LOADING

Type to search

பொது

இந்துக்களின் கலைவிழா என்று அழைக்கப் பெறும் நவராத்திரியும் ஒரு பண்டிகையே

Share

ராஜகுமாரன்- மொன்றியால்

இந்துக்களின் கலைவிழா என்று அழைக்கப் பெற்று ஆலயங்கள், பாடசாலை, தொழிலகங்கள், வீடுகள் தோறும் சக்திக்காக எடுக்கப்படும் விழா வான நவராத்திரி பண்டிகைக்காக அழகிய பொம்மைகளை கொலு வைத்து கலை உணர்ச்சி தலைத்தோங்க கொண்டாடுவர்.நவராத்திரி விழா நேற்று புதன்கிழமை உலகெங்கும் உள்ள இந்துக்களுக்கான விழாவாக ஆரம்பமாகிளது. நவராத்திரி நாட்களில் அந்தந்த தினங்களின் சிறப்பை உணர்ந்து அம்பாளுக்கு அந்தந்த நாட்களுக்குரிய அபிஷேகம், மலர் அலங்காரம், பிரசாதம், நிவேதனம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

இந்த ஒன்பது நாட்களும் செய்ய
வேண்டிய அபிஷேகங்கள்

வருமாறு:

முதலாம் நாள்- அரிசி மா, இரண்டாம் நாள்- கோதுமைமா, மூன்றாம் நாள்-முத்து, நான்காம் நாள் – அட்சகை, ஐந்தாம் நாள்- கடலை, ஆறாம் நாள்- பருப்பு, ஏழாம் நாள்- மலர், எட்டாம் நாள்- காசு, ஒன்பதாம் நாள்- கற்பூரம்.

ஒன்பது நாட்களும் அணிவிக்க வேண்டிய மலர்கள் வருமாறு:

முதலாம் நாள்- மல்லிகை, இரண்டாம் நாள்- முல்லை, மூன்றாம் நாள்- சம்பங்கி, நான்காம் நாள்- ஜாதி மல்லிகை, ஐந்தாம் நாள்- பாரிஜாதம், ஆறாம் நாள்- செம்பருத்தி, ஏழாம் நாள்- தாழம்பூ, எட்டாம் நாள்- ரோஜா, ஒன்பதாம் நாள்- தாமரை

ஒன்பது நாட்களும் சாத்த வேண்டிய இலைகள்:

முதலாம் நாள்- வில்வம், இரண்டாம் நாள்- துளசி, மூன்றாம் நாள்- மருதாணி, நான்காம் நாள்- கதிர்ப்பச்சை, ஐந்தாம் நாள்- விபூதிப் பச்சை, ஆறாம் நாள், சந்தன இலை, ஏழாம் நாள்- தும்பை இலை, எட்டாம் நாள்- பன்னீர் இலை, ஒன்பதாம் நாள்- மருக்கொழுந்து.

ஒன்பது நாட்களும் படைக்க வேண்டிய நிவேதனங்கள்:

முதலாம் நாள்- சுண்டல், இரண்டாம் நாள்_ வறுவல், மூன்றாம் நாள்-துவையல், நான்காம் நாள்- பொரியல், ஐந்தாம் நாள்- அப்பளம், ஆறாம் நாள்- வடகம், ஏழாம் நாள்- சூரணம், எட்டாம் நாள்- முறுக்கு, ஒன்பதாம் நாள்- திரட்டுப் பால்

ஒன்பது நாட்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

முதலாம் நாள்- வெண் பொங்கல், இரண்டாம் நாள்- புளியோதரை, மூன்றாம் நாள்- சர்க்கரைப் பொங்கல், நான்காம் நாள்- கதம்பம், ஐந்தாம் நாள்-ததியோதனம், ஆறாம் நாள்- தேங்காய்ச் சாதம், ஏழாம் நாள்- எலுமிச்சைச் சாதம், எட்டாம் நாள்- பாயாசம், ஒன்பதாம் நாள்- அக்கார வடிசல்.

நவராத்திரியில் கொலு வைக்கும் முறை/ தத்துவம்:

மனிதன் எவ்வகையிலேனும் தன்னை தன் வாழ்நாளில் உயர்த்திக் கொள்ள வேண்டும். படிப்படியாக ஆன்மீக ரீதியில் தன்னை உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதை விளக்குவதற்காகவே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை வைத்து வழிபடுகின்றோம்.

முதலாவது படியில் ஓரறிவுள்ள உயிர் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவரப் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

இரண்டாவது படியில் இரண்டு அறிவைக் கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

மூன்றாவது படியில் மூன்றறிவுள்ள உயிர்களை விளக்குகின்ற கறையான், எறும்பு (ஊர்வன) போன்ற பொம்மைகள இடம்பெற வேண்டும்.

நான்காவது படியில் நான்கு அறிவுள்ள உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஐந்தாவது படியில் ஐந்து அறிவு கொண்ட விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஏழாவது படியில் மனிதனுக்கு மேம்பட்ட மகரிஷிகள் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். பஞ்சபூத தெய்வங்கள், அட்டதிக்குப் பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட வேண்டும்.

ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அவர்களது தேவியர்களாகிய சரஸ்வதி, இலக்குமி, பார்வதி ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட வேண்டும். நடுநாயகமாக ஆதிபராசக்தி இருக்க வேண்டும்.

உயிரினங்கள்(மனிதன்)படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இறுதியில் தெய்வமாக வேண்டும் என்கின்ற தத்துவத்தை விளக்குவதே இந்தக் கொலு வைக்கும் முறையில் அடங்கிய தத்துவமாகும்.

நவராத்திரி:

இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய விரதங்களில் நவராத்திரியும் ஒன்றாகும். இறைவனைத் தாயாக வழிபடும் நாட்கள்தான் நவராத்திரி நாட்களாகும். அன்னையின் அருள் வேண்டி நோற்கும் விரதங்களில் தலைசிறந்ததும் மகத்துவமானதும் நல்லன எல்லாம் தரும் விரதமே நவராத்திரியாகும். நவராத்திரி இமயம் தொட்டு குமரி முனைவரை இந்து சமயம் பரந்துள்ள பிரதேசத்தில் வெவ்வேறு திருப்பெயர்களால் வருடந்தோறும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது.

அண்டசராசரங்கள் அனைத்தையும் தோற்றுவித்த இவ்வுலகின் மூலசக்தியாம் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய சக்திகளே பூவுலகில் வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றை எமக்குத் தந்து எம்மை சிறப்பாக வாழ வைக்கின்றனர். அவர்களுக்கு விழா எடுத்து அவர்களது அருட்கடாட்சத்தை பெறுவதே நாம் வருடம் தோறும் கொண்டாடும் இந்த நவராத்திரி விழாவின் நோக்கமாகும். சொல்லும் சிவனுக்கு ஒரு இராத்திரி ஆனால் அதைச் செயல்படுத்தும் சக்திக்கு ஒன்பது இராத்திரி.

நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியைக் குறித்து நோற்கப்படும் விரதமாகும். இது தட்சணாயன காலமாகும் . இக்காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். உத்தரயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்க சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்கின்றோம்.

நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதம திதியில் ஆரம்பித்து நவமி முடிய செய்யப்பட வேண்டும் என ‘காரணாகம்’ கூறுகின்றது. அதாவது வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை நடைபெறுகின்றது. மகாசங்கார காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான். அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞான சக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.

நவராத்திரி முதல் மூன்று நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலமாகும். இக்காலத்தில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான். அடுத்த மூன்று நாட்களும் ஞான சக்தியின் தோற்றமான இலக்சுமியின் ஆட்சிக் காலமாகும். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவண போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக் காலமாகும். இதில் இறைவன் முன்னறிந்தவாறு அருள் வழங்குகின்றான்.

ஆலயங்களிலும், இல்லங்களிலும், பாடசாலைகளிலும் கொலு (உருவம்) வைத்து ஒன்பது நாட்களும் வழிபடுவர். நவராத்திரிக்குத் தேவையான பூசைக்குரிய பொருட்களை அமாவசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்க வேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ ஆகியவற்றுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்ந்த அன்னம், வடை, பாயசம் முதலியனவற்றை நிவேதித்தல் வேண்டும்.

புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை, பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தி, துதித்து பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்ய வேண்டும். சிறு பெண்பிள்ளைகளின் பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்ட சிறுபெண்பிள்ளைகளே பூசைக்கு உரியவர்கள் ஆவர்.

முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு பிள்ளையாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகினி, காளி, சாண்டிகர், சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்பட வேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்களும் மஞ்சள், குங்குமம், தட்சணை கொடுத்தும் அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

விரதம் அனுஷ்டிப்பபோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்து பின் பால், பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது. ஒன்பதாம் நாளான மகாநவமி அன்று உபவாசம் இருந்து மறுநாள் விஜயதசமி அன்று காலை ஒன்பது மணிக்கு முன் விரதத்தை முடித்தல் வேண்டும். இயலாதவர்கள் பகல் ஒரு வேளை உணவு அருந்தி ஒன்பதாம் நாள் பால், பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப் பதார்த்தங்கள் சக்திக்கு நிவேதித்து திருவடியில் வைத்துள்ள புத்தகம் இசைக் கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் விரதத்தை பூர்த்தி செய்யலாம் . நவராத்தியில் திருமகளை துதித்து வழிபாடுவோர்க்கு சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாது வீடு போறாகிய முக்தியையும் நல்குவாள் என்ற நம்பப்படுகின்றது. விரதகாலத்தில் அபிராமி அந்தாதி, இலட்சுமி தோத்திரம், சகலகலாவல்லிமாலை, சரஸ்வதி அந்தாதி என்பவற்றை ஓதுவது நல்லது.

நவராத்திரியை அடுத்துவரும் விஜயதசமி அன்று ஏடு தொடக்குதல் வித்தியாரம்பம் புதிதாக கலைப் பயிற்சி தொடங்குதல் நடைபெறும். ஒன்பது நாட்களிலும் சக்திக்கு பூசை செய்த பலன் கைகூடும் நாள் விஜய தசமி ஆகும். விஜயதசமி அன்று ஆலயங்களில் ‘மானம்பூ’ அல்லது மகிடாசுர சங்காரம் விசேட அம்சமாக இடம்பெறும். ஆலயங்களில் வன்னிமரம்/வாழைமரம் நட்டு மகுடாசுரன் என்ற அசுரனை தேவி சங்கரித்த பாவனையாக அம்மரத்தை வெட்டி விழா எடுப்பர்.

இது தொடர்பான புராணக்கதை

வருமாறு:

மகுடாசுரன் என்பவன் காட்டெருமை வடிவிலான அசுரன். அவனும் அவனைச் சார்ந்த அசுரர்களும் ஆணவம், கன்மம், மாயை, காமம், குரோதம், உலோபம், அறியாமை, மிருகத்தன்மை, திரிபும் ஆகிய தீய குணங்களின் உருவமே அவன். அவனுடன் தேவி ஒன்பது நாள் போரிட்டு பத்தாம் நாள் வெற்றி கண்டாள்.

அதே போல் நாமும் ஒன்பது நாள் தேவியை வழிபட்டு பெற்ற சக்தியால் மனதில் உள்ள தீய குணங்களை அழித்து ஒழிக்கலாம். அதனால் ஞானம் கைகூடும். இத்தகைய நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து நாமும் சக்தியுடன் இணைந்து பேரின்ப பெருவாழ்வு பெற்று வாழ்வோமாக!