அசல் ‘கலாநிதி’ ஒருவரை எம்மிடமிருந்து அநியாயமாகப் பறித்தானே எமன்!
Share
18-06-2021 கதிரோட்டம்
கனடிய தமிழர் சமூகத்தின் தூண்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் திடீரெனச் சரிந்தது. கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அனைவரும் முடங்கிப் போயிருந்த வேளையில் எமன் என்னும் கொடியவன் எப்படி நுழைந்தான் எங்கள் கோட்டைக்குள் என்று துயரத்தோடும் கோபத்தோடும் கேட்கத் தோன்றுகின்றது.
கனடிய தமிழ்ச் சமூகம் என்னும் கொட்டகையின் ஒரு தூணாகத் திகழ்ந்தவரை ஏன் நாம் இழக்க நேரிட்டது? அவர் எம்மை விட்டு நீங்கி தொலை தூரம் சென்றுவிட்டார் என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. இதுவரையில் எமக்கு ஊக்கியாக இருந்தவரை ஒருவன் தூக்கிச் சென்றுவிட்டானே என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமலும் தாங்கிக் கொள்ள முடியாமலும் அழுகின்ற ஆயிரம் ஆயிரம் இதயங்கள் எம்மைச் சுற்றி இருப்பதைக் காண்கின்றேம்.
உலகெங்கும் தரங்குன்றாத நண்பர்களைக் கொண்டிருந்த ஒரு தாராளவாதியை இழந்தவர்களாய் நண்பர்கள் பலர் அனைத்து நாடுகளிலிருந்தும் கனடாவைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளார்கள்.
ஆமாம்! எம் மத்தியில் வாழ்ந்து வரலாறு படைத்திட்ட அசல் ‘கலாநிதி’ த. வசந்தகுமார் இயற்கையெய்தினார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் ‘இடியோசை’ போன்று எம் காதுகளில் வந்து விழுந்தது. என்ன அவசரம் இவருக்கு என்று ஏக்கத்துடன் நாம் அதிர்ச்சியுற்றவராய் அங்கலாய்த்தோம். எப்போதும் சிரித்தும் சிந்தித்தும் பொறுப்புடன் பணிகளை ஏற்று அவற்றை நிறைவேற்றும் ஒரு வெற்றியாளன் எப்படி கவர்ந்து சென்றவனிடம் தோல்வியுற்றார் என்ற கேள்விகள் எழுப்பியவர்கள் இன்னும் ஆயிரம் பேர்.
கனடாவில் வாழ்ந்தாலும் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரி பழைய மாணவர்களோடு தொடர்புகளைப் பேணியவண்ணம் தங்கள் அனைவரும் கல்விச் செல்வத்தை தந்த கல்லூரியின் வளர்ச்சிக்காய் தன்னை அர்ப்பணித்த ஒரு ‘அற்புதன்’ கலாநிதி வசந்தகுமார் அவர்களின் இழப்பு இன்று உலகளவில் பலரை உருக்கிவிட்ட ஒன்றாய் அமைந்துவிட்டது.
ஒரு மின்சாரப் பொறியியலாளராய் பட்டம் பெற்று தாயகத்தில் பல உயர் பதவிகளை வகித்தும் பின்னர் கனடாவில் குடியேறி தன்னால் இயன்றளவில் கல்வித் தரத்தை அதிகரித்து அதே தொழில்நுட்ப பொறியியல் கல்வியை மற்றவர்களுக்கும் ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கணணித் தொழில் நுட்பத்தை போதிக்கும் ‘கொம்பியுரெக்’ கல்லூரியை ஆரம்பித்து அதிலும் வெற்றி கண்டு சில வளாகங்களையும் நிறுவியவர் நெஞ்சுறுதி கொண்ட கலாநிதி வசந்தகுமார் அவர்கள்.
பல சமூக அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், தொழிற் ஸ்தாபனங்கள், முன்னணி சேவை நிறுவனங்கள் என எமது சமூகம் சார்ந்த அனைத்து தளங்களிலும் தெளிந்த மனதோடு தோள் கொடுத்து உதவியவர்தான் நாம் பிரிந்து தவிக்கும் கலாநிதி வசந்தகுமார் அவர்கள். அவரது வாழ்வு எமக்கு ஒரு வரலாறாகட்டும்இ அவரிடம் நாம் கேட்டறிந்தவை சிறந்த பாடங்களாக எம் மனதில் பதியட்டும், அவரிடம் நாம் அவதானித்த நற்பண்புகள், எமக்கு வழிகாட்டும் நெறிகளாக அமையட்டும்.
அமரர் த. வசந்தகுமார் பற்றிய பல ஆக்கங்கள்இ இவ்வார ‘உதயன்’ பக்கங்களில், கனத்த இதயங்களினால் வடிக்கப்பெற்று வாசகர்களாகிய உங்கள் பார்வைக்காக படைக்கப்பெறுகின்றன.
அன்னாராது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், மேலும் அவரை இழந்து தவிக்கும் நண்பர்கள் அன்பர்கள் அனைவரோடும் எமது ஆறுதலைப் பகிர்ந்து கொள்கின்றோம்.