LOADING

Type to search

கதிரோட்டடம்

சமூகத்தின் நான்காவது சக்தியாக விளங்கும் ஊடகத் தளத்தில் இருபத்தைந்து ஆண்டுகளை உவகையோடு கடக்கின்றோம்

Share

06.08-2021    கதிரோட்டம்

‘எமது ஊடகப் பயணத்தின் இருபத்தைந்தாவது ஆண்டை நாம் கடந்துள்ளோம். இத்தனை ஆண்டுகள் எம் இதழியல் பங்களிப்பு இதயங்களோடு இணைந்தாகவே நகர்ந்துள்ளது. இந்த நீண்ட காலப் பகுதியில் எமது தாயகம், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள், எமது தாய்த் தமிழகமான தென்னிந்தியா ஆகிய தளங்களில் இடைவெளிகள் இல்லாது, தொடர்ச்சியாக பயணித்துள்ளோம். எமது பத்திரிகை சார்ந்தும் கலை இலக்கியம் சம்பந்தமாகவும், மற்றும் அரசியல் சார்ந்த சந்திப்புக்கள் ஆகியவை உள்ளடங்கிய பல பயணங்களை மேற்கொண்டோம். ஆனால் இந்த நெடும்பயணயத்தில் ஆரம்பப் புள்ளி எமது தாயகத்தில் தான் இடப்பெற்றது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனை நாம் இன்றும் மறந்துவிடவில்லை.

ஒரு ஆரோக்கியமான சமூகமாக தெளிந்த சிந்தனையோடு தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களின் தாயகப் பிரசேதங்களில் இனரீதியாக அடக்குமுறைகள் மற்றும் பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட அந்த பிரதேசத்தில் கூட, கலையும் இலக்கியமும், சமூக ஈடுபாடும் மிகவும் கண்ணியமாகவே பேணப்பட்டு வந்தன.

அவ்வாறான ஒரு சூழல் காணப்பட்ட ஒரு நேரத்தில், ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்திருந்த ஒரு காலப்பகுதியில் பிறந்த மண்ணை விட்டு நீங்கி புலம்பெயர்ந்து வந்தபோது, அங்கு நாம் பெற்ற அனுபவங்கள், மற்றும் அன்றைய அரசியலில் உள்ள பாதிப்புக்கள் ஆகியவற்றின் மத்தியில் தாயகமீட்பு என்ற உணர்வோடு போராடுகின்றவர்களில் நாங்கள் அவதானித்த விடயங்கள் ஆகியவை எம்மோடு கூடவே இந்த மண்ணுக்கும் புலம் பெயர்ந்து வந்தன என்பதும் உண்மையே.

ஒரு சீரான சமூகத்தை நாம் அமைத்துக்கொள்வதற்கு பல அளவீடுகள் உள்ளன. ஒரு சீரான வட்டம் ஒன்றை வரைவதற்கோ அன்றி வட்ட வடிவான பொருள் ஒன்றைச் உற்பத்தி செய்தவதற்கோ அளவுகள் என்பவை முக்கியமானவை. ஆரம் அல்லது விட்டம் ஆகியன எவ்வாறு ஒரு சீரான வட்டம் அமைவதற்கு அடிப்படை தரவுகளாக உள்ளனவோ, அதைப்போன்றே நாம் வாழுகின்ற சமூகத்தை சீரானதாக பேணுவதற்கும் பல அளவுகள் இயற்கையாகவே எழுந்து நிற்கின்றன. ஆனால் இவ்வாறான அளவுகளை எமது சமூகம் முழுமையாகப் பயன்படுத்துகின்றதா என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்ட விடயமாகவே கணிக்கப்பெறுகின்றன.

இவ்வாறான சமூகத்தோடு தொடர்புடையதாக உள்ள நல்ல அம்சங்கள் அந்த சமூகத்தின் மத்தியில் தாராளமாகவும் தடையின்றியும் கிட்ட வேண்டும் என்பதை அந்த சமூகம் அங்கத்துவம் வகின்ற நிலப்பரப்பில் உள்ளவர்கள் நிச்சியப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஓரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நேர்மையான அரசியல்வாதிகளும் தலைவர்களும் தேவைப்படுகின்றார்கள். இவ்வாறான நிலையில் ஒரு சமூகத்தில் ஊடகங்களே நான்காவது சக்தியாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதிலிருந்து ஒரு ஊடகத்தின் முக்கியவத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

எனவே ஊடகத்துறையில் ஈடுபடுகின்றவர்கள், தங்களுக்கு நிறையவே சமூகம் சார்ந்த பொறுப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதற்கு மேலாக ஊடக நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்குரிய குழுவாகச் செயற்படும் தன்மை மற்றும் சில ஆரோக்கியமான அம்சங்கள் ஊடகத்தில் செயற்படுகின்றவர்களுக்கு மிகவும் அவசியமானவை. அவற்றை நாம் மிகவும் உணர்வோடு செய்து வருகின்றோம்.

