இலங்கை என்னும் சிறிய நாட்டை சீரழிக்கும் குடும்ப அரசியல்
Share
27-08-2021 கதிரோட்டம்
இலங்கையை தற்போது ஆட்சி செய்வது அரசாங்கம் அல்ல, இராபக்ச என்னும் ஒரு குடும்பத்தின் ஆட்சியே அங்கு இடம்பெறுகின்றது என்பதே உலகின் பார்வையாக உள்ள வேளையில் அங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசியல் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் திண்டாடுவதையே அங்கு வாழும் மக்கள் மாத்திரம் அல்ல, அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் அனைவரும் அவதானித்து வருகின்றார்கள்.
அங்கு குடும்ப அரசியலில் ஊறியதால் உண்டான அரசியல் அதிகாரம், தேடிக்கொண்ட பொருளாதாரம் என அனைத்து வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்ட ராஜபக்ச குடும்பம் இலங்கையை நிர்வகிப்பதில் தள்ளாடுவதையே நாம் பார்க்கின்றோம்.
இதேவேளை, உலக நாடுகள் அனைத்திலுமே குறுகிய காலப் பகுதிக்குள் பரவிக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதானால், ஒவ்வொரு நாட்டினதும் மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டுக்குள்ளேயே முடக்குவதுதான் சரியான தீர்வாகுமா? அவ்வாறானால் உலக நாடுகளில் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை எல்லா நாடுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதான் பொருத்தமான நடவடிக்கையாகுமா?
இத்தகைய வினாக்கள் தொடர்பாக நன்கு சிந்திக்க வேண்டியதொரு காலகட்டத்துக்கு உலகம் இப்போது வந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனையோ தடவைகளில் தொடர்ச்சியாக முழுமையான ஊரடங்கு உத்தரவைப் பேணி, இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய போதிலும் அதன் பயன் நிரந்தரமாகக் கிடைக்காமலே போயுள்ளது. தொடர்ச்சியான, கண்டிப்பான ஊரடங்கு உத்தரவு நடைமுறைகளினால் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றதென்பது உண்மைதான்!
ஆனால் கொரோனா பரவலின் அந்த வீழ்ச்சி தற்காலிகமானது. அந்த வீழ்ச்சி நிலைமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமானால், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தம்மையும், தம்மைச் சூழவுள்ளோரையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மிகவும் அவதானமான முறையில் நடந்து கொள்வதுதான் ஒரே வழியாகும். அவ்வாறன்றி அந்த வீழ்ச்சியை நம்பியபடி மக்கள் அலட்சியமாகச் செயற்படுவார்களேயானால், வீழ்ச்சி நிலைமையானது மீண்டும் அலையாக உருவெடுப்பதற்கு நீண்ட காலம் தேவையில்லை.
உதாரணமாக, இலங்கையை எடுத்துக்கொண்டால் அங்கு இன்று அறிவிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் முடக்கம் தொடர்பான முடிவுகள் என்ன பாதிப்புக்களை மக்களுக்கு தரவுள்ளன என்பதே அங்குள்ள மக்கள் அச்சத்துடன் எதிர்பார்ப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இலங்கையை மீண்டும் முடக்கத்திற்குள் கொண்டு சென்றால் அங்குள்ள சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தவும் தம் பிள்ளைகளுக்கு உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்ய எவ்வளவிற்கு சவால்களை எதிர் கொள்ளப்போகின்றார்கள் என்பதே அனைவரினதும் மனங்களில் எழுந்துள்ள கேள்விகளாகும்.
எனவே கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதானால் எக்காலமும் ஊரடங்கு உத்தரவு அவசியமா? இல்லையேல் கொரோனா பரவலின் தன்மையைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளைப் பேணியவாறு நடந்து கொள்வதுதான் ஒரே வழியா? இவ்விரு தெரிவுகளிலும் பொருத்தமானதொன்றைத் தெரிவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் இலங்கை அரசு உள்ளது. ஏனெனில் உலகை விட்டு கொரோனா தொற்று நீங்கி விடாத நிலையில் இலங்கை என்னும் மாங்கனித் தீவில் மக்கள் நோயின் பாதிப்பாலும் ஆட்சியாளர்களின் சீரற்ற தலைமைத்துவத்தாலும் கீழே தள்ளப்படுகின்றனர் என்பதே உண்மை.