LOADING

Type to search

மலேசிய அரசியல்

5-ஆம் ஆண்டு வரலாற்றுப் பாட நூல் கிடைக்காமல் பேராக் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தடுமாற்றம்

Share

கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பெற்றோர் கோரிக்கை

-நக்கீரன்

கோலாலம்பூர், அக்.07:

பேராக் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் 5-ஆம் ஆண்டிற்குரிய வரலாற்றுப் பாட நூல் கிடைக்காமல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தடுமாற்றத்திற்கும் பரிதவிப்பிற்கும் ஆளாகியுள்ளதாக அங்குள்ள பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

ஏறக்குறைய பாடங்கள் அனைத்தையும் மாணவர்கள் படித்து முடித்திருக்க வேண்டிய தருணம் இது. இயல்பான சூழ்நிலையில் வழக்கமான முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று இருந்தால் இந்தப் பிரச்சினையெல்லாம் ஜனவரி மாதமே தீர்க்கப்பட்டிருக்கும்.

பாழாய்ப் போன கொரோனா நச்சுயிரிதான் எல்லாவற்றையும் தடம்புரள வைத்துவிட்டது. இருந்தாலும் ஆசிரியப் பெருமக்களின் பெருமுயற்சியாலும் சமூகத்தின்பால் அவர்கள் கொண்டுள்ள அக்கறையாலும் மாணவர்கள் இணையத்தின் ஊடாக தங்களின் கல்விப் பயணத்தை வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வந்தனர்.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் கல்வி தடைபட்டு விடக்கூடாதென்ற அக்கறையில் பெரும்பாலான பெற்றோரும் இடைக்கால ஆசிரியர்களைப் போல செயல்பட்டதையும் காண முடிந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த 3-ஆம் நாள் தேசிய அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இவ்வளவு காலமும் கணினித் திரையிலும் கையடக்கத் திரையில் படித்து வந்த நாம், இனியாவது புத்தகங்களின்வழி ஆசைதீர படிக்கலாமே என்ற ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்ற பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், முக்கியப் பாடமான வரலாற்றுப் பாட நூல் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளத் தகவல் அதிர்ச்சியாக உள்ளது.

ஏதோ ஒரு பள்ளி, இரு பள்ளிகள் என்றில்லாமல் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதைப்பற்றி அறிந்த பெற்றோர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனராம்.

இந்தச் சிக்கலுக்கு கல்வி அமைச்சின்கிழ் இயங்கும் பாடநூல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுதான் பொறுப்பு என தெரியவருகிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்தான் அந்தந்தப் பள்ளிக்கும் தேவையான நூல்களை உரிய காலத்தில் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஏனோ இது குறித்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் திடீரென்று பள்ளிகள் திறக்கப்படவில்லை. இவ்வாண்டு கல்வித் தவணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு. அதன் பின்னர் போதிய அவகாசம் வழங்கப்பட்டு சுகாதாரத் துறையால் பள்ளிதோறும் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கை யெல்லாம் மேற்கொள்ளப்பட்ட நிலையில்தான் இவ்வாரத் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்தச் சிக்கல் குறித்து பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது.

ஒரு மாணவர், எவ்வளவு கற்றிருந்தாலும் ஆற்றல்மிக்கவராக இருந்தாலும் கூட, அவர் ஆண்டு நிறைவுத் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்றால், அவர் அந்த ஆண்டில் தோல்வி அடைந்ததாக வகைப்படுத்தப்படுவார். இந்தப் பாடத்தை மிக முக்கியப் பாடமாக கல்வி அமைச்சு வகைப்படுத்தி உள்ளது.

கல்வி அமைச்சர் மாணவர்களின் கல்வி நலனில் விழிப்பாக இருந்தபோதும் கீழ்நிலை அதிகாரிகள் ‘இளம் நெப்போலியன்களை’ப் போல நடந்து கொள்வது இன்றளவும் நீடிக்கிறது.

எது எப்படி இருந்தாலும் கல்வித் துறை உயரதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு உதவி நல்கும்படி பேராக் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24