LOADING

Type to search

கதிரோட்டடம்

எதிர்காலத் தலைவர்களான மாணவச் செல்வங்களின் கலங்கரை விளக்கம் அவர்கள் கற்கும் பாடசாலைகளே!

Share

கதிரோட்டம் : 22-10-2021

உலகின் எட்டுத் திசைகளிலும் வாழும் மாணவச் செல்வங்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் எதிர்காலத் தலைவர்களாக விளங்குவதற்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவது அவர்கள் கற்கும் பாடசாலைகளே என்றால் அது மிகையாகாது.

பாடசாலைகளில் கற்றுத் தேர்ந்தால் மாத்திரமே அவர்கள் பல்கலைக் கழகங்களில் புகுந்து சிறந்த கல்வியாளர்களாக பரிணமிக்க இயலும் என்பது கண்கூடாகும்.

இந்த வகையில் எமது தாயகத்தில் பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் கல்விக்காக ஏங்கித் தவிக்கும் எமது மாணவச் செல்வங்களை புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் சற்று திரும்பிப் பார்க்க வேண்டியது தற்காலத்தில் மிகவும் அவசியமாகின்றது.

இவ்வாறான நிலையில் கொரோனாத் தொற்று காரணமாக உலகெங்கும் போலவே. ஏமது தாயகத்தின் மாணவச் செல்வங்களும் தங்கள் கல்வியை இழந்துள்ளார்கள். ஏற்கெனவே வறுமை அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் சார்ந்த நெருக்குவாரங்கள் ஆகியன சார்ந்த பாதிப்புக்கள் ஒரு புறம். இயற்கையின் பாதிப்புக்களாலும் எமது பிள்ளைகள் கல்வியில் பின் தங்கி. ஆதனால் அவர்களது எதிர்காலம் பின் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, இருநூறுக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எமது தாயகத்தில் நேற்று 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மாத்திரமன்றி, நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருக்குமே மகிழ்ச்சியும், நிம்மதியும் தருகின்ற செய்தி இதுவாகும்.

நாட்டில் கொவிட் தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அவ்வப்போது மூடப்பட்ட பாடசாலைகள், பின்னர் நீண்ட காலமாக தொடர்ச்சியாகவே மூடப்பட்டு இயங்காத நிலைமையில் இருந்தன. இலங்கையில் கொவிட் தொற்று பரவுகின்ற வேகத்தில் தற்போது வீழ்ச்சி நிலைமை படிப்படியாக ஏற்பட்டு வருவதனால் பாடசாலைகளையும் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா மரணங்கள், தொடர்ச்சியாக சம்பவிக்கவே செய்கின்றன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பவே அஞ்சுகின்றனர்.

இவ்வாறிருக்க. வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியை செவ்வனே முன்னெடுத்துச் சென்ற ஆசிரியர்களை அனைத்து தரப்பினருமே பாராட்டுவது முக்கியம். அதேவேளை 200 இற்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கையை துரித கதியில் முன்னெடுத்துச் செல்வதற்காக அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது. மாணவர்களின் கல்வியில் பெருவீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதனால் அவர்களை மீண்டும் கைதூக்கி விடும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது.

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து உழைத்து கல்வியில் பின்தங்கியுள்ள எமது மண்ணின் மைந்தர்களாம் மாணவச் செல்வங்களுக்கு கல்விச் செல்வத்தை அள்ளி வழங்க முன்வரவேண்டும்.