LOADING

Type to search

மலேசிய அரசியல்

மனிதநேய சிந்தை கொண்டவர் டத்தோ சகாதேவன் டான்ஸ்ரீ குமரன், டான்ஸ்ரீ வீரசிங்கம் பிறந்த நாள் வாழ்த்து

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.20:

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளரும் தலைமை இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள், மனிதநேயமிக்க பண்பாளரும் நிருவாக மேலாண்மைமிக்க ஆற்றலாளரும் ஆவார் என்று டான்ஸ்ரீ க.குமரன் தெரிவித்துள்ளார்.

ஏராளமான அமைப்புகளில் ஆலோசகராகவும் புரவலராகவும் இருக்கும் சகாதேவன், இந்திய சமூகத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். வலது கையால் செய்யும் உதவியை இடது கை அறிவா வண்ணம் உதவுகின்ற பண்புநலம் மிக்கவர் சகாதேவன் என்பதை நேரில் கண்டுள்ளேன்.

குறிப்பாக, பொது அமைப்புகளின் வளர்ச்சிக்கும் அவை ஆற்றுகின்ற சேவைக்கும் துணைநிற்கும் இவர், இந்திய சமூகம் கல்வியில் மேம்பட்டுத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தை நெஞ்சம் நிறையக் கொண்டிருப்பவர்.

மலேசியவாழ் தமிழர்களின் தாய் மொழிக்கும் தமிழ் இலக்கிய மேன்மைக்கும் என 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியம், தற்பொழுது பன்னாட்டு அளவில் தமிழ்ப் பணியை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு சங்கத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் தலைமையிலான இந்த அறவாரியத்தின் தலைமை அறங்காவலராகவும் இருந்து தமிழ்ப்பணி ஆற்றிவரும் சகாதேவன், மலேசிய எழுத்தாளர்களை ஆதரித்து ஊக்குவித்தும் வருகிறார்.

அமைதியான தோற்றத்தையும் பாங்கையும் தன்னகத்தேக் கொண்டுள்ள டத்தோ சகாதேவன் அவர்கள் பிறந்த நாள் காணும் இந்த வேளையில் அவர் நீடு வாழ்ந்து சமூதாயத் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துவதாக மூத்தத் தலைவரும் மேநாள் துணை அமைச்சரும் டான்ஸ்ரீ சோமா அறவாரிய அறங்காவலர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ குமரன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் பி-40 தரப்பு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவிக்காகவும் அம்மாநில அரசால் பேராக் மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு வாரியத்திற்கு 2000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில், பேராக் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கூட்டுறவு சங்கம் தோட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொணடு கல்வித் தோட்டத்தை உருவாக்கியது. இதன் தொடர்பில் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட டத்தோ பா. சகாதேவன் அவர்களுக்கு பேராக் கல்வி அறவாரியத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கத்தின் முன்னெடுப்பும் முயற்சியும் இல்லை என்றால் 2000 ஏக்கர் நிலத்தில் கல்வித் தோட்டம் உருவாகி இருக்காது. பேராக் மாநில இந்தியர்களின் வளர்ச்சியில் மாநிலத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடும் உள்ளடங்கியுள்ளது.

அதனடிப்படையில், தமிழ்ப் பள்ளிகளின் வ்ளர்ச்சிக்கான நிலத்தில் வருமானம் கிடைக்கும் அளவுக்கு அந்தத் தோட்டத்தை மேம்படுத்தி கல்வித் த்ட்டத்தை உருவாக்கியதில் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களின் சமுக நல சிந்தனைக்கு ஏற்ப அந்த நிலத்தில் கல்வித் தோட்டம் உருவானதில் சகாதேவன் அவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதை அவரின் பிறந்த நாள் சமயத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

தவிர, கூட்டுறவு சங்கத் தோட்டங்களில் தமிழ்ப் பள்ளியையும், ஆலயங்களையும் உருவாக்கி அவற்றின்வழி கல்விப் பணியையும் ஆன்மிக சேவையையும் கூட்டுறவு சங்கம் ஆற்றிவருகிறது.

அந்த வகையில் பேராக் மாநிலத்திலும் கல்வி, ஆன்மிகப் பணியை கூட்டுறவு சங்கம் ஆற்றி வருகிறது. இதன் தொடர்பில் சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களுடன் இணைந்து டத்தோ சகாதேவன் அவர்களும் ஆற்றிவரும் பங்களிப்பும் ஈடுபாடும் குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட சகாதேவன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மலேசிய இந்திய சமுதாயத்திற்கு கல்வி, ஆன்மிக, சமூகப் பணியை ஆற்ற வேண்டும் என்று அவர் பிறந்த நாள் காணும் இந்த வேளையில் பேராக் கல்வி அறிவாரியத்தின் சார்பில் மீண்டும் வாழ்த்துவதாக தாப்பா நாடாளுமன்ற முன்னாள் மக்கள் பிரதிநிதியுமான டான்ஸ்ரீ வீரசிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24