ஒப்பற்ற நவீன கண்டுபிடிப்புக்கள் நம்மூரின் ஓலைக் குடிசைகளிலும் இடம் பெறுகின்றன
Share
02-07-2021 கதிரோட்டம்
முன்னைய காலங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் நிகழ்ந்துள்ளன. அங்கு கூட ஏழைக் குடும்பங்களில் பிறந்து அறிவுபூர்வமாகச் சிந்தித்தவர்கள் மனித குலத்தின் நன்மைக்காக பல அரிய கருவிகளைப் படைத்துச் சென்றுள்ளனர். உதாரணமாக மின்சாரம், வானொலிப் பெட்டி தொலைபேசி, மோட்டார் இயந்திரம் போன்றவை இவற்றுக்கு நல்ல உதாரணங்கள் ஆவன.
இற்றைக்கு கால் நூற்றாண்டுக்கு உட்பகுதியில் தென்னாசிய நாடுகளிலிருந்து மேற்குலக நாடுகளுக்குச் சென்ற ஏழை நாடுகளில் பிறந்தவர்கள் கூட தங்கள் அறிவுத் திறனால், பல அரிய கண்டுபிடிப்புக்களை எமது தந்தவண்ணம் உள்ளார்கள்.
இதற்கு மேலாக அண்மைக்காலமாக தமிழர்கள் நாங்கள் பெருமைப்படுமளவிற்கு எமது தாய் மண்ணிலும் பல மாணவ மாணவிகள் பல அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் மூலம் சிறிய கருவிகளை எமது சமூகத்திற்கு அளித்துள்ளனர். அவற்றுள் பல இலங்கை அரசின் கீழ் உள்ள தொழில் நுட்ப கழகங்களினாலும் அங்கீகரிக்கப்பெற்றுள்ளன. எமது மண்ணின் இளம் மாணவ மணிகள் தங்கள் ஏழ்மையின் மத்தியிலும் பல கல்வியிலும் கண்டுபிடிப்புக்களிலும் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்
இந்த வரிசையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் கொரோனாவின் தாக்கத்தால் வீட்டுக்குள்ளே தங்கியிருக்கும் சில அறிவுத் தேடல் உள்ள எமது மாணவர்கள் தங்கள் சிறிய வீடுகளுக்குள்ளேயும் நவீன கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி உலகெங்கும் அறியப்பட்டவர்களாக வலம் வருகின்றார்கள்.
நமது மண்ணின் சிறந்த கல்விக் கூடமாக அன்றும் இன்றும் என்றும் விளங்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையாக நாம் பயன்படுத்தக் கூடிய புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவரது mSQUAD என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது.
சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாணத்தில் அமுலில் இருந்த பயணத் தடையை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்து அதனை பயன்பாட்டிற்குக்கு கொண்டுவந்துள்ளார் என்பதை அறியும் போது “ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்” என்ற சுப்பிரமணிய பாரதியாரின் நம்பிக்கை தரும் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகின்றது
மிகத் துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடா உலகின் எந்தப் பகுதியிலும் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமென்பதுடன் இந்த செயலி வேகம் அதிகம் கொண்டதாகவும் பாவனையின் மூலம் உணர்த்தியுள்ளது
எனவே இந்த நாட்களின் வெற்றியாளனாகத் திகழும் எம் ‘தம்பி’ நக்கீரன் மகிழினியன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வோமாக!