LOADING

Type to search

பொது

ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்

Share

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ மதிப்புள்ள ஹெராயின் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலி ஆகியோருக்கு, நிறுவன பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, குஜராத் முந்த்ரா துறைமுகம் வழியாக போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னை கொளப்பாக்கத்தில் தங்கியிருந்த சுதாகர்- வைசாலி தம்பதியினரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர் விசாரணையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் 4 பேர் உட்பட 8 பேரையும் கைது செய்தனர்.

சென்னை தம்பதியினரை பத்து நாள் காவலில் எடுத்து மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அந்த தம்பதி நடத்திய விஜயவாடாவில் உள்ள ஆசி டிரேடிங் நிறுவனம் பெயரில் தான் 2 பெரிய கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்தபட்டதால், அது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயவாடா காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தம்பதி குறித்து தமிழக போலீசாரும் விசாரணையை துவங்கினர். சென்னை துறைமுகத்தில் இதே போன்று கடத்தல் நடைபெற்றுள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாகச் கொளப்பாக்கத்தில் சுதாகர் மற்றும் வைஷாலி இருவரும் 8 ஆண்டுகளாக தங்கி இருந்ததும், ஆசி சோலார் சிஸ்டம் என்ற பெயரில் போலி நிறுவனத்தை ஆரம்பித்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை, விஜயவாடா, டெல்லி, குஜராத் ஆகிய இடங்களில் தம்பதியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுதாகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசி ட்ரேடிங் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஹஸன் ஹுசைன் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஈரான் நாட்டு துறைமுகத்திலிருந்து இந்தியாவில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு டால்கம் பவுடரை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றதாகவும், இந்தியாவில் அமித் என்ற தரகர் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாவித் என்ற தரகரை தொடர்பு கொண்டு இந்த இறக்குமதியில் ஈடுபட்டதாகவும் சுதாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்படி அனுப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்களில் தான் இருபத்தி ஒரு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தின் பெயரில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு ஏற்கனவே டால்கம் பவுடர் என்ற பெயரில் பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளது. அதனை சென்னை முகவரிக்கு சேரும்படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் துறைமுக ஆவணங்களின் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே இதுகுறித்து சென்னை போலீசார் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு ஜூன் மாதம் 9 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் போதைப்பொருள் தானா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக டெல்லி குல்தீப் சிங் என்பவர் பெயரில் இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. குல்தீப் சிங் என்பவர் பெயரில் இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நிறுவனத் தரகர் அமித் கூறியதன் அடிப்படையில் ஆவணங்கள் தயாரித்து இறக்குமதி செய்த தாகவும் சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விஜயவாடா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.