LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியாவின் துயரம் மகாதீர்

Share

கோலாலம்பூர், அக்.07:

நாட்டில் அடிக்கடி நிகழும் ஆட்சி மாற்றங்களுக்கும், கட்சிதாவும் அல்லது அணிமாறும் கீழான அரசியல் கலாச்சாரத்திற்கும் கொரோனா பரவலால் மக்களும் அரசாங்கமும் ஒருசேர அல்லல்படுவதற்கும் ஒற்றை மனிதர்தான் மூல காரணம்.

அவர்தான் துன் டாக்டர் மகாதீர்.

மத்தியக் கூட்டரசாங்கம் அடிக்கடி மாறியதைப் போல மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறின; அணி தாவும் தவளைக் கலாச்சாரம் இன்னமும் நீடிக்கிறது. மலாக்கா மாநில ஆட்சி கடந்த வாரம் ஆட்டம் கண்ட நிலையில், தற்பொழுது நிலைகுலைந்து, சட்டமன்றமே கலைக்கப்பட்டு நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கி இருப்பது இன்னொரு சான்றாகும்.

கடந்த ஆண்டில் சபா மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், சபாவில் மட்டுமல்ல; திபகற்ப மலேசியாவிலும் சரவாக்கிலும் கொவிட்-19 ஆட்கொல்லி கிருமி இந்த அளவுக்கு பரவியிருக்காது. பல்லாயிரக் கணக்கில் பொதுமக்கள் மடிய வேண்டிய சூழலும் எழுந்திருக்காது.

சபா மாநிலத்தில் வாரிசான் கட்சி தலைமையில் சீராக நடந்து கொண்டிருந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் சினம் கொண்ட மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அப்டால் சட்டமன்றத்தைக் களைத்தார். அதனால் மறு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நிலைமைக்கு அம்மாநில அரசியல் களம் தள்ளப்பட்டது.

இதனால் தீபகற்ப மலேசியாவில் இருந்து கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏகமாக சபா மாநிலத்திற்கு படை எடுத்தனர். அவ்வாறு சென்றவர்கள் கொரோனா பரவல் குறித்து எவ்வித பாதுகாப்பு அம்சத்திலும் அக்கறை செலுத்தவில்லை.

விருப்பம்போல பிரச்சாரம் மேற்கொண்டதுடன் கொரோனா-19 குறித்து எஸ்.ஓ.பி. என்னும் நிர்ணயிக்கப்பட்ட நிருவாக நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தேர்தலில் பணியில் மும்முரம் காட்டினர். அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த சூட்டோடு தீபகற்ப மலேசியாவிற்கு திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்கள், 14 நாள் தனிமைப்படுத்துதல் என்னும நடைமுறையையும் பின்பற்றாத சூழ்நிலையில்தான் கொரோனா பரவல் மெல்ல தலைதூக்கியது.

சபா மாநிலத்தில் மட்டும் அல்ல; பேராக், ஜோகூர், மலாக்கா, கெடா மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறின. இதற்கு காரணம், மக்கள் பிரதிநிதிகள் மனம் கூசாமலும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை மதிக்காமலும் அணி தாவியதுதான்.

இதனால், மகாதீரின் மகன் முக்ரீஸும் இரண்டாவது முறையாக தன்னுடைய மந்திரி பெசார் பதிவியை இழக்க நேர்ந்தது. அத்துடன், பேராக் மாநிலத்தில் இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது, அம்மாநில மக்கள் மூன்றாவது மாநில ஆட்சியைக் கண்டுள்ளனர்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான், இப்பொழுது மலாக்கா மாநிலத்தில் இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு, அது மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் நிலைவரை சென்றுவிட்டது. அணி தாவும் மனப்பான்மையில் இருந்தவர்களின் பதவிப் பேரம் படியாததால் அந்த முயற்சி பாதி கிணறு தாண்டிய கதையாக முடிந்துவிட்டது.

