LOADING

Type to search

அரசியல்

இந்தியாவில் உதயமானது சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்னும் புதிய அரசியல் கட்சி

Share

விவசாயிகள் போராட்டம் வெற்றியைத் தழுவிய நிலையில் தோன்றிய அடுத்த அரசியல் நகர்வு

இந்தியாவின் மோடி தலைமையிலான மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர், இந்த புதிய அரசியல் கட்சியின் தோற்றமானது தொடர்ச்சியான விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணிந்த மோடியின் அரசின் தோல்விக்குப் பின்னர் அவர்கள் அடைந்த வெற்றியின் விளைவாக தோன்றிய உற்சாகமே காரணம் என்று கருதப்படுகின்றது

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்தியாவின் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் உள்ளதாகக் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் தொடர்ந்து ஒரு ஆண்டாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் விவசாய சட்டங்களை இரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அரசு, பல மாத போராட்டத்திற்குப் பிறகு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

போராட்டம் நடைபெற்ற போது, தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக விவசாய அமைப்புகள் பிரசாரம் செய்தது.

அதேநேரம் விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதால் அதன் பிறகு அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்போம் என்றும் விவசாய அமைப்புகள் முதலில் கூறியது.

இந்தச் சூழ்நிலையில் பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விவசாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி வரும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமான அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்து 117 தொகுதிகளிலும் போட்டியிட சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா திட்டமிட்டுள்ளது. பெரும்பாலும் ஆம் ஆத்மி கட்சி உடனேயே சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவலை விவசாய அமைப்புகள் மறுத்துள்ளன. இருப்பினும், வரும் காலத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது.

இது தொடர்பாக விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் ஹர்மீத் சிங் கூறுகையில், “அந்தப் போராட்டத்தில் வெற்றி வென்றோம். அடுத்த தேர்தலிலும் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த குழு தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு மக்கள் இயக்கம். இது கட்சி இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எனவே இதில் வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்துவதில் தான் பணிகள் நடந்து வருவதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் விவசாய அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டன. அதேநேரம் இந்த புதிய கட்சிக்கு அனைத்து விவசாயச் சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிகாரம் மற்றும் வாக்குகளுக்குப் பின்னால் செல்லாமல், விவசாயிகள் போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சில விவசாயச் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.