இந்த வகையில், கனடாவில் எமது விருப்பத்திற்கு ஏற்பவே ஊடகத்துறையில் நாம் எம் கால்களை பதித்தோம். தற்போது அதில் முற்காவே இறங்கிவிட்டோம். இங்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கு, எத்தனையோ துறைகள் மற்றும் பிரிவுகள் காணப்படுகின்றன. “வா” வா” என்று அழைத்த வண்ணம் உள்ளன. ஆனால் பெருமளவில் பணம் ஈட்டும் வாய்ப்பு இல்லை என்பதை நாம் நன்கு உணர்ந்து கொண்டாலும் மிகுந்த ஆர்வத்தோடே ஊடகத்துறையில் காலடி எடுத்து வைத்தோம்.

நாம் முன்னர் குறிப்பிட்டது போன்ற ஊடகம் என்பது சமூகத்தோடு தொடர்புடையதான ஒன்றாக உள்ளது என்பதையும் அதுவும் சமூகத்தில் நான்காவது சக்தியாக உள்ள ஊடகத்தின் மூலமாக, நாம் என்மை வளரத்துக் கொள்ள பயன்படுததாமல, சமூகத்திற் நலனிற்காக சமூகத்தின் கண்ணாடியாக செயற்படத் தொடங்கினோம்.

எம்மிடம் இயல்பாகவே இருந்து வந்த சமூக அக்கறை, அரசியல ஆர்வம் மற்றும் பல அம்சங்கள் எம்மை சிரமங்களைத் தாண்டிக்கொண்டு தொடர்ந்து பயணிக்கும் வண்ணம் உற்சாக மூட்டிக்கொண்ட வண்ணம் இருந்தன. இவ்வாறாக, கனடாவில் ஊடகத்துறையில் எதிர்பாராத வகையில் உள்நுழைந்த நாம் அதனை சரியான முறையிலும் சீரான வழியிலும் கொண்டு செலலவேண்டும் என்று தீர்மானத்தை எடுத்துக்கொண்டவர்களாக பயணத்தைத் தொடர்ந்தோம்.

நாம் புலம்பெயர்ந்து, மேற்குலக நாடு ஒன்றில் எமது வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து போன்று, நாம் தேர்ந்தெடுத்த ஊடகம் எமக்கு பல புதிய விடயங்களைக் கற்றுத் தந்தது. ஏற்கெனவே ஒரு அறிவுச் சமூகமாக இருந்த தமிழர்கள் புதிய தேசத்தில் அச்சு ஊடகமாக விளங்கிய எம்மை வரவேற்றார்கள். உற்சாகமளித்தார்கள்.

ஓரு புறத்தில் எமது சமூகம் வளர்ச்சியடைய, அதற்குச் சமாந்தரமாக தமிழர் வர்த்தகச் சமூகம் ஒன்று தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து செல்ல, எம்போன்ற ஊடகங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டியது. அதனால் கனடிய அரசியலிலும் எமது தேவை குறித்து அழைப்புக்கள் வந்தன. எமது சமூகத்தின் அடையாளமாக ஒரு ஆலயமோ அன்றி ஒரு தமிழர் வர்த்தக நிலையம் தோன்றியது போன்றே எம்போன்ற ஊடகங்களும் தமிழர் சமூகத்தின் அடையாளமாகவே மரியாதையோடு பார்க்கப்பெற்றன.

எமது கடந்த இருபத்தைந்து ஆண்டு கால ஓட்டத்தில், சமூகத்திற்கு எம்மாலான பங்களிப்புக்களைச் செய்துள்ளோம். கலை சார்ந்த, வர்த்தகம் தொடர்பான, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைக் கவனிப்பவர்களாக என, பல பிரிவுகளில் எமக்கு பணிகள் காத்திருந்தன.

எமது பத்திரிகை ஆரம்பித்த காலந்தொடங்கி, தற்போது இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் எமது சமூகத்தின் வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. ஆனால் சில விடயங்கள் மனதை நெருடுகின்றவையாக உள்ளன. பல வழிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகத்திலும் பலம் பெயர்ந்த நாடுகளிலும் காணப்படுகின்றபோது, அவர்களுக்கு கைகொடுக்க மிகச் சிலரே முன்வருகின்றனர். இன்னொரு பக்கத்தில் எழுத்தில் வடிக்க முடியாத, இழப்புக்களையும் அழிவுகளையும் கொண்ட எமது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தால் தாயக மண்ணில் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அன்றி போராளிகளுக்கோ உதவிகள் சரியாகக் கிட்டுவதாக இல்லை. அவ்வாறானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வல்லவர்களாக உள்ள பலர் இங்கு மௌனமாகச் செயற்படுகின்றார்கள்.

விடுதலைப் போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து திரட்டப்பெற்ற ஆதரவு மற்றும் உடமைகள் தொடர்பாக தீர்க்கப்படாமல் உள்ள விடயங்கள் நன்றாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும், இவை தொடர்பாக எமது சமூகத்திற்கு இன்னும் சரியான முறையில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் எமது வெள்ளிவிழா ஆண்டில் வேண்டிக் கொள்கின்றோம்.

தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் எமது பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும், ஆதரவைத் தந்த வர்த்தக அன்பர்கள் மற்றும் எமக்கு பல்வேறு வழிகளில் தோள் தந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.