக்கள் வெற்றி பெறத் தேவையான அடிப்படைத் தகுதியைப் பெறாத மக்களாகத் தொடர்ந்து மிருக்கிறார்கள் என்பதனை கடந்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டு தடவைகள் நிரூபித்து விட்டார்கள் என்றும் சொல்லலாமா ?




















