LOADING

Type to search

அரசியல்

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆஜர்; கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு “தெரியாது… தெரியாது…” என்று பதில்

Share

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடந்தது.  கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் “தெரியாது… தெரியாது…”  என்றே பதில் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

8 முறை ஆஜராகாத அவர் நேற்று ஆணையத்தின் முன் ஆஜரானார்.அவரிடம் அப்போது இரண்டு மணி விசாரணை நடைபெற்றது.

அப்போது ஆணையத்தின் சார்பில், ’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியுமா?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ’மறைந்த ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி தெரியாது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. அந்தசமயம் நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் எனது உதவியாளர் மூலமாகவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன்’ என்றார்.

ஆணையம் அமைக்கக்கோரியது யார்?

’விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? விசாரணை ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்?’ என்று ஆணையத்தின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:

பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பார்த்தேன். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் நடத்திய காவிரிக் கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. காவிரிக் கூட்டம் குறித்து அறிக்கை வந்தபின்னரே அதுகுறித்து தெரிந்துகொண்டேன். காவிரி கூட்டத்தில் ஜெயலலிதா தனக்கு டிக்டேட் செய்ததாக அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறினார்.

இந்த காவிரிக் கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதாவிற்கு இதய பிரச்சினை ஏற்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவரது இதய பிரச்சினை குறித்து விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’

இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

வெளிநாட்டு சிகிச்சை

மேலும், ’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க தடையாக இருந்தது ஏன்?’ என்று ஆணையத்தின் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ” அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆரை போன்று ஜெயலலிதாவையும் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் கூறினேன்.

அப்போலோ மருத்துவர்களுடன் கலந்து பேசிய பின்னர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று விஜயபாஸ்கர் கூறினார். அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியிடம், இதே கருத்தை வலியுறுத்தினேன். ஆனால், ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா திரும்பி விடுவார் என்று விஜயகுமார் கூறினார். அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் எதுவும் கூறவில்லை.

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து என்னிடம் கேட்டிருந்தால், உடனே கையெழுத்து போட்டிருப்பேன். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்” என்று ஓபிஎஸ் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை ஆணையம், உணவு இடைவெளிக்குப் பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட்டது.

சிசிடிவி கேமரா

அதன்படி பிற்பகல் ஆணையத்தின் முன் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு நான் கூறவில்லை. ஜெயலலிதாவின் நோய் தன்மையைப் பொருத்து வெளிநாடுகளில் மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் சிகிச்சையளிக்க அரசியல் பிரபலங்களை அழைத்துச் செல்வதில் தவறுகள் எதுவும் கிடையாது. இதுபோல் கடந்த காலங்களிலும் நடைபெற்று உள்ளது.

நான் தர்மயுத்தம் நடத்திய 7 மாத காலத்தில் வெளியிட்ட தகவல்கள் அனைத்துமே சரியானது. சமின் சர்மா என்ற மருத்தவர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று  கூறினார்.

78 கேள்விகள்

நேற்று மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஒரு சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அவர், பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு ’எதுவும் தெரியாது’ என்று கூறினார். இதையடுத்து விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், இன்று (மார்ச் 22) மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.