LOADING

Type to search

மலேசிய அரசியல்

தமிழ் வானொலிக்கு புதுப்பாட்டை வகுத்தவர் – இரா. பாலகிருஷ்ணன்

Share

-நக்கீரன் (மலேசியா)

அங்காசாபுரி வட்டத்தில் ‘பாலா சார்’, ‘பாலா சார்’ என்று அன்பும் மரியாதையும் கலந்து அழைக்கப்பட்ட இரா.பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் நாளிதழ் வட்டத்தில் ‘ரேடியோ பாலா’ என்றும் ‘ஆர்டிஎம் பாலா’ என்றும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவர்.

ஒரு சிற்பி, சிலையை செதுக்குவதைப் போல மலேசிய அரச வானொலியான ஆர்.டி.எம். மின்னல் பண்பலை வானொலியை பார்த்துப் பார்த்து செப்பம் செய்த இரா. பாலகிருஷ்ணன், தன்னை அறிந்தவர்களும் தெரிந்தவர்களும் ‘ரேடியோ பாலா’ என்று அழைப்பதை ஏதோ ‘டத்தோ பாலா’ என்றும் ‘டான்ஸ்ரீ பாலா” என்றும் அழைப்பதைப் போல பெருமிதமாக எண்ணிக் கொள்வார். அந்த அளவிற்கு மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பு சேவையுடன் தன்னை ஒன்றென ஐக்கியப்படுத்திக் கொண்டவர், அவர்.

அந்த நல்ல மனிதருக்கு மேத் திங்கள் 25-ஆம் நாள் நினைவு நாள்.

அரச வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்ட காலத்தில் ஆங்கிலச் சொற்களையும் கிரந்த(சமற்கிருத) சொற்களையும் தவிர்த்து நல்ல தமிழில் உரையாட ஒலிபரப்பாளர்களை ஊக்குவித்தார். சிற்சில வேளைகளில் கண்டிப்பும் காட்டினார்.

1960-ஆம் ஆண்டில் மலேசிய அரச வானொலியில் நிகழ்ச்சி உதவியாளராக பணியில் அமர்ந்த இரா. பாலகிருஷ்ணன், அதே காலக் கட்டத்தில் மலாயாப் பல்கலைக்கழத்தின் தமிழ்ப் பிரிவில் விரிவுரையாளராகவும் சுமார் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தார்.

வானொலி நிலைய தலைமைப் பொறுப்பிற்கு படிப்படியாக உயர்ந்தவரில்லை பாலா; சட்டென அந்நிலையை எட்டிய அவர், பட்டென புதுப்புது பாங்கை வானொலி நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்தார்.

அந்த அளவிற்கு நிருவாக ஆற்றல், தமிழ் மொழி மீதான அக்கறை, சமுதாய ஈடுபாடு, அரசாங்கத்திற்கான கடப்பாடு உள்ளிட்ட அத்தனை பண்பு நலன்களையும் ஒருங்கேக் கொண்டிருந்தவர் இரா. பாலகிருஷ்ணன்.

இவர், தலைவராக இருந்த காலத்தில் பணியாற்றிய அறிவிப்பாளர்களும் ஏனைய பணியாளர்களும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவிற்கு செயல்பட்டனர். அதற்கு ஏற்ப நல்ல அறிவிப்பாளர்களையும் சிறந்த பணியாளர்களையும் அடையாளம் கண்டவர் இரா.பாலகிருஷ்ணன்.

மன்னராட்சி காலத்தில், புதிதாக வேலை தேடிச் செல்லும் இளஞ்சிற்பியரை பணிக்கு அமர்த்தும் முன், அவர்களிடம் ஒரு சில பாறைக் கற்கள் மாதிரியாகக் காண்பிக்கப்படும். அதைத் தங்களின் வசமுள்ள உளியால் தட்டித்தட்டிப் பார்த்துவிட்டு,

*இந்தக் கல் சிற்பம் செதுக்கும் அளவுக்கு பக்குவம் அடையவில்லை;*

*இந்தப் பாறை பிஞ்சுப் பாறையாதலால் படிக்கட்டிற்குத்தான் லாயக்கு;*

*இந்தக் கல்லில் தூண் செதுக்கலாம்; நன்கு முற்றிய பாறையாக உள்ளது:*

என்றெல்லாம் இளம் சிற்பியர் வெளிப்பட்டுத்தும் பட்டறிவை வைத்து ஆஸ்தான சிற்பி அவர்களை பணிக்கு அமர்த்துவது வழக்கம்.

அதைப்போல, வானொலி நிலையத்திற்கும் புதிதாக வருவோரை எழுதவைத்தும் பேச வைத்தும் அவரவரின் தமிழறிவு, குரல் வளம், உச்சரிப்பு ஆகியவறைக் கருத்திற்கொண்டு பணியில் சேர்ப்பது பாலாவிற்கு வழக்கம்.

கூடுமானவரை ஒருவரையும் தட்டிக்கழிக்க மாட்டார். குறைகளை சுட்டிக்காட்டியும் நிறைகளையும் மெச்சியும் அணைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு கொண்டவர் இரா. பால கிருஷ்ணன், ஏராளமான கலைஞர்களுக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு வானொலியில் வாய்ப்பு தந்தார். குறிப்பாக, எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகில் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிவரும் ஒரே வானொலி நிலையம் மலேசிய அரச வானொலிதான். இதன் தொடர்பில் ரேடியோ பாலா ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு, ஆசிய – பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகத்தின் தலைவராக இரா. பாலகிருஷ்ணனை நியமித்து அவரை பெருமைப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் இயக்கத்தின் மேநாள் தலைவர்களான துன்.வீ.திருஞான சம்பந்தன், டான்ஸ்ரீ வெ. மாணிக்க வாசகம், மேநாள் துணைத் தலைவரான ‘மக்கள் தலைவர்’ டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியன், மேநாள் உதவித் தலைவரான டத்தோ கு.பத்மநாதன் ஆகியோருடன் அணுக்கமாக நட்பு பாராட்டிய இரா. பாலகிருஷ்ணன் பத்திரிகைத் துறை ஜாம்பவானான ஆதி.குமணன், டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியன் ஆகியோருடன் இணைந்து மலேசியத் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு தூணாகத் திகழ்ந்தவர்.

அரச வானொலியின் தமிழ்ப் பிரிவிற்கு நிர்வாகத் தலைவராக உயர்ந்த பின் அது மறுமலர்ச்சி காண்பதற்கு பலவகையாலும் தன் பங்களிப்பை ஆற்றிய ‘ரேடியொ பாலா’ என்னும் இரா. பாலகிருஷ்னன், மலேசியத் தமிழ் வானொலி நேயர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர் என்பது திண்ணம்.