LOADING

Type to search

கதிரோட்டடம்

தலிபான்களின் ஆட்சியும் தமிழீழத்தின் வீழ்ச்சியும்

Share

20-08-2021   கதிரோட்டம்

உலகில் ஆயுதங்களுடன் திரியும் மிகவும் ஆபத்தான மதவாதிகள் என்று கருதப்பட்ட தலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானின் மலரப்போகின்றது என்ற செய்தி வெளியாகி சில நாட்களே ஆகின்றன.

ஆனால் தமிழீழம் என்ற எம் மக்களின் கனவு உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நின்று அரங்கேற்றிய சர்வதேச அரச பயங்கரவாதத்தின் காலடியில் அகப்பட்டும் ஒடுக்கப்பட்டும் போக, இதே தமிழீழக் கனவு, மீண்டும் தமிழர் மனங்களில் துளிர் விட்டுவிடக் கூடாது என்பதில் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் மாத்திரமல்ல எம்மொழி பேசுகின்ற அரசியல்வாதிகளும் அக்கறையும் அவாவும் கொண்டு செயற்படுகின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தலிபான்களுக்கும் கனவுகள் நிறையவே இருந்திருக்கும். ஆனால் அவை தகர்ந்து போகவிடாமல் காத்து நின்று தலிபான்களின் ஆயுத பலம் அழிந்து விடாமல் ஆதரவு வழங்கிய சில நாடுகளைப் போன்றில்லாமல், ‘தமிழீழம்’ என்னும் கனவையும் அந்த வன்னி மண்ணில் தோன்றிய எழுச்சி மிகு காட்சிகளையும் அழித்தொழிக்க உலகின் வல்லரசுகளும் வறுமையில் வாடிய நாடுகளும் கைகோர்த்த வண்ணம் வன்னி மண்ணில் களத்தில் இறங்கிய நாட்களின் வடுக்கள் இன்னும் எம் மனங்களிலிருந்து அழிந்து போகவில்லை.

இவ்வாறான காலப்பகுதியில் தான் தலிபான்களின் கைகளுக்கு ஆப்கானிஸ்த்தான் என்னும் இஸ்லாமிய தேசம் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் ‘கதிரோட்டத்தின்’ தலைப்பை படிப்பவர்கள் “இது என்ன? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளதே” என்று எண்ணலாம். எனினும் 2009ம் ஆண்டு தங்களுக்குள் எதிர்ப்புணர்வு கொண்ட சில நாடுகள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அவர்களின் தமிழ் ஈழம் என்ற கனவையும் அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்குள் இருந்த பகைமையை மறந்து வன்னியின் வான் பரப்பில் வட்டமிட்ட நாட்கள் மீண்டும் எம் மனங்களில் வந்து தாங்க முடியாக கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது, இந்த தலிபான்களின் ஆட்சி அமைந்த செய்திகள் வெளியான பின்னரே என்றால் அது பொய்யல்ல.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை தான் கைது செய்து சிறைகளில் வைத்திருந்த இலங்கை அரசின் காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியவற்றில் பணிபுரிந்தவர்களையே தகுந்த முறையில் பராமரித்தது உபசரித்தது மட்டுமன்றி, அவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது தங்கச் சங்கிலிகள் கூட விடுதலைப் புலிகளால் பரிசாக வழங்கப்பட்டன என்பதெல்லாம் அப்போது தென்னிலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தன.

இந்த செய்திகளுக்கு மாறாக, ஆப்கானிஸ்த்தானில் அமைந்திருந்த மிகவும் உயரமான புத்தர் சிலையை பகிரங்கமாக அறிவித்துவிட்டு தகர்த்து எறிந்தவர்கள் இந்த தலிபான் இயக்கத்தினர். ஊலிகல் இலங்கை உட்பட பல பௌத்தத்தைப் பின்பற்றும் நாடுகள் கண்டனத்தை வெளிப்படுத்தியும் கூட தங்கள் மூர்க்கத் தனமான காரியத்தை தலிபான்கள் அப்போது கைவிடவில்லை

முப்படைகளாம் தரைப்படை, விமானப்படை, கடற்படை என்ற பலத்தோடு இருந்தாலும் மிருகத்தனமாக அப்பாவி மக்களை கொன்றழிக்கும் செயல்களின் விடுதலைப் புலிகளின் தலைமை செயற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. ஆனால் தலிபான்கள் தம் சொந்த நாட்டு பெண்களையே கொலை செய்து வீதியில் சடலாமாகப் போட்டுச் சென்ற காட்சிகளை கண்களால் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் தமிழீழக் கனவைக் கொண்டிருந்த எம் மக்கள்.
இவ்வாறாக இந்தப் பக்கத்தில் இவ்வாரம் பதியப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் இருக்கின்றன. முடிந்து போன ‘கதை’ யாக இருக்கின்ற தமிழீழம் என்ற கனவை மேலும் சிதைக்கத் தயாராகும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் அமைப்புக்களின் தலைவர்களும் இன்னும் எம் தமிழீழ மண்ணில் இருக்கின்றபோது, நாம் இந்த தலிபான்களை தரக்குறைவாக எழுதுவதற்காக இந்த தலைப்பை தேர்ந்தெடுக்கவில்லை.

ஆனால், உலகில் நன்கு வளர்ச்சியடைந்து ,இராணுவம் மற்றும் அரசியல் துறைகளில் பலமாக விளங்கிய விடுதலைப் புலிகளின் கனவு நிஜமாகியிருந்தால் எமது மண் மட்டுமல்ல அருகில் உள்ள தமிழ் நாட்டு மக்களும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் தலிபான்களின் வருகை கண்டு அங்கிருந்து வெளியேறத் துடிக்கும் அந்த நாட்டு மக்களில் ஒரு பகுதியினரும் இது வரை தங்கள் உயிர்களை இழந்த பலரும் அங்கு தலிபான்களின் இருப்பை விரும்பாமல் இருக்கும் போது மக்கள் விரும்பிய தமிழீழம் என்ற கனவை அழித்த அந்த நாட்களை ஆழ்ந்த கவலைகளுடன் எண்ணிப்பார்ப்பது எமக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. அதுவே இவ்வாரக் கதிரோட்டத்தின் நோக்கமாக உள்ளது.