எங்கள் ‘வசந்தம்’ ஓய்வு பெற்றது
Share
சிந்தனைப் பூக்கள் பத்மநாதன்- கனடா
‘வசந்தன்’ என நாம் அனைவரும் அன்போடு அழைக்கும் எங்கள் அற்புதமான அன்பர் கலாநிதி வசந்தகுமார் காலமானார் என்ற செய்திகேட்டு என் இதயன் ஒரு தடவை நின்று போனது. தமிழ்ர் சமூகத்தின் வழிகாட்டியாகவும், கல்வி மேம்பாட்டாளராகவும்.பிரதான செயலூக்கியாகவும் விளங்கிய எங்கள் ‘வசந்தன்’ எம்மையெல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு ஓய்வு பெற்றார்.
நெருநல் உளளொருவன் இனறில்லை என்றும் பெருமையுடைத்து இவ்வுலகு என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளிற்கு இணங்க அவர் இல்லை என்பதை எமது மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
வசந்தன் எனக்கொரு அரிய நண்பராக விளங்கினார். அவர் உருவாக்கிய ‘கொம்புயுரெக்’ கல்லூரியுடன் நான் பல தடவைகள் தொடர்பு கொண்டதன் மூலம் கிடைத்த நட்பு இறுதிவரை நீடித்தது. இன்று அந்த நட்பு என்னோடு தங்கியிருக்கின்றது. ஆனால் வசந்தன் என்ற நல்லுள்ளம் நீண்ட தூரம் போய்விட்டது.
புலம்பெயர்ந்து வந்த தமிழ் இளையோர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியவர் வசந்தகுமார் அவர்கள். கொன்பியுரெக் கல்லூரியின் வளாகங்கள் சிலவற்றை நிறுவி, எமது இளையோருக்கு கணணி அறிவினை ஊட்டியவர். அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர் மட்டுமல்ல, எமது சமூகத்தின் கல்விக் கண்களாக விளங்கியவர். இதனால் எமது இளையோர்கள் தொழில் வாய்ப்பு பெற்று கணணித்துறையில் முன்னேற்றங்களைக் காண அவர் தனது முழுக்கவனத்தையும் மூலதனாமாக்கி பாடுபட்டார்.
இலங்கையின் வட பகுதியில் உள்ள உடுப்பிட்டி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட வசந்தகுமார் அவர்கள் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் உயர் கல்லூரியில் கல்வி கற்று வரும் காலத்தில் கல்வியில் மட்டுமல்ல சிறந்த மாணவர் தலைவராகவும் சாரணர் இயக்கத்தின் தீவிரமான உறுப்பினராகவும் விளங்கினார்.
தனது கல்வியில் கவனஞ் செலுத்திய காரணத்தால், இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்திற்கு அனுமதி பெற்று அங்கு மின்பொறியியலாளராகப் பட்டம் பெற்று வெளியேறினார்.
தொடர்ந்து இலங்கை மின்சார சபையில் மாவட்ட பொறியியலாளர் தரம் வரையில் உயர்வு பெற்று விளங்கினார்.
கனடாவிற்கு வந்த பின்னர் யோர்க் பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளரானார். கனடாவில் அவர் சமூக சேவைக்கு உதாரணமாக விளங்கி வருவது ‘சேக்கம்’ என்னும் சேவை வழங்கும் அமைப்பாகும். இந்த அமைப்பை ஆரம்பித்து அதனை வளரச் செய்வதில் வசந்தகுமார் அவர்கள் ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்களோடு கடுமையாக உழைத்தார். பல ஆண்டுகள் ‘சேக்கம்’ அமைப்பின் தலைவராகவும் கடமையாற்றிய வசந்தன் அதன் மூலம் பல சமூகப் பணிகளைச் செய்தார்.
வசந்தகுமார் அவர்களது முக்கிய சமூகப் பணிகளில் ஒன்று அவர் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தோடு இணைந்து பணியாற்றியதோடு மட்டுமன்றி, அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். ஆலோசனைகளை வழங்குவது மட்டுமன்றி, தனது நிதிப்பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளார்.
மேற்படி கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கம் மறைந்த வசந்தகுமார் தொடர்பாக பின்வருமாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
“நான் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பெற்ற நாட்தொடக்கம் எனக்கும் எமது சம்மேளனத்திற்கும் ஒரு விசுவாசமிக்க நண்பராகவும் ஆதரவாளராகவும் விளங்கியவர் மறைந்த திரு வசந்தகுமார் அவர்கள். எனது சகல முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து என்னால் பலவற்றை சாதிக்கக் கூடிய வகையில் ஆலோசனைகள் வழங்கி நின்றார் அவர். தற்போது எமது சம்மேளனம் சொந்தமாகக் கொள்வனவு செய்துள்ள கட்டடத்தின் முழு அம்சங்களிலும் அவருடைய பங்களிப்பு இருந்தது என்பதை மிகுந்த பெருமையோடு கூறிக்கொள்கின்றேன்” என்றார்
எமது சமூகத்தில் பலரது அரசியல் பிரவேசத்தின் போது அவர்களுக்கு அருகில் எந்நேரமும் இருந்த வண்ணம், ஆலோசனைகளை வழங்கி நின்றவர் எங்கள் ‘வசந்தன்’ அவர்கள். இவ்வாறு எமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் முன்னின்று உழைத்து தனி நபர்களைக் கூட உயரத்திற்குக் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் எங்கள் வசந்தன் அவர்கள் என்றால் அது மிகையாகாது.