LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியக் கொடியை விண்வெளியில் நாட்ட நாட்டம் :வான்மித்தாவின் எண்ணம் ஈடேறுமா?

Share

இன்றைய நேர்காணலின் முடிவில் தெரியும்

-நக்கீரன்

கிள்ளான், டிச.07:

விண்வெளி ஆய்வுத் துறை மாணவி வான்மித்தா, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வானியல் சார்ந்த உயர்க்கல்வியைத் தொடரப் போகிறாரா என்பது இன்று, இந்தப் பொழுதில் (மலேசிய நேரப்படி டிசம்பர் 07 விடியற்காலை 2:00 மணி) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேர்காணல் முடிவில் தெரியவரும்.

பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவியான வான்மித்தா ஆதிமூலம், 2019-இல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும் முதல் வேலையாக பல்கலைக்கழக அறிவியல் துறை மாணவர் சங்கத்தில் இணைந்து முனைப்புடன் செயல்பட்டதால், அந்த அமைப்பின் பொருளாளர் பதவியை எட்டி இருக்கிறார்.

தொடர்ந்து, கெடாவில் இயங்கும் ஏவுகனை குழுமத்திலும் இணைந்து, சிறிய அளவிலான ஏவுகனைத் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதனை அடுத்து, மலேசிய விண்வெளி ஆராய்ச்சி முனையமான ‘சிஸ்வாசாட்’(SISWASAT)  ஏற்பாடு செய்த பயிற்சியிலும் பங்கு கொண்டு, தன் விண்வெளி ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார் கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளி மாணவியான இவர்.

கிள்ளான், மெதடிஸ்ட் பெண்கள் இடைநிலைப் பள்ளிக் கல்விக்குப் பின், கிளந்தான் மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் படித்த காலத்திலேயே விண்வெளி சம்பந்தபட்ட தேடலில் வான்மித்தா ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கிடையில், சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ‘நாசா விண்வெளி சவால்-2019’ என்னும் நிகழ்ச்சியில் தன்னார்வலராகக் கலந்து கொண்டதன் அடிப்படையில், ‘நாசா விண்வெளி சவால்-2020’ நிகழ்ச்சியிலும் பங்கேற்பளராகக் கலந்து கொள்ள கடந்த அக்டோபர் மாதத்தில் வான்மித்தாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பினால் எந்த நிகழ்ச்சியிலும் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத நிலையில், இணையத்தின் மூலம் பங்கு கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ‘விண்வெளித் தலைமுறை ஆலோசனைக் குழு என்னும் பன்னாட்டு அமைப்பு ஐநா மன்றத்துடன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதற்கடுத்து, அமெரிக்காவின் ‘அட்வான்சிங் எக்ஸ்’ என்னும் விண்வெளிக் கல்வி சார்ந்த அமைப்பு நடத்திய போட்டியிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்தப் போட்டி, அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் விண்வெளித்துறையில் படிப்பதற்கான போட்டி.

இதில் போட்டி நான்கு  கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டத்தில் கட்டுரைப் படைக்க வேண்டும். அடுத்து ஒரு காணொளியைத் தயாரிக்க வேண்டும்.  மூன்றாவதாக, தன்னுடைய விண்வெளிக் கல்விப் பயணம் தொடர்பான ஆதரவு நிலையை நிரூபிக்க வேண்டும். நிறைவாக நேர்காணம் இடம்பெறும்.

பல கட்டங்களில் தேக்க நிலையை எதிர்கொண்டாலும் சளைக்காத வான்மித்தா இடையிடையில் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார்.

இருந்தபோதும் இவரின் ஜெர்மன் நாட்டு வழிகாட்டி எலிதெரியோஸ், மலேசிய விண்வெளி வீராங்கனை வனஜா, விரிவுரையாளர் முனைவர் பிரேமா ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை; பெற்றோர், அண்ணன்கள், அண்ணி, நண்பர்கள் ஆகியோரின்  ஆதரவைப் பெற்று தற்பொழுது இந்த நிலையை எட்டி இருக்கிறார்.

இதன் தொடர்பில்தான் இப்பொழுது நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கான முடிவு மூன்று மாதங்களுக்குப் பின் தெரியவரும். அப்போதுதான், மலேசியத் திருநாட்டின் கொடியை விண்வெளியில் நாட்ட வேண்டும் என்னும் தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்கான கல்வியையும் பயிற்சியையும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறாரா என்ற விவரம் தெரியவரும்.

நக்கீரன் – Nakkeeran  013-244 36 24