LOADING

Type to search

பொது

வண்டியின் இரு சக்கரங்களைப் போல வகுப்பறையில் கற்றலும் கற்பித்தலும் தடையில்லாமல் நடைபெற‌ வேண்டும்

Share

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காரணமாக மேற்கொள்ளப்படும் இணையவழி சார்ந்த கல்வி முறையானத. மாணவர்கள் மத்தியில் அறிவார்ந்த கருத்துகளை உள்வாங்கவும், ஆழமான கருத்துகளை கற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறுகின்றனர். நுனிப்புல் மேய்வது போன்று, மேலோட்டமான விஷய‌ங்களைத் தெரிந்துகொண்டால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் மேலோங்கியிருப்பதாக தெரிகிறது.
மாண‌வர்களை மீண்டும் உயிர்த் துடிப்புள்ளவர்களாக மாற்றும் மந்திர சக்தி வகுப்பறை கற்பித்தலுக்கே இருக்கிறது.

வண்டியின் இரு சக்கரங்களைப் போல வகுப்பறையில் கற்றலும் கற்பித்தலும் தடையில்லாமல் நடைபெற‌ வேண்டும் என்பதே என் கருத்தாகும்

ஒன்லைன் கல்வியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தலைமுறையைக் காப்பாற்றாமல் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக இணையவழி வழியாக கற்றல்-கற்பித்தல் நடைமுறை ஒரு தற்காலிகமான மாற்றாகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக முதல் அலை, இரண்டாம் அலை எனத் தொடர்ந்ததால் ஒன்லைன் கல்வி நிரந்தரமாகி விட்டது.
மாணவர்கள் தங்களின் விருப்பப்படியும், வீட்டில் இருந்தபடியும் ஒன்லைன் வகுப்பில் பங்கேற்பது அவர்களுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. வகுப்பில் தங்களின் இருப்பை உறுதிசெய்வதற்காக மட்டுமே ஒன்லைன் வகுப்புக்கு வந்த‌னர்.

மற்றபடி வகுப்பை ஆழமாக கவனிக்க வேண்டும், புரியாத கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும், ஆசிரியரோடு கலந்துரையாட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

ஒன்லைன் வகுப்பிற்குள் வந்தவுடன், மைக் மற்றும் கேமராவை அணைத்துவிட்டு செல்போனில் கேம் ஆடுகிறார்கள். நண்பர்களோடு சாட் செய்கிறார்கள். அவர்களின் தனிப்ப‌ட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

படுக்கையில் படுத்தவாறு, வீட்டில் அரட்டை அடித்தவாறு, மருத்துவமனையில் நின்றவாறு, பைக்கில் பறந்தவாறு, காய்கறிச் சந்தையில் நடந்தவாறு ஒன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள். ஆசிரியர் கனிணித் திரையை பார்த்து தனக்குத் தானே பேசிக்கொள்வதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

எத்துணை தயாரிப்புகளோடு வந்தாலும், ஒன்லைன் வகுப்பின் போதாமைகளால் ஆழமாகப் பாடம் நடத்த முடியாமல் போகிறது. கல்லுாரி வளாகத்துக்கு வந்து ஆசிரியர்களோடும் மாண‌வர்களோடும் இணைந்து கற்கும்போது கிடைக்கின்ற சமூக மயமாக்கல் ஒன்லைன் கல்வியில் இல்லாமல் போகிறது.

நேருக்கு நேரான உரையாடல் இல்லை என்பதால் உணர்வுத் தளத்திலும், உளவியல் தளத்திலும் மாணவர்களுக்குப் பெரிய தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே மாண‌வர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் பெரும் தடையாக மாறியுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்ததால், மாணவர்களிடம் இருந்த ஒழுங்கு நெறிமுறையில் காணாமல் போய் உள்ளது.

வீட்டுக்குள்ளே இருந்ததால் சோம்பலுக்கு ஆளாகியுள்ள‌னர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துவண்டிருப்ப‌தால் உழைக்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற லட்சிய சிந்தனையை இழந்துள்ள‌னர்.

எது எளிதானதோ அதைத் தேர்ந்து கொள்வதற்கான துரித மனநிலையில் இருக்கின்ற‌னர்.

ஒன்லைன் அடிமைகள்

மாணவர்கள் ஒரு நாளைக்கு 75 சதவீத நேரத்தைத் தொடுதிரையை உற்றுப் பார்ப்பதிலும், பொழுதுபோக்குக்காக சமூக வலைதளங்களிலும் செலவிடப் பழகிவிட்டனர். பலர் இணைய செயலிகளுக்கு அடிமைகளாகிவிட்டனர்.

இதனால் அறிவார்ந்த கருத்துகளை உள்வாங்கவும், ஆழமான கருத்துகளை கற்றுக்கொள்ளவும் முடியாமல் திணறுகின்றனர். நுனிப்புல் மேய்வது போன்று, மேலோட்டமான விஷய‌ங்களைத் தெரிந்துகொண்டால் போதும் என்ற மனநிலை மாணவர்களிடம் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த குணம் நாளடைவில் அவர்களை எதிலும் காலூன்ற முடியாதவர்களாகவும், வாழ்க்கையை மேம்போக்காக அணுகுபவர்களாகவும் மாற்றிவிடும் ஆபத்து இருக்கிறது.

இது மாண‌வர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த கொரோனா கால செல்போன் பயன்பாடு மாணவர்களை கற்பனையான உலகத்திற்குள் அழைத்துச் சென்றுவிட்டது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல் அதிலே மாணவர்கள் மித‌க்கின்றனர்.

எதிர்காலம் குறித்து எந்தத் திட்டமும், ஆரோக்கியமான கனவும் அவர்களுக்கு இல்லை. தன்னுடைய உடனடித் தேவை என்ன? நீண்ட காலத் தேவை என்ன? எதைத் தேர்ந்துகொள்ள வேண்டும், எதை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

படிப்பை முடித்து, கல்லூரிக்கு வெளியே காலடியெடுத்து வைக்கும்போது தகுந்த வேலை கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். இதனால் தன் வாழ்வை மட்டுமல்லாமல் குடும்பத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியாமல் மாணவர்கள் வருந்தும் நிலை எதிர்காலத்தில் உருவாகும் ஆபத்து நெருங்குகிறது.

இதனை மாணவர்களும் பெற்றோரும் உடனடியாக உணர வேண்டும்.மாணவர்களின் இந்த அவல நிலையைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பான சூழலில் அரசு விரைந்து பாடசாலைகளை முழுமையாகத் திறக்க வேண்டும்.

பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளைக் பாடசாலைக்கு துணிந்து அனுப்ப வேண்டும். துடிப்பை இழந்து நான்கு சுவருக்குள் வாடி வதங்கியும், செல்போனின் மாய வலையில் சிக்கியும் இருக்கும் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும்.

சாம்பல் தீவான்- வன்குவர்