‘கோவிட்-19 தொற்று எண்ணிக்கை’ மலேசிய அரசியலில் ஒரு துருப்புச் சீட்டா
Share
தவிர்க்கும்படி எதிரணித் தலைவர்கள் கோரிக்கை:
நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.10:
நாட்டின் தென்கோடி மாநிலமும் சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதியுமான ஜோகூர் மாநிலத்தில் தேர்தல் தேதி மார்ச் 12 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைய சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை ஐந்து இலக்கத்தை எட்டியுள்ளது.
அதனால், இந்த மாநிலத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்; அல்லது, தேர்தலை நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிரணியான நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மாறாகா, தேர்தலையும் அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்த நடமாட்ட கட்டுப்பாட்டையும் விதிக்கக்கூடாது என்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை அரசியலில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாதென்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமானாக் கட்சித் தலைவர் முகமட் சாபு, ஜசெக-வின் லிம் குவான் எங், உப்கோ கட்சியின் Wilfred Madius Tangau ஆகியோர் கொண்ட குழு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மலேசிய அரசியலின் போக்கை, கடந்த இரு வருடங்களாக அவதானித்து வருபவர்களுக்கு ஓர் உண்மை புரியும். மலேசியத் தலைவர்களும் பதவியில் இருக்கும் உயர்மட்டத் தலைவர்களும் அரசியலில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் கொரோனா நச்சிலைக் காரணம் காட்டி அதற்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்.
அதைப்போல, அவர்களுக்கான அவசியம் நேரும்போதெல்லாம் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதைக் காணமுடியும்.
அந்த வகையில் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைய நாட்களாக கொரோனாத் தொற்று ஐந்து இலக்கத்தைக் கடந்து அறிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 20-ஆம் நாள் நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலைப் போல ஜோகூர் மாநிலத் தேர்தலிலும் கடுமையான SOP நடைமுறைகளை அறிவித்து, எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாதபடி முடக்கிவிட்டு, மலாக்கா பாணியில் அம்னோவும் அதன் தலைமையிலான தேசிய முன்னணியும் குயுக்தியான முறையில் தேர்தல் அறுவடை செய்ய திட்டமிடப்படுகிறதா என்ற ஐயம் மலேசிய அரசியலில் பரவலாக எழுந்துள்ளது.
2021 ஜனவரி 12-இல் கொல்லைப்புற ஆட்சியின் முதல் அங்கத்தின் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், அவசர காலச் சட்டத்தை அதிரடியாக நாட்டில் அறிவித்தபோது, கொரோனாவைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார்.
2021 ஆகஸ்ட் முதல் தேதிக்குப் பின் அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்படாது என்ற உறுதியை முகைதீன் அளித்திருந்தாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டிருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் நூலிழை பெரும்பான்மையில்தான் அவருடைய ஆட்சி அதிகாரா நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருந்தது.
அதனால், எதிர்க் கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தை முடக்கை வைப்பதை குறிக்கோளாகக் கொண்டுதான் அவர் அவசர கால சட்டத்தை கையில் எடுத்தார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த காலக் கட்டத்தில் கொரோனா பரவல் ஒன்றும் அந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வில்லை. ஆசிய மண்டல நாடுகளில், மலேசியாவின் கொரோனா தொற்று விகிதம் உச்சத்தில் இருந்ததையும் நாடு கண்டு வந்தது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை 2021 ஜூலை 26, திங்கட்கிழமை முகைதீன் கூட்டினார்.
அப்போது சட்ட அமைச்சர் தக்கியுடின் ஹசான், அவசர காலச் சட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ஜூலை 21-ஆம் நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.
அவசர காலச் சட்டத்தை மாமன்னர்தான் பிரகடம் செய்தார்; அதன்படி அவர்தான் இந்த அறிவிப்பை மீட்டுக்கொள்ள முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, யாருக்கும் தெரியாமல் இந்த முடிவை எப்படி இரகசியாக எடுக்க முடியும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இது ஒன்றும் சந்தை அல்ல; விருப்பம்போல முடிவு எடுப்பதற்கு; எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் முறையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன் இதன் தொடர்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.
ஜூலை 29, வியாழக்கிழமை இந்தத் தீர்மானம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றபொது, அதை எதிர்கொள்ள முடியாமல் 4 நான்கு தடவை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
நண்பகல் வேளையில் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் பிற்பகலில் கூடும் என்று அறிவித்த நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ Azhar Azizan Harun, பின்னர் நாடாளுமன்ற ஊழியர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்று மாலையில் அறிவித்தார். அதேவேளை, பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சாசன விதிகளின்படியே அவசரகாலச் சட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த விவகாரம் அத்துடன் முடிந்தது. முகைதீன் தலைமையிலான அரசு, அந்தமட்டில் தப்பித்துக் கொண்டது.
பின்னர், அம்னோ பின்னிய கன்னியில் சிக்கி பதவி விலகியபின், முகைதீன் தன் அபிமானத்திற்குரிய டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியை அந்தப் பதவிக்குக் கொண்டு வந்தார். இந்த இருவரும் ஜாடிக்கேற்ற மூடியைப் போல நடந்து கொள்ளும் நிலையில்தான் கடந்த நவம்பரில் மலாக்கா மாநிலத் தேர்தல் திணிக்கப்பட்டது.
அப்போது, கொரோனாவைக் காரணம் காட்டி, தேர்தல் பிரச்சாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. கடுமையான SOP நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட அந்தத் தேர்தலில் அம்னோ நல்ல பலன் அடைந்தது.
இப்போது, இன்னும் ஒரு மாதத்தில் ஜோகூர் மாநிலத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த மலாக்கா தேர்தலில் எதிர்க்கட்சிகளை முடக்கியதைப் போல ஜோகூரிலும் நடத்தி முடிக்கவோ என்னவோ கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஐந்து இலக்க எண்ணிக்கையில் காட்டப்படுகிறது.
மொத்தத்தில் அம்னோவும் கொல்லைப் புற ஆட்சியாளர்களும் தங்கள் மனதிற்குள் கொரோனாவிற்கு வாழ்த்து சொல்லக்கூடும்.!