LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியத் தமிழர்களின் – இந்தியர்களின் ஊடக ஒளிக்கீற்று-தகவல் பெட்டகம்: மின்னல் பண்பலை வானொலி

Share

2022 ஏப்ரல் முதல் நாளில் 76-ஆம் ஆண்டை எட்டும் மின்னல் பண்பலை வானொலிக்கு முதற்கண் மனமார்ந்த வாழ்த்து உரித்தாகட்டும்!.

மலேசியவாழ் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழில் புத்தாக்கப் பணியை காலந்தோறும் மேற்கொண்டு வருவதுடன் இணைய யுகத்திற்கும் 21-ஆம் நூற்றாண்டுக்கும் ஏற்ப தமிழை செம்மைப்படுத்தி செதுக்கியும் புதுப்பித்தும் வரும் ஒரே அமைப்பு இந்த மலையக மண்ணில் ஆர்டிஎம் மின்னல் பண்பலை வானொலிதான்; குறிப்பாத அதன் செய்திப் பிரிவினர்.

இம்மலைத்திருநாட்டில் தமிழ் இனம் சார்ந்தும் மொழி சார்ந்தும் எண்ணற்ற அமைப்புகள் இருந்தாலும், தமிழில் புத்தாக்கப் பணியை இடையறாது மேற்கொண்டு வரும் மின்னல் வானொலியின் செய்திப் பிரிவினருக்கு மலேசியத் தமிழர்கள் எஞ்ஞான்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

மின்னல் வானொலி செய்திப்பிரிவினர் நூற்றுக் கணக்கான புதிய சொற்களை உருவாக்கி, அல்லது புதுப்பித்து வானவீதியில் தவழவிட்டு வருகின்றனர். அத்தகைய சொற்களில் மகுடத்தைப் பொன்ற ஒரு சொல் மறைகாணி.

இந்தச் சொல்லை சொல்லுந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளத்தில் இன்ப வெள்ளம் பெருக்கெடுக்கும். கேட்குந்தொறும் செவியில் தேனாறு பாயும்.

தொடக்க நாட்களில் சிசிடிவி கேமெரா என்றும் பின்னர் இரகசிய கேமரா என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு தமிழில் ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்கி, அதை பலுக்கியும் வருகின்றனர்.

பூஜியத்தை மாற்றி சுழியம், அபராதம் என்பதற்குப் பதிலாக தண்டம், டயர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வட்டகை, விண்ணப்ப பாரம் அல்லது மனுபாரம் என்பதை விண்ணப்பப் படிவம் என்று மாற்றியது, ‘ட்விட்டர்’ என்பதை கீச்சகம் எனல், இன்ஸ்தாகிராமை படவரி எனல், Cake-அணிச்சல், Chocolate-இன்னட்டு, Calculator-கணிப்பான், இடைநிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை படிவம்-1, படிவம்-2, படிவம்-3 என்பதையெல்லாம் திருத்தி, 4-ஆம் படிவம், 5-ஆம் படிவம் என்று தமிழ் மரபுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தது போன்றவறை சான்றாகக் குறிப்பிடலாம்.

இதில் அண்மைக்காலமாக வானொலி செய்திப் பிரிவில் உலா வரும் இன்னோர் இனிய சொல் ‘சந்திப்புறுதி’; Appointment என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத்தான் இந்த புதிய கலைச்சொல்லை மின்னல் பண்பலையின் செய்திப் பிரிவினர் உருவாக்கி உள்ளனர்.

தமிழில் புதிய கலைச்சொல் உருவாக்கப் பணியில், சில வேளைகளில் தேசிய மொழியான மலாயின் தாக்கம் இழையோடி இருப்பதையும் காண முடிகிறது. இது, தவிர்க்க முடியாததுதான் என்றாலும், இன்னும் சற்றே முயன்றால் அதையும் தவிர்க்கலாம்.

போட்டி விளையாட்டு, வெட்டுமர நடவடிக்கை, மணி பத்து போன்ற சொற்றொடர்களில் தேசிய மொழியின் தாக்கம் அப்பட்டமாகத் வெளிப்படுகிறது; அதைப்போல ‘Undivided Support’ என்பதை காலமெல்லாம் ‘பிளவுபடாத ஆதரவு’ என்றே சொல்லுக்கு சொல் என்ற பாணியில் மொழிபெயர்த்து பலுக்குவதும் சிறு மாசுதான். ஆதரவு என்றானபின் ‘பிளவு’ என்பது என்பதைத் தவிர்த்துவிட்டு முழு ஆதரவு அல்லது ஒன்றுபட்ட ஆதரவு எனலாம்.

மொத்தத்தில், இந்த மலையகத்தில் தமிழ் கலைச்சொற்களை உருவாக்கி, மொழியில் புத்தாக்கம் படைத்து தமிழ்த் தொண்டாற்றிவரும் மின்னல் வானொலி அறிவிப்பாளர்கள், குறிப்பாக அதன் செய்திப்பிரிவினர் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் என்பதை மீளவொரு முறை பதிவு செய்கிறேன்.

இதில், குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சம், மின்னல் பண்பலை வானொலியில் பணிபுரியும் நளினி, சத்தியா, குணசுந்தரி, கிஷன், திரேசா, சுகன்யா, பிரேமா கிருஷ்னன், தெய்வீகன், மோகன், காயத்ரி கண்ணம்மாள், அஸ்வினி, பவின், சகுந்தலா உள்ளிட்ட அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் குழுவாக சேர்ந்து ஆங்கில கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கலை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இவை பெரும்பாலும் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயனுற அமைகின்றன.

நாடு விடுதலை அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கப்பட்ட இந்த வானொலிக்கு நெடிய வரலாறு உண்டு; அதேவேளை இது கடந்துவந்த பாதை, மலையையும் மடுவையும் கடந்து வந்ததைப் போன்றது.

இதன் நிகழ்காலத் தலைவராக இருப்பவர் கவித்திரு கிருஷ்ணமூர்த்தி; இவரின் தலைமையில் இயங்கும் மின்னல் பண்பலை வானொலி, கொரோனா பருவத்திற்கு ஏற்ப தன்னை தக அமைத்துக்கொண்டு சமூக நலப் பணியில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.

மின்னல் வானொலியின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள இனிமை, இளமை, புதுமை என்னும் சொற்களுக்கு ஏற்ப இவ்வானொலி நிலையம் பயணித்து வந்தாலும், இந்த வானொலி தொடங்கி 15-ஆம் ஆண்டில் தலைமை ஏற்ற இரா. பாலகிருஷ்ணனின் காலம் இந்த அரச வானொலிக்கு வசந்த காலம் எனலாம்.

அவரின் காலத்தில்தான், சமற்கிருத சாயல் கொண்ட ஏராளமான சொற்கள், நற்றமிழ் வடிவம் பூண்டன. ஆரம்பம் என்பதற்குப் பதிலாக தொடக்கம்; கானம் என்பதற்கு மாற்றாக பாடல்; அதைப்போல சபைக்கு பதில் அவை, கோஷ்டி கானம் என்பதை மாற்றி குழுப்பாடல், உபயோகத்தைத் தவிர்த்துவிட்டு பயன், பிரயாணிகளை மாற்றி பயணியர் என்றது, பாராளுமன்றம் நாடாளுமன்றம் ஆனது, சந்தோசம் இடம்பெயர்ந்து மகிழ்ச்சி குடிகொண்டது; வந்தனம் வணக்கமாக மாறியது, ராஜா அரசரானது போன்றவற்றைச் சுட்டலாம்.

அதைப்போல, திரு. பார்த்தசாரதி, திரு. இராஜசேகரன் போன்றோரின் காலத்திலும் அந்தந்த காலத்திற்கேற்ப தமிழ் வளர்ச்சிப் பணி தொடர்ந்தது.

இது ஒரு தகவல் ஊடகமாக இருந்து, நம்பகமான செய்திகளை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு இனிமையும் புதுமையும் கலந்து இனிமை சேர வழங்கிவரும் மின்னல் பண்பலை வானொலி வாழ்க! வாழ்க!!

அதன் சேவை தொடர்க! தொடர்க!!

முன்பெல்லாம் காலை 11:00 மணி உலகச் செய்தி அறிக்கையைக் கேட்டால் உலகையே வலம் வந்த உணர்வு உள்ளத்தில் எழும்; அதைப்போல இரவு 11:00 செய்தித் தொகுப்பைக் கேட்டால் அன்றைய மலேசியாவை நம் மனக்கண் முன் நிறுத்தி விடுவார்கள்.

கடந்த நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட நேரத்தில் இவ்விரண்டு 10 நிமிட செய்தி அறிக்கைகளைப் பாதியாகக் குறைத்தாது சமுதாயத்திற்கு பெரு நட்டம்.

நாளேடுகளில் நான் பணிபுரிந்த காலத்தில் ‘ஒருசேர’, ‘சங்கப் பதிவகம்’ போன்ற சொற்றொடர்களை அறிமுகம் செய்தேன். அவற்றையும் மின்னல் செய்திப் பிரிவு எடுத்தாள்வது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியானது; நற்றானியம் எங்கு தென்பட்டாலும் கொத்தி எடுத்துக் கொள்ளும் புறாவின் போக்கு மின்னல் வானொலி செய்திப் பிரிவிடம் தென்படுவதை உணர்கிறேன்.

மீண்டும் ஒரு முறை ‘வாழ்க மின்னல் பண்பலை வானொலி’ எனச்சொல்லி நிறைவு செய்கிறேன்.

-நக்கீரன்