 

மலாக்காவின் இந்நாள் முதல்வர் சுலைமான் முகமட் அலிக்கும் முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஹரோனுக்கும் இடையே நிகழும் பதவிப் போராட்டத்தின் விளைவாகும். உண்மையில், இது அம்னோவுக்குள் நிகவும் பதவிச் சண்டை என்பதால் நம்பிக்கைக் கூட்டணி தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது.

இத்தனை அரசியல் சதிராட்டங்களுக்கும் ஒட்டுமொத்த காரணம் மகாதீர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி மூலம் தன்னால் முடிந்தவரை அனுபவித்துவிட்டு, அடுத்து அன்வாருக்கான வாய்ப்பு வந்த வேளையில் அடுத்துக் கெடுக்கும் வேலையை கச்சிதமாக நிறைவேற்றி அந்த ஆட்சியை கவிழ்த்தார் மகாதீர்.

இதனை அடுத்துதான், நிலையான ஆட்சி நடந்து கொண்டிருந்த மாநிலங்களிலும் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர்பெற்ற மலேசியா, இப்பொழுது அரசியல் நிலையற்றத் தன்மைக்கு ஆளாகி, இதன்விளைவாக நாடும் மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதற்கு மகாதீரே முழு காரணம்.

மொத்தத்தில் தேசத்தின் துயரம் துன் மகாதீர்தான்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இரு மக்கள் பிரதிநிதிகள் உட்பட 10 பேரை கைது செய்து, ஜனநாயக செயல் கட்சிக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார் மகாதீர். இதன்மூலம் இன்னொரு காயையும் அடித்தார் அவர்; பிரச்சினைக்குரிய சமய போதகர் ஸக்கீர் நாயக்கிற்கு எதிராக ஒருவரும் வாய்திறக்காத – கருத்து சொல்ல முன்வராத நிலைமையை அவர் ஏற்படுத்தினார்.

அத்துடன், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் ஐநா மன்ற பொதுப்பேரவை கூடியபொழுது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதால் எரிச்சல் அடைந்த இந்திய அரசாங்கம் மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய்யை கொள்முதல் செய்வதில் பின்வாங்கியது.

முகைதீன் காலத்தில் அது மீண்டும் சீரடையத் தொடங்கிய நிலையில், நல்ல வேளை இப்போது மகாதீர் பிரதமராக இல்லை. ஒருவேளை அவர் பிரதமராக இருந்திருந்தால், கடந்த மாதம் நடைபெற்ற ஐநா மன்ற பொதுப்பேரவையின்போது மீண்டும் காஷ்மீர் பிரச்சினையில் சமய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, இந்தியாவுடனான செம்பனை வர்த்தகத்தை முடக்கி, நாட்டிற்கு மேலும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி இருப்பார்.

இஸ்மாயில் சாப்ரியாக இருந்ததால் கடந்த மாத பிற்பகுதியில் காணொளிக் காட்சி மூலம் அவர் ஆற்றிய உரையில் பாலஸ்தீன விவகாரத்தோடு முடித்துக் கொண்டு, உலகமே ஒரு குடும்பம் என்ற சிந்தனையையும் முன்வைத்தார்.

மொத்தத்தில், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு பிரதமருக்காக வாக்களித்துவிட்டு நாட்டு மக்கள் இப்போது மூன்று பிரதமர்களைக் கண்டுள்ளனர். அதுவும் யார் பிரதமராக வரவேண்டும் என்று கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தார்களோ, அவர் வரமுடியவில்லை மாறாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினரும் மக்களுக்கு துரோகம் இழைத்து அணிதாவியர்களும் பதவி வகிக்கின்றனர்.

இது,

காத்திருந்த அத்தை மகன் கண்கலங்கி நிற்கையிலே

நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போட்டது

ஏன் கண்ணம்மா? என் கண்ணம்மா?

என்னும் வண்ணக்கிளி திரைப்பட பாடல் வரிகளைத்தான் நினைவுப்படுத்துகின்றன.

இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்ப்பு அடுத்தப் பொதுத் தேர்தலில் கிடைக்காமலா போகும்?