இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதி: இந்தியப் பயணம் ஒத்தி வைப்பு
Share
இந்தியா-இஸ்ரேல் இடையேயான தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமாராக பதவியேற்ற நஃப்தலி பென்னட்டை, கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசு முறை பயணமாக நஃப்தலி பென்னட் வரும் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். ஆனால் நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது இந்தியப்பயணம் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டின் இந்தியப்பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் முகமது ஹெய்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹடேராவில் இரு போலீஸ்காரர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நஃப்தலி பென்னட் ஹடேரா நகரத்திற்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நஃப்தலி பென்னட்டின் இந்தியப் பயணத்திற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.