ஈரோடு அருகே பெற்றோர் வேலைக்கு போகச் சொன்னதால் தண்ணீர் தொட்டியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி
Share
ஈரோடு வீரப்பன் சத்திரம் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் குமரகிரி. பிஎஸ்சி பட்டதாரியான இவர் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடிப்பதை வழக்கமாகியுள்ளார்.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று வழக்கம்போல் குமரகிரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டுள்ளார்.
வேலைக்குச் செல்லுமாறு பெற்றோர் சத்தம் போட்டதால், குமரகிரி குடிபோதையில் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். வீரப்பன் சத்திரம் பாரதி திரையரங்கம் சாலையில் உள்ள சுமார் 50- அடி உயரம் உள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டே, திடீரென குமரகிரி கீழே குதித்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குமரகிரியை 108- அவசர ஊர்தியின் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குமரகிரி குடிபோதையில் தண்ணீர்த் தொட்டியில் இருந்து குதித்த காட்சியை எதிரே அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் இளைஞர் கீழே குதிக்கும் பதைபதைக்கும் காட்சிகள் பதிவான நிலையில், அவரைத் தடுக்க அங்கிருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததால் அவரது கால்கள் முறிந்த சோகம் அரங்கேறியுள்ளது.