நாளை வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதென அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்
Share
தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்க உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, சென்னையில் அதிக கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, அதிக மழை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்கும் வகையில் சென்னையில் மீட்பு பணிக்காக மூன்று பேரிடர் மீட்பு படை தயாராக உள்ளது.
இன்று இரவு முதல்- நாளை வரை பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியே வரக்கூடாது. நீர்நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுக்க கூடாது. கன மழை பெய்யும் காரணத்தினால் காட்டாற்று வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க கூடாது.அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கல்வி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மழை குறைந்த பிறகு பயிர் சேதம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்” என்று வருவை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.