LOADING

Type to search

மலேசிய அரசியல்

கொரோனாவினால் இறப்போரின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி தாமதிக்காமல் கிடைக்க வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்

Share

-நக்கீரன்

கிள்ளான், ஜூலை 15:

கோவிட்-19 ஆட்கொல்லி கிருமியின் தாக்கத்திற்கு ஆளாகுவோரின் அல்லலும் கோவிட்-ஆல் இறப்பவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பலவாறான துயரமும் சொல்லி முடியாதவை. பொருளாதார சிக்கலுக்கும் மன அழுத்தத்திற்கும் பாசப் போராட்டத்திற்கும் ஆளாகும் அத்தகைய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூக நல உதவித் தொகை உரிய நேரத்தில் கிடைத்தால் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்று சிலாங்கூர் மாநிலம், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜி. குணராஜா தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பினால் இறப்போரின் குடும்பங்களுக்கு மத்தியக் கூட்டரசு சார்பில் 5,000 வெள்ளியும் சிலாங்கூர் மாநில அரசு மூலம் 1,000 வெள்ளியும் வழங்கப்படுகின்றன. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யவோ அல்லது எரியூட்டவோ மயானத்திற்கு எடுத்துச் செல்லும் முன், சம்பந்தப்பட்டவரின் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் இரண்டு பேர் மருத்துவமனைக்கு வருகைதரும்போது, இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் மருத்துவமனை அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன.

அத்தகைய விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பியபின், அரசாங்க அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கியதற்குப் பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை வந்துசேர மாதக் கணக்கில் ஆகிறது. மாறாக, இந்த உதவித் தொகை உடனே கிடைத்தால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உதவியாக இருக்கும். ஏற்கெனவே குடும்ப உறுப்பினர் இறந்துவிட்ட சோகத்தில் இருக்கும் அவர்கள் நல்லடக்க செலவுத் தொகைக்காக அந்த நேரத்தில் அங்குமிங்கும் அலைய வேண்டிய நெருக்கடியும் ஏற்படாது.

நாட்டில் அமல்படுத்தப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் மலேசிய குடும்பங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக வருமான பாதிப்பிற்கும் வேலை இழப்பிற்கும் ஆளாகியுள்ள நிலையில், குறிப்பாக ‘பி-40’ என்று வகைப்படுத்தப்பட்ட நலிந்த குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்கும் இந்த நேரத்தில், குடும்பத்தில் இறப்பு நேர்ந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய பொருளாதார சிக்கலால், பொதுவாக அனைத்து மக்களும் பரிதவிக்கின்ற நிலையில் எத்தனையோ குடும்பங்கள் கொரோனாவினால் இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரை உடனே தகனம் செய்ய முடியாமல் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். இந்த வேளையில், இறந்தவர்களின் உடலை எரிக்கவோ அலல்து அடக்கம் செய்யவோ எடுத்துச்செல்லும் வாகன சேவை வழங்குவோரும் ஒருசில இடங்களில் அதிகக் கட்டணம் விதிப்பதாகத் தெரிகிறது.

அவர்களுக்கும் சுகாதார பாதுகாப்புக் கவச உடைகளைப் பயன்படுத்துவது, வாகனங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்வது போன்ற புதுவகை செலவு ஏற்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.

இஸ்லாமிய குடும்ப உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இறக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் இஸ்லாமிய நல வாரியத்தின் மூலம் அணுகூலமும் உதவியும் கிடைக்கிறது. ஆனால், இந்திய, சீன குடும்பங்களுக்கு அதுபோன்ற உதவி எதுவும் கிடைப்பதில்லை.

எனவே, ஏழை மற்றும் நலிந்த குடும்பங்கள் இதுபோன்ற சிக்கலில் இருந்து விடுபடும் வகையில், மருத்துவமனையிலேயே ‘பேனல்’ போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சுகாதார மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகளை நியமித்து, கொரோனா நச்சிலால் பாதிக்கப்பட்டு இறப்போரின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையை உடனே வழங்குவது பற்றி விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்) கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான திரு.குணராஜா மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், கோவிட்-19 நச்சுயிரியின் தாக்கத்திற்கு ஆளாகி இறப்போரின் குடும்பங்கள் நிலைகுத்தி நிற்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

கணவனுக்கு பாதிப்பு என்றால் மனைவிக்கு நெருக்கடி; அதைப்போல மனைவிக்கு தொற்று என்றால் கணவருக்கு பெரும்பாதிப்பு; அத்துடன் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்துதலுக்கு ஆளாகி பாசப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட வேளையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இறக்க நேர்ந்தால் குடும்ப உறுப்பினர்கள் முகத்தைக்கூட பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை. இது, ஒட்டிப் பிறந்தவர்களை வெட்டிப் பிரிப்பதைவிட கொடுமையானது.

நெருக்கடியான இத்தகைய நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித் தொகைக்கு மாதக்கணக்கில் காத்திருப்பதை தவிர்த்தால், அது பாதிப்பிற்கு ஆளான குடும்பங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் வழங்கும் என்பதை மக்கள் பிரதிநிதி என்னும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.