LOADING

Type to search

பொது

காதலனுடன் சென்னைக்கு வந்த சிறுமியை போலீசார் எனக் கூறி மிரட்டி லாரி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை

Share

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஜீவானந்தம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, நெருக்கமாக பழக ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

சில நாட்கள் செல்போன் மூலமே காதல் கோட்டை கட்டி வந்த இந்த ஜோடி, நேரில் சந்தித்து அன்பை பரிமாறிக் கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த 8-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது காதலன் ஜீவானந்தத்தை சந்தித்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து பழனி, கோவை, பொள்ளாச்சி என ஊர் ஊராக ஜோடிக் கிளிகளாக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், 10-ந் தேதி சென்னை வந்த இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்துவிட்டு, ஜீவானந்தத்தின் வீட்டுக்கு சேலம் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், நள்ளிரவு நேரத்தில் சிறிய வயது காதல் ஜோடி பேருந்து நிலையத்தில் தனியாக நிற்பதை பார்த்து, தாம் ஒரு போலீஸ் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார்.

பின்னர், உங்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது, விசாரிக்க வேண்டும் என கூறிய அந்த நபர், இருவரையும் பைக்கில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஜீவானந்தத்தை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு, சிறுமியை வலுக்கட்டாயமாக பைக்கில் கொண்டு சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மீண்டும் இருவரையும் அழைத்து வந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

செய்வதறியாமல் இருந்த ஜீவானந்தம் சிறுமியை சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். மாணவி தனக்கு நிகழ்ந்த சம்பவங்களை ஜீவானந்தத்தின் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மாணவியுடன் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கிருந்து போலீசார், மாணவியிடம் நடத்திய விசாரணையை வைத்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருமங்கலம் போலீசார், ஆத்தூர் சென்று சிறுமியