LOADING

Type to search

கதிரோட்டடம்

இலங்கைக்கான தமிழக அரசின் உதவிகள் மக்களுக்காகவா அன்றி??

Share

கதிரோட்டம் 06-05-2022

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர் சிங்களவர் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என்ற நால் வகை மக்களும் ஒரே வகையான இடர்களையே சந்தித்து வருகின்றனர். இந்நெருக்கடி நிலைக்கு விரைவாகவும் வேகமாகவும் தீர்வு காணவென அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டாலும் அந்த நடவடிக்கையிலும் பார்க்க ஜனாதிபதியையும் பிரதமரையும் மற்றும் ‘கோடரிக்காம்புகளாக’ மாறிவிட்ட தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரையும் பாதுகாக்கும் முயற்சிகளே அங்கு அதிகமாக எடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கின்றோம்.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இந்நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு உதவும் வகையில் உதவி ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றன. நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்கவும் பல நாடுகள் முன்வந்துள்ளன.

இவ்வாறான சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு இந்திய மத்திய அரசின் உதவி ஒத்துழைப்புகளுக்கு மேலதிகமாக, தமிழ்நாடு மாநில அரசு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் அடங்கலான மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கென மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக விஷேட தீர்மானமொன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே தமிழகத்திலிருந்து எந்த விண்ணப்பங்கள் மத்திய அரசிற்கோ அன்றி பிரதமர் மோடிக்கோ அனுப்பப்படுகையில் அவை நிராகரிக்கப்பட்டோ அன்றி தட்டிக்கழிக்கப்பட்டோ இருக்கும் நிலையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தமிழ்நாட்டு அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு காரணம் மக்கள் சார்ந்த நன் மதிப்பா அல்லது சார்ந்த உறவின் வெளிப்பாடா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை நாம் கவனித்து வருகின்றோம். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மனிதாபிமான உதவிகள் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபாய ‘வாய்’ திறக்காத நிலையில் அவரது சகோதரர் மகிந்தா தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சர் அவர்களின் சகோதரி கனிமொழி கொழும்பு சென்று மகிந்தாவோடு குசலம் விசாரித்து பரிசுப் பொருட்களையும் பரஸ்பரம் பெற்றுக்கொண்டதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. அவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற வகைக்கும் அடங்கியுள்ளார்கள். எனவே அவர்களின் சந்திப்புக்களும் அவசியமானவையே.

இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ள விடயம் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் அதிர்வலைகளைத தோற்றுவித்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்கள் ‘வெளளம் வரும் முன்னர் அணையைக் கட்டியிருக்கலாமே” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது . மேலும் நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு நல்ல தொலைநோக்கு பார்வைகள் மற்றும் திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறியதாகவும் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவித்துள்ளமை பலருக்கு மூ;க்கில் விரலை வைக்கச் செய்துள்;ளது என்றும் கூறலாம்.

துனது மந்திரிகள் மீது பழியைப் போட்டுள்ள கோத்தபாய மாளிகைக்குள் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இருக்கின்றபோது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பதிலாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மக்கள் போராடி வருவதையும் இதுவரை காலமும் இடம்பெறாத வகையில் ஆட்சியில் உள்ளவர்கள் பதவிகளை விட்டு நீங்க வேண்டும் என்ற ‘கொந்தளிப்பான’ நிலை வெந்து கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டு மக்களின் உதவிகள் தென்னிலங்கை மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் தவறிழைத்த இலங்கை அரசின் தலைவர்கள் பதவிகளுக்குரிய நாற்காலிகளை விட்டு ‘வீடு’ செல்ல வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்து அந்த ‘கொதிக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களில் சிலராவது இலங்கை அரசின் தலைவர்களாக இன்னும் வீற்றிருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எவவாறாயினும், தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவியை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் என்பதையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம்