LOADING

Type to search

அரசியல்

ராஜபக்ச உள்ளிட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் வேல்முருகன்

Share

சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணை போகக்கூடாது என்றும் கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46-வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இக்கூட்டத்தில், இலங்கை அரசால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பு போர் குறித்த அறிக்கை, மனித உரிமை மீறல்கள் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் நடைபெறவுள்ளது. குறிப்பாக, பிரிட்டன், ஜொ்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து, சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் நிகழ்ந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை இலங்கையின் உள்நாட்டுச் சிக்கல் என்று கூறி, சிங்கள பேரினவாத அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஐ.நா கூட்டத்தொடரில் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்திய அரசிடம், சிங்கள பேரினவாத அரசு அவசர கோரிக்கையினை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு அரசு இந்தியா அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மனித உரிமைக் குற்றச்சாட்டு விவகாரத்தில் இலங்கைக்கு முதலில் ஆதரவு அளித்த நாடு இந்தியா என்றும் அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கக் கூடாது என்றும் இனப்படுகொலை தொடர்பான குற்ற விசாரணையை பன்னாட்டு அரங்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். ஐ.நா. மேற்பார்வையில் தனி ஈழம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை நிறைவேற்ற, மோடி அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.