LOADING

Type to search

அரசியல்

‘நீட் தேர்வு தொடருமானால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்’- நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அதிர்ச்சி தரும் அறிக்கை

Share

“தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும்; தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்”  என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து திணித்த நீட்

“மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு வலிந்து திணித்த நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தமிழக அரசுஅமைத்தது.

அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்துபுள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தனர். நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றனர்.அந்த வகையில், சுமார் 85 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

விலக்கு கோரி சட்டமுன்வடிவு

இதைத் தொடர்ந்து, முதல்&அமைச்சர் ஸ்டாலினிடம் 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதி அளித்தனர். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழக அரசு சட்டமுன்வடிவு ஒன்றை நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் வாயிலாக அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தமிழக அரசு நேற்று (செப் 20) வெளியிட்டது. அதில் நீட் தேர்வின் பாதகங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள், பரிந்துரைகள் வருமாறு:

கட்டமைப்பு பாதிக்கப்படும்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒருசிலஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறைஏற்படும்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற,நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம்.

சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

நீட் தேர்வை நீக்குவதற்கானசட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளலாம்.

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்று சட்ட விதிகள், அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

2006-07-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல,நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்…

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம்.  மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும்.

நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்னதாக 2016-17 ஆம் கல்வியாண்டில், அரசு பள்ளியில் படித்த 1,173 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 34 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்தது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளியில் படித்த எவருக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2019-20 ஆம் கல்வியாண்டில் 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், 336 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்கிடைத்தது.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சாதகம்

இதுபோல, நீட் தேர்வுக்குப் பிறகு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், தமிழக மருத்துவ கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்னதாக 0.39 விழுக்காடாக இருந்த சிபிஎஸ்இ மாணவர்கள் எண்ணிக்கை, நீட் தேர்வுக்கு பின் 26.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நீட்-டுக்கு முன், 12.14 சதவிகித தமிழ்வழி மாணவர்கள் மருத்துவம் படித்த நிலையில், நீட் தேர்வுக்கு பின்னர் அது படிப்படியாக குறைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் 1.7 சதவிகித தமிழ்வழி பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44 சதவீதத்தில் இருந்து 1.7% ஆக குறைந்துள்ளது.

கோச்சிங் சென்டர்களின் கொள்ளை

மேலும், நீட் கோச்சிங் என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால்,நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல.ஏனெனில், முதல் முறை நீட் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்.”

இவ்வாறு ஏகே ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முழுவிவரத்தை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் காணலாம்.

-மணிராஜ்,

திருநெல்வேலி.