LOADING

Type to search

கதிரோட்டடம்

ராஜபக்சாக்களின் குடும்ப ராஜ்ஜியம் என்று எண்ணி மாங்கனித் தீவை ஆளவந்தார்களோ இந்த மகிந்த சகோதரர்கள்?

Share

கதிரோட்டம்- 07-01-2022

 

இலங்கை என்னும் மாங்கனித் தீவில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றி வெளிநாடுகளிலிருந்து செல்லும் சாதாரண உல்லாசப் பயணிகள் தொடக்கம். அரசு சார்ந்த உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு செல்லும் இராஜதந்திரிகளும் விதந்து பேசுவதும் பேசுவதுமாக உள்ள விடயம் எத்தனையோ தசாப்த்தங்களாக இடம் பெறுகின்ற ஒன்றாகும்.

இலங்கையில் மிகுந்த குறைந்த நிலப்பரப்பின் உறைவிடமாக விளங்கும் மலையகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும் தேயிலை பெருந்தோட்டச் செய்கை இலங்கையை பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைவதற்குரிய ஒரு ஏற்றுமதி உற்பத்திப் பண்டமாக விளங்கியும் கூட தற்போது தேயிலை என்னும் பணப் பண்டத்தை உற்பத்தி செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் போன்றே இலங்கை அரசும் பொருளாதாரத்தில் தள்ளாடுகின்ற நிலைக்கு வந்துள்ளதை உலகமே கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலைக்கு பல காரணங்கள் உண்டு என்பதை அறிந்தவர்கள் எம்மில் பலர் உள்ள நிலையில். இந்த வாரம் எமது ‘கனடா உதயன்’ பக்கங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து எழுதியுள்ள தனது வாராந்தக் கட்டுரையில் ‘நிலாந்தன்’ அவர்களும் கனடாவிலிருந்து எழுதியுள்ள தனது வாராந்தக் கட்டுரையில் கனடா நக்கீரன்’ அவர்களும் எழுதியுள்ள விடயங்களை எமது வாசகர்கள் படிப்பதற்கு முன்பாகவே வாசித்து அறிந்துள்ள ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர்களாகிய எமக்கு இந்த வார ‘கதிரோட்டத்தின்’ முக்கிய கருப்பொருளாக கோட்டாபாய அவர்கள் ‘கொட்டாவி’ விட்டவராக காணப்படும் நிலையும். அவ்வாறு இருந்தும் ‘விழுந்தும் மீசையில் மண்படவில்லை’ என்பது போல தங்களைக் காட்டிக் கொண்டாலும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும், நிதி அமைச்சரும் இன்னும் சில ராஜபக்ச அரசியல் வாரிசுகளும், தொடர்ச்சியாக அனைத்து தரப்பினராலும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதைக் காண்கின்றோம்.

இலங்கையில் தற்போது காணப்படும் நிலைக்கு யார் காரணம் என்று பார்த்தால் இந்த குடும்ப அரசியலின் பிரதிநிதிகளே என்று சுட்டுவதற்கு சில வினாடிகளே போதுமானவை.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்கள் இவர்களே என்றும். ஆரோக்கியமான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாத அரசியல் தலைவர் இவர்களே என்றும். நாட்டின் வளங்களை வெளிநாடுகளின் கரங்களில் தங்கத் தட்டுகளில் வைத்து கையளித்தவர்கள் இவர்களே என்றும், தொடர்ச்சியான விமர்சனங்கள் இந்த ராஜபக்சாக்களை நோக்கி நாள் தோறும் விரிந்த வண்ணமே செல்கின்றன.

ஆனால் நாட்டை இந்த நிலைக்கும் மக்களுக்கு சரியான தலைமையைக் காட்டாத அரசியல்வாதிகளாகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள, இந்த குடும்ப அரசியல்வாதிகளின் ‘பொருளதார வளம்’ வலுவாகவே உள்ளதா என்பதை சாதாரண மக்கள் கூட அறிந்து வைத்துள்ளார்கள் என்பது ராஜபக்சாக்களுக்கு விளங்காத விடயமல்ல.

நாட்டில் வாழும் சாதாரண நடுத்தட்டு மக்கள் கூட தங்கள் தெய்வ நம்பிக்கைகளை ஆலயங்களில் சமர்ப்பணம் செய்ய தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கே செல்லத் தயங்குகின்ற இந்த வேளையில் விமானமொன்றியில் பயணித்து கடல் தாண்டிச் சென்று தங்கள் குடும்பத்தின் நலன் வேண்டி திருப்பதியில் பிரார்த்தனையும் பூஜைகளும் செய்து திரும்புகின்ற பலன் இவர்களுக்கு மட்டுமே தவிர நாட்டு மக்களுக்கு உரித்தானது அல்ல என்றே இந்த குடும்ப அரசியல்வாதிகள் கருதுகின்றார்கள்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் சிக்கல்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வுகளில் கவனம் செலுத்துவது இவர்களின் நோக்கமல்ல. அதில் பிடிவாதமாகவே உள்ளார்கள் ஆனால் இலங்கையின் பொருளாதாரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய உலகின் மாறுபாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்றார்கள் இல்லை..

கோட்டாபய இராசபக்சாவும் அவரது குழுவினரும் இந்த முக்கியமான உண்மையைக் கவனிக்காமல் பிடிவாதமாகவே இருந்து வருகின்றார்கள் என்பது நன்கு தெரிகின்றது. மறுபுறம் கோட்டாபாயவின் மதி நுட்பக் குறைபாடுகளின் விளைவாக இராசயன உரத்தை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய அவர் எடுத்த நடவடிக்கை, இப்போது நாட்டை பஞ்சத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கையில் நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை களைந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்குவதன் மூலமே நாட்டை இந்த ‘குடும்ப அரசியல்வாதிகளிடம்’ இருந்து காப்பாற்றலாம் என்றே நாம் நம்புகின்றோம்.