LOADING

Type to search

கதிரோட்டடம்

புகலிடம் நாடி வருவோரை புன்னகையுடன் வரவேற்று வாழ்வு தந்த முத்தான முதல்நாடு கனடா தான்!

Share

கதிரோட்டம்   16-04-2021

கடுமையான குளிர் காரணமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் குடியேற விரும்பாத ஒரு நாடாக விளங்கிய கனடா என்னும் அற்புதமான நாடு தற்போது உலகெங்கும் வாழும் மக்கள் விருப்பத்துடன் வந்து விடத் துடிக்கும் நாடாக விளங்குகின்றது.

உலகில் வேறு நாடுகளில் இனரீதியாகவும் பால் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் நிறங்களின் அடிப்படையிலும் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அந்தந்த நாடுகளிலிருந்து வெளியேறி, வேறு நாடுகளை நோக்கி பயணங்களை மேற்கொண்டால், முதலில் அவர்களை அடையாளம் கண்டு, அபயம் அளித்து வரவேற்கும் நாடாக கனடா தேசம் பல ஆண்டுகளாக முதலிடத்தில் தன்னை தக்கவைத்துள்ளது.

இவ்வாறாக ஈழத்தமிழர்களாகிய இலட்சக் கணக்கானவர்கள் தற்போது கனடாவை தங்கள் இரண்டாவது தாயகமாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றார்கள். எந்த நாட்டில் வாழ முடியாது என்று எமது மக்கள் கனடாவிற்குள் நுழைந்தார்களோ, அந்த நாட்டு அரசாங்கங்கள் வியக்கும் வண்ணம் ஈழத்தமிழ் மக்கள் இங்கு பல்வேறு தளங்களில் உயர்ந்து நிற்கின்றனர். இது போலவே உலகில் ஏனைய பல நாடுகளிலிருந்தும் கனடாவிற்கு புகலிடம் தேடி வந்தவர்கள் தற்போது இந்த சுதந்திரமான தேசத்தில் புன்னகை மலரும் முகங்களோடு வீதிகளில் வலம் வருகின்றார்கள்.

பல காரணங்கள் நிமித்தம், உலகின் வேறு நாடுகளில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வாழ முடியாமல் அந்த நாடுகளிலிருந்து வெளியேறி, கனடாவை நோக்கி பயணித்தவர்கள் தகுந்த முறையில் வரவேற்கப்பட்டு உள்வாங்கப்பெற்று பின்னர் கனடாவின் பிரஜைகளாகவே மாறிவிட்டார்கள்.

ஆனாலும், அகதிகளாக வருபவர்கள் அனைவருமே இந்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்பவர்களாக இருப்பதில்லை. குற்றச் செயல்கள், போதை வஸ்த்து கடத்தல், பாலியல் குற்றங்கள், அரசின் சலுகைகளை துஸ்பிரயோகம் செய்தல் போன்ற குற்றச் செயல்களினால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்த விடயங்களை அமெரிக்காவும் கனடாவும் இணைந்து கவனித்து நடவடிக்கைகளை எடுத்து வந்தன.

ஆனால் காலப் போக்கில் அமெரிக்கா ஊடாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் புகலிடம் கோருவோரைத் திருப்பி அமெரிக்காவிற்கே அனுப்புவதற்காக ஒட்டாவாவிற்கும் வாசிங்டனுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தை மீறுவதில்லை எனவும் அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் கனடாவின் மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் நீண்ட காலமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாக ஜூலை மாதம் அறிவித்தபோது கனடிய பெடரல் நீதிமன்றம் சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டதாக வாதிட்ட மத்திய அரசின் மேல்முறையீட்டை நீதிமன்றம் அனுமதித்தது. இதனால் கனடாவில் தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள் தடுமாறிய வண்ணம் உள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, கனேடிய அகதிகள் சட்டத்தரணிகள் பலர் இந்த அமெரிக்க கனடிய புகலிடம் ஒப்பந்தத்தை தீவிரமாக எதிர்த்துப் போராடி வருகின்றனர், அத்தடன்

தங்கள் நாடுகளிலிருந்து துன்புறுத்தலிலிருந்து தப்பி அடைக்கலம் தேடிவரும் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் ஒரு பாதுகாப்பான நாடு அல்ல என்றும் இந்த வகையில் கடனாவே சிறந்த நாடு என்றும் வாதிடுகின்றனர். இவ்வாறாக கனடிய அகதிகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகளே கேள்விகளை எழுப்பும் சட்டம் தொடர்பாக கனடா எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகின்றது என்பதையும் இங்கு புகலிடம் கோரி வருபவர்கள் சந்திக்கவுள்ள பிரச்சனைகள் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள சில காலம் காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை.