மலேசிய பெண்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி வரவேற்கிறது
Share
கோலாலம்பூர், செப்.11:
வெளிநாடுகளில் மலேசியப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் கணவன்மாரும் இயல்பாகவே மலேசியக் குடியுரிமைப் பெற தகுதி பெற்றுள்ளனர் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் திர்ப்பளித்துள்ளது. குடியுரிமை விவகாரத்தில் ஆண்-பெண் சமன்பாட்டை நிறுவியுள்ள இந்த வரலாற்றுத் தீர்ப்பை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி வரவேற்கிறது-பாராட்டுகிறது என்று அதன் இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் டாக்டர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்.
எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி அமைச்சராக இருந்தபொழுது சிவப்பு அடையாளஅட்டைதாரர்கள், மலேசியாவில் பிறந்தும் போதுமான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை இல்லாதவர்களாக வகைபடுத்தப்-பட்டவர்கள், மலேசியத் தாய்மாருக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட தரப்பினரின் குடியுரிமை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கூட்டாட்சி கட்டமைப்பிற்கு உட்பட்டு விரிவான-முழுமையான அறிக்கையைத் தயாரித்து அமைச்சரவை பரிசீலனைக்காக முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நாட்டின் தன்னதிகார அமைப்பான உயர் நீதிமன்றம் எடுத்துள்ள இத்தகைய முடிவு, அரசியல் சாசனத்தின் உள்ளார்ந்த உத்வேகத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன், நிருவாகத் தரப்பினரின் கொள்கை மற்றும் நடைமுறை அம்சங்கள் அரசியலமைப்புடன் ஒத்துப்-போவதை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகவும் இது அமைகிறது.
சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு, ஜனநாயக நடைமுறைக்கு ஓர் அடித்தளமாக அமைவதுடன் குடியுரிமை விவகாரத்தில் ஆண்-பெண் சமன்பாட்டையும் குழந்தைகளுக்கான உரிமையையும் அரசியல் சாசனத்தின்படி நிறுவுகிறது. 2015-இல் ஐநா மன்றத்தில் 192 நாடுகளுடன் இணைந்து மலேசியாவும் முன்மொழிந்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDP) ஏற்பவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொண்டால் அது நாட்டிற்கும் குடிமக்களுக்கும் நலமாக அமையும் என்று உணர்கிறேன். அத்துடன் நிருவாகத் தரப்பினரின் கொள்கை மற்றும் நடைமுறை குறைபாடுகளால் வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் பெரியவர்களும் அரசியல் அமைப்பிற்கு முரணாக எதிர்கொண்டிருக்கும் இதேப்போன்ற சிக்கலைக் களைவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதுவும் மலேசியக் கூட்டு சமுதாயத்திற்கு சிறந்த பயனை அளிக்கும் என்று டாக்டர் தமிழ்மாறன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.