LOADING

Type to search

கதிரோட்டடம்

இலங்கையில் மாணவர் சமூகத்தின் போராட்டங்களுக்கு ‘சாவு மணி’ அடித்து வரும் சனாதிபதியின் பிரசங்கம்

Share

கதிரோட்டம்- 10-12-2021

இலங்கையில் மாணவர் சமூகத்திலிருந்தே எழுச்சி மிக்க அரசியல்வாதிகள் தோன்றும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் மாணவர் சமூகம் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல போராட்டங்களை பல தடவைகள் நடத்தியுள்ளது என்பது பலருக்கு நினைவிருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் மாணவர் போராட்டத்திற்கு ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘இனப் போராட்டம்’ என்று முத்திரை குத்தும் பெரும்பான்மை இன முதலாளித்துவ அரசியல்வாதிகள். தென்னிலங்கை சிங்கள மாணவர்கள் அரசாங்கங்களின் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் போது, அவற்றை “மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம்” அல்லது ‘கொம்யூனிஸ்ட்களின் போராட்டம்’ என்று முத்திரைகளைக் குத்திய வண்ணம் மக்களுக்கு மாணவர்களின்; போராட்டத்தில் நியாயமில்லை என்பதை காட்ட முனைந்து வந்துள்ளன.

இவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் நடைபெறும் மாணவர் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக இராணுவத்தையும் காவல்துறையையும் ஏவிவிடும் தென்னிலங்கை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளை கொன்றும் சிறைகளில் அடைத்தும் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தியுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் அடங்குவார்கள்.

இவ்வாறு மாணவர் போராட்டங்களுக்கு முழு விரோதியாகவும் எதிராளியாகவும் விளங்கும் தற்போதைய சனாதிபதி கோட்டாபாய மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதுவும் இந்த அறிவிப்பை எங்கு வைத்து விடுத்துள்ளார் என்றால். மக்கள் போராட்டங்களையும் மாணவர் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு என பயிற்றியளித்து பட்டம் வழங்கும் ஓரு விழாவில் தான் இவ்வாறு அறிவித்துள்ளார். சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அரசாங்கத்திற் புறம்பாக பல்கலைக்கழகங்களை நிறுவுவதனை எதிர்ப்பது துயரம் மிகுந்தது என்பதுடன் பாரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இவ்வாறான குறுகிய எண்ணங்களுடன் செயற்பட்டால் அது மாணவர் சமூகங்கள் பலவற்றை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்படுவதனை தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு துரித கதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் உயர் கல்வியில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இவ்வாறு தெரிவித்துள்ள ஜனாதிபதியும் அவரது சகோதரர் மகிந்தாவும் அவரது புதல்வர்களும் எத்தனையோ மாணவர்கள் போராட்டங்களை அடக்கியவர்கள் என்பது பழைய வரலாறு. ஏமாறுகின்றவர்கள் உள்ளவரையில் உலகில் எங்கும் ஏமாற்றுகின்றவர்களும் தங்கள் ‘வேலைகளை’ தொடர்ந்து செய்தே முடிப்பார்கள்.