தமிழக மீனவர்களின் கைதுகளில் பின்னால் உள்ளவர்கள் யார்? சட்டங்கள் மட்டுந்தானா?
Share
கதிரோட்டம்- 31-12-2021
கடந்த பல வருடங்களாக ‘எரியுயும் பிரச்சனையாக’ உள்ள இலங்கை இந்திய மீனவர்கள் எல்லைகள் தாண்டிச் செல்லும் பிரச்சனைகளும் அது தொடர்பாக இடம்பெறும் கைதுகளும் இறப்புக்களும் சிறைவாசங்களும் இன்னும் ‘மோசமாகவே’ தொடர்கின்றதை இரு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
குறிப்பாக இலங்கைக் கடற்படை சிப்பாய்களினால் கைது செய்யப்பட்டும். படுகொலை செய்யப்பட்டும் உள்ள தமிழக மீனவர்கள் சாதாரண கடற்தொழிராளர்கள் ஆவார்கள்.
அவர்களின் பலர் நாட் கூலிகளாகவே உள்ளார்கள் என்பது எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி தெரியவருகின்றது.
அவர்களை நிர்வாகம் செய்கின்றவர்களாக சிறிய முதலாளிகள். படகுச் சொந்தக்காரர்கள் என பல வட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு அடுத்ததாக உள்ள வட்டத்தில் நிச்சயம் அரசியல்வாதிகள்; இருப்பார்கள்.
இவ்வாறான நிலையில். இலங்கைக் கடல் எல்லைக்குள் தாங்கள் சென்றால் ‘ஆபத்து’ உள்ளுத என்பதை நன்கு தெரிந்து கொண்டிருந்தாலும் தமிழக மீனவர்கள் அடிக்கடி ஏன் அங்கு வருகின்றார்கள். ஏன் கைதாகின்றார்கள் என்ற நியாயமான கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் தோன்றுகின்றதே தவிர. மற்றவர்களுக்கு ஏன் தோன்றவில்லை என்பதும் ஓர நியாயமான கேள்விதான்.
இலங்கைக் கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி ஊடுருவுகின்ற விவகாரம் சமீப காலமாக பரபரப்பு அடைந்து வருகின்றது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருவது ஒருபுறமிருக்கையில், அம்மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
வடபகுதி கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் பலர் சமீப காலமாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மீன்பிடிப் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலானது இலங்கை மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டிலும் இவ்விவகாரமானது பதற்றமான நிலைமையொன்றை உருவாக்கியிருக்கின்றது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவலைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வடபகுதி மீனவர்களால் சில தினங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் இருந்தார்கள் என அறியப்படுகின்ற வேளையில், தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறலானது இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையில் கசப்புணர்வை வளர்த்து விடலாமென்ற அச்சம் இருநாட்டு தமிழின உணர்வாளர்களுக்கும் இல்லாமலில்லை. மீன்பிடி விவகாரத்தினால் முறுகல் நிலைமை அதிகரிக்குமிடத்து தமிழக மக்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டு விடலாமென்பதே எமது அச்சம் ஆகும்.