LOADING

Type to search

அரசியல்

பாலியல் வழக்கில் கைதான.. சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது

Share

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முதலில் தமிழ்நாடு போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் சிவசங்கர் பாபா தலைமறைவானர் . இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவசங்கர் பாபா கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அனைத்து விசாரணையும் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கபட்டது. ஏற்கனவே, இரு வழக்குகளில் சிவ சங்கர் பாபாவிற்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தன்மையில் எந்தவித மாற்றமுமில்லை எனக்கூறி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.