LOADING

Type to search

அரசியல்

நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ‘பிரஜா ஜல அபிமானி’ குடிநீர் திட்டம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டி வைப்பு

Share

(மன்னார் நிருபர்)

(31-10-2021)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு எனும் கொள்கை பிரகடனத்துக்கு அமைய ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’ எனும் கருப்பொருளின் கீழ் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ‘பிரஜா ஜல அபிமானி’ குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (30) மாலை இடம்பெற்றது.

நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் , ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஏ. ஸ்ரான்லி டிமெல், நானாட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் . மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தராஜா, இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அச்சங்குளம் ஆலயத்தின் பங்கு தந்தை உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் உதித்த சௌபாக்கியத்திற்கான இலக்கு எனும் கொள்கை பிரகடனத்துக்கு அமைய ‘அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’ எனும் கருப்பொருளின் கீழ் மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிங்கள கம்மான பகுதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ‘பிரஜா ஜல அபிமானி’ குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (30) மாலை இடம்பெற்றது.

சிங்கள கம்மான விகாரையின் விகாராதிபதி தலைமையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் நீர் வழங்கல் மற்றும் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முசலி பிரதேச செயலக பிரதேச செயலாளர் . எம். ராஜீவ், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.