இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு அலங்கார ஊர்தி நிராகரிப்பு குறித்து விசாரிக்கப்படும் என்கிறார் அமைச்சர் அமித்ஷா
Share
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக எம்.பிக்களிடம் உறுதி அளித்திருக்கிறார்..
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். இதில் தமிழக அரசு தொடர்ந்து பங்கேற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காந்தி சிலை மற்றும் கோவில் கோபுரம் இடம்பெற்றிருந்தது. அதேபோல் கடந்த 2020ல் அய்யனார் சிலையும், 2021 ஆம் ஆண்டு மகாபலிபுரம் கோவில் சின்னமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசு அனுப்பியிருந்த புகைப்பட மாடலில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாக தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகின.. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின..
தமிழக அரசு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்வில் தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கக்கோரி இன்று மாலை தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. அப்போது தமிழக அரசு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து எம்.பிக்கள், அமித்ஷாவிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள்.. இதனையடுத்து தமிழக அரசு அலங்கார ஊர்தி நிராகரிப்பு குறுத்து விசாரிப்பதாக, டி.ஆர் பாலு உள்ளிட்ட தமிழக எம்.பிக்களிடன் அவர் உறுதி அளித்திருக்கிறார்.