மன்னார் துள்ளுக்குடியிருப்பில் பிரதான வீதியை அண்மித்த தொழிற்சாலையினால் மக்களுக்கு அசௌகரியம்
Share
இது வரை தீர்வு இல்லை என மக்கள் விசனம்
(மன்னார் நிருபர்)
(02-03-2021)
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் பிரதான வீதியை அண்மித்து அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் தொழிற்சாலையின் காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதும் இது வரை உரிய தீர்வு கிடைக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவித்துளள்னர்.
குறித்த தொழிற்சாலையின் காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளி,நிலம்,நீர் என்பன இப்பகுதியில் பெருமளவில் மாசடைந்து வருகின்றது.
நீண்ட காலமாக இப்பகுதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறித்த தொழிற்சாலை வீதி ஊடாக பிரதான வீதியில் பயணிக்கின்ற சகலரும் சில நிமிடங்கள் துர்நாற்றம் காரணமாக மூச்சுத்திணறல்,வாந்தி போன்ற உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பாடசாலை செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்குச் செல்கின்றவர்களும், குறித்த வீதியூடாக பேரூந்துகளில் பயணிப்பவர்களும் குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை கடப்பது என்பது பெரும் அச்சுரூத்தலாக உள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மூக்கை பொத்திக் கொண்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குறித்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர் நாற்றம் காரணமாக நோயளர்கள், கர்ப்பிணிகள் , சிறுவர்கள் போன்றோர் அதிகம் பாதீக்கப்படுகின்றனர்.
-குறித்த தொழிற்சாலையினால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பாக பல வருடங்களாக உரிய தரப்பினரிற்கு தெரியப்படுத்தியும் இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
-குறிப்பாக குறித்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக குறித்த பகுதியில் ஏற்படுகின்ற சூழல் பாதீப்பு தொடர்பாக மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபை, வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,மன்னார் பிரதேசச் செயலாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமது கோரிக்கைகளை கீளியன் குடியிருப்பு பங்கு மேய்ப்புச் சபை ஊடாக மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனினும் குறித்த பிரச்சினைக்கு இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம் பெற உள்ள நிலையில் குறித்த தொழிற்சாலையினால் ஏற்படும் பாதீப்புகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.என பாதீக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.