மலேசிய அரசியலும் பிணப்பெட்டியும்!
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 23:
ஒரு மனிதனின் கடைசிப் பயணம் என்றால், அது சம்பந்தப்பட்டவரின் பிண ஊர்வலமாகத்தான் இருக்கும். இந்த ஊர்வலத்தைக் கண்டால் பொதுவாக மனித மனம் துணுக்குறும் என்பதால், ‘பிண ஊர்வலத்தைக் கண்டால் நல்லது நடக்கும்’ என்று எவரொ எங்கோ போகிற போக்கில் ஓர் ஆறுதல் மொழியாக சொல்லி வைக்க, அதை உண்மை என்று இன்னமும் நம்பி ஆறுதல் பெறும் தமிழர்கள் அநேகம் பேர்.
இவ்வாறான பிண ஊர்வலத்தைக் கண்டு பயந்து, அரண்டு, மிரண்ட ஒருவரின் வாழ்க்கை சுவாரசியமும் திருப்பம் நிறைந்தது. மரணம் என்பது என் வாழ்விலும் நேருமா? இதிலிருந்து நான் தப்பிக்க முடியாதா? நான்தான் அரண்மனைவாசி ஆயிற்றே? அதுவும் இளவரசனாயிற்றே? இதிலிருந்து தப்பிக்க வழி கிடையாதா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய அந்த இளைஞருக்கு உடனிருந்த அந்தக்கால அமைச்சர் மாய்ந்து மாய்ந்து அளித்த பதிலும் விளக்கமும் பயனற்றுப் போயின.
முடிவு.. ., அரண்மனை வாழ்க்கையையேத் துறந்து மனைவி, மகனையும் பிரிந்து, தன்னந்தனியனாக அலைந்து, திரிந்து, மெலிந்து, சோர்ந்து, ஓய்ந்து கடைசியில் இளைஞர் என்னும் கட்டத்தையும் கடந்து நிறைவாக அமர்ந்தார் ஒரு மரத்தின்கீழ்; அவர்தான் புத்தர்.
அப்படிப்பட்டவர் இம்மை, மறுமை வாழ்வை உணர்ந்து தன் வாழ்க்கையின் நிறைவுக் கட்டத்தை தானே ஊகித்து தன் சீடர்களுக்கும் அறிவித்தபோது, அவருக்கு மரண பயம் அறவே அற்றுப்போயிருந்தது.
பொதுவாக, வாழும்போதில் மரணம் என்பது சகிக்க முடியாத ஒன்றுதான். காரணம் அதன்பிறகு ஒருவரின் வாழ்வில் வெறுமையே மிஞ்சும். இதனால்தான், ஔவை மூதாட்டியும் மரணத்தை கொடுமை என்று வருணித்தார்.
இருந்தபோதும், இந்த மண்ணில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் எதிர்கொள்ள வேண்டிய நிச்சயமான ஒன்றுதான் மரணம். இப்போது, மனித வாழ்க்கையில் மரணமும் வர்த்தகத்திற்குரிய ஓர் அம்சமாக மாறிவிட்டது.
ஆம், பிணப்பெட்டி வர்த்தகம் புரிவோர் தங்களை அறியாமலே எதிர்பார்ப்பது மரண ஓலையைத்தான். அப்படிப்பட்ட பிணப்பெட்டியை ஒரு தலைவர் பொதுமக்களுக்கு பரிசாக அளிக்க முன்வந்தார்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று புரியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதரைப்போல எந்த வாக்குறுதியை அளித்தால் வாக்காளர்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்ற நிதானம் இல்லாமல் 2018 மே 9-ஆம் நாளில் மலேசியாவின் 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஒரு தலைவர், தன் தொகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிணப் பெட்டியைப் பரிசளிப்பதாக(இலவசமாக வழங்குவதாக) வாக்களித்தார்.
வாழ்வதற்கு வழி கேட்டால் சாவதற்கு பாதை சொன்ன அவர் சாதாரண தலைவர் இல்லை. அறுபது ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவந்த அப்போதைய தேசிய முன்னணி அரசின் துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிதான்.
அவரின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான பாகானைச் சேர்ந்த ஓர் இந்திய உள்ளூர் தலைவரும் இதற்கு பிரச்சார களம் அமைத்தார். ஆனால், இதற்கு கடுமையான கண்டனமும் விமர்சனமும் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவருமே பின்வாங்கியதுடன் ஏதேதோ சொல்லி மழுப்பினர்; சமாளித்தனர்.
இப்படி தேர்தல் அரசியலில் பிணப்பெட்டியும் ஒரு சிறிய பங்கு வகித்ததென்றால், கட்சி அரசியலிலும் பிணப்பெட்டி இடம்பெற்ற வரலாறு இங்கு நிகழ்ந்துள்ளது.
அதுவும், மலேசியாவின் மூத்த அரசியல் இயக்கமும் இந்தியர்களின் தாய்க் கட்சியுமான மஇகா(மலேசிய இந்தியர் காங்கிரஸ்)-வில் தேசிய உதவித் தலைவராகப் பொறுப்பு வகித்த டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதனால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வு அது.
மஇகா மேநாள் தலைவரான துன் ச.சாமிவேலுவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பண்டிதன், தமிழ் நாட்டில் எம்ஜிஆரின் கட்சி சின்னமான இரட்டை இலையைப் போல இங்கு மூவிலையை தன் கட்சி சின்னமாகக் கொண்டு இந்திய மக்கள் முன்னணி(ஐபிஎஃப்) என்னும் கட்சியைத் தொடங்கியதுடன் மலேசிய தமிழர்களின் புரட்சித் தலைவராகவும் தன்னை பிரகடம் செய்தார். அதற்கு முன், சாமிவேலுவிற்கு எதிராக போராட்டம் நடத்தியபோதுதான் அவர் கட்சி அலுவலகத்திற்கு பிணப் பெட்டியுடன் வந்தார்.
இவ்வாறாக, மலேசிய அரசியலில் அவ்வப்போது பிணப்பெட்டி தலைகாட்டிய நிலையில், தற்பொழுது கொரோனா பருவத்திலும் பிணப் பெட்டி தன் மூக்கை நுழைத்துள்ளது. உண்மையிலேயே, இது ‘கோவிட்-19 பிணப்பெட்டி’தான்.
கொரோனா ஆட்கொல்லி கிருமியின் பெரும்பரவலால் கடந்த 16 மாதங்களாக வேலை இழப்பையும் வருமான பாதிப்பையும் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் வாழ்க்கை மிகவும் சுமையாக மாறிவிட்டது.
இதில், நலிந்த நிலையில் இருக்கும் இந்திய குடும்பங்களின் நிலைமை சொல்லி மாளாது. பணத்தை தாராளமாக எண்ணியெண்ணி செலவு நாளெல்லாம் போக, இப்போது இது முக்கியமா அல்லது அது அவசியமா என்று எண்ணுவதைவிட எது உடனடித் தேவை என்று எண்ணியெண்ணி நிதானித்து செலவுசெய்ய வேண்டிய காலக்கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன.
இப்படிப்பட்ட நேரத்தில் கொரோனாவினால் மரணம் ஏற்படுகின்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் பொருளாதார சிக்கலை எதிர்கொள்வது ஒருபுறம் இருக்க, பாசப் போராட்டத்தையும் மறுபக்கம் எதிர்நோக்குகின்றனர்.
மருத்துவ மனைக்கு சென்று பார்க்கமுடியவில்லை. இறந்தபின் முகத்தைக்கூட ஒரு முறை பார்த்துவிடலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஒரு குடும்பத்தில் நான்கைந்து பேர் இருந்தாலும்கூட, ஒருவர் அல்லது இருவருக்கு மட்டும் அதுவும் இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் உடலை அடையாளம் காட்டுவதற்கு மட்டுமே வாய்ப்புண்டு.
இந்த நிலையில் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதை முதல் உடலை நல்லடக்கம் செய்வது அல்லது எரிப்பது வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ‘அமரர் ஊர்தி’ வைத்து தொழில் நடத்துவோர் விதிக்கும் கட்டணமும் அதிகரித்துள்ளது. அதற்கான, நியாயமும் அவர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஒரேக் குடும்பத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பினால் இறந்துவிட்டால், நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்ட சிலாங்கூர் மாநில சட்டமன்ற(செந்தோசா தொகுதி) உறுப்பினர் ஜி.குணராஜ், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொவிட்-19 தாக்கத்தினால் இறந்துவிட்டால், அவருக்காக இலவசமாக பிணப்பெட்டியை வழங்குவது பற்றி மாநில மந்திரி பெசார்(முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு அவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது நியாயமான கோரிக்கையாகவும் தெரிகிறது. அடுத்தடுத்த நாட்களில் என்ன நிகழப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.