LOADING

Type to search

பொது

சென்னை அருகே மலிவு விலை குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி

Share

சென்னை புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் திங்கட்கிழமையன்று 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பானத்தை விற்பனை செய்த மளிகைக்கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்.செவ்வாய்கிழமை போலீசார் முன்னிலையில் மீண்டும் திறக்கப்பட்ட மளிகைக் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள், காலாவதியான பல்வேறு நிறுவனங்களின் குளிர்பானங்களையும் இட்லி மாவு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர் என்று கூறப்படுகிறது.

சிறுவர்கள் அருந்திய குளிர்பானம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “டெய்லி” என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே செயல்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் கிடங்கு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். குளிர்பானத்தின் மாதிரிகள் கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் வெளியான பின், குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் மீதும் தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல் மலிவு விலையில் பல போலியான குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டு பெட்டிக்கடைகளை டார்கெட் செய்து விநியோகம் செய்யப்படுவதாகவும், சில நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை போலியாக அச்சிட்டு விற்பனை செய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் 13 வயது சிறுமி ஒருவர் இதேபோன்று குளிர்பானம் வாங்கி அருந்திய சிறிது நேரத்தில் உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் குளிர்பான மாதிரிகளை ஆய்வு செய்ததற்கான அறிக்கை அனைத்தும் உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் முடிவு விரைவில் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.