சேலத்தில் பியூட்டி பார்லர் பெண் கொலையில் சென்னை காதலனிடம் கிடுக்கிப்பிடி
Share
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முகமது சதாம். இவரது மனைவி தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளியான இவர் அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் பகுதியில் 2 பியூட்டி பார்லர், மசாஜ் சென்டரை ஆரம்பித்து நடத்தி வந்தார். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல், வாடகைக்கு 2 வீடுகளை எடுத்து தங்கியிருந்தார். ஒரு வீட்டில் அவரும், மற்றொரு வீட்டில் தனது பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த 2 பெண், ஒரு ஆண் ஆகியோரும் தங்கியுள்ளனர். தேஜ்மண்டலின் வீட்டிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். தன்னை அவரின் கணவர் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரதாப், வீட்டு உரிமையாளரான அதிமுக பிரமுகர் நடேசனுக்கு போன் செய்து, தனது மனைவி தேஜ்மண்டல் போனை எடுக்கவில்லை. அதனால், வீட்டில் சென்று பாருங்கள் எனக்கூறியுள்ளார். உடனே அவர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் கொண்ட நடேசன் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமின் சிலாப்பில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டறிந்தனர். உடனே அதனை இறக்கி திறந்து பார்த்தனர். உள்ளே தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு, அரை நிர்வாண நிலையில் சடலமாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தார். உடல் அழுகி காணப்பட்டது. மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது, பக்கத்திலேயே தேஜ்மண்டல் வாடகைக்கு எடுத்திருந்த மற்றொரு வீட்டை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். அங்கு தங்கியிருந்த 2 பெண் உள்ளிட்ட 3 பேரும் இல்லை. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது.
இதையடுத்து கொலையான தேஜ்மண்டல் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இக்கொலையில் குற்றவாளிகளை பிடிக்க உதவி கமிஷனர்கள் ஆல்பர்ட், நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, ராமகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படை போலீசார், தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக, தேஜ்மண்டல் வீட்டில் இருக்கிறாரா? என பார்க்க சொன்ன பிரதாப் பற்றி விசாரித்தனர். அவர், சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதும், அவர் தேஜ்மண்டலின் கணவர் இல்லை, ரகசிய காதலன் என்றும் தெரியவந்தது. உடனே இரவோடு இரவாக அவரை சென்னையில் இருந்து போலீசார் வரவழைத்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தேஜ்மண்டல் பழக்கமானார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்காக சென்னை சென்று விட்டேன். தினமும் போனில் பேசு வோம். கடந்த 5 நாட்களாக அவர் என்னிடம் பேசவில்லை. அதனால் சந்தேகம் கொண்டு வீட்டு உரிமையாளரை பார்க்க சொன்னேன் எனக்கூறியுள்ளார். இருப்பினும் அவர் சொல்லும் தகவல்கள் உண்மைதானா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இக்கொலையில், தேஜ்மண்டல் தனது வீட்டருகே குடி வைத்திருந்த 2 இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த 3 பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். கடந்த 5 நாட்களாக அவர்கள், சேலத்தில் இல்லை. வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளனர். அதனால், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு அல்லது சமீபத்தில் விபசார வழக்கில் அவர்களோடு பணியாற்றிய பெண்கள் சிக்கிய விவகாரத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிடித்தால், பியூட்டி பார்லர் பெண் உரிமையாளர் தேஜ்மண்டலை கொன்றது யார்? எனத்தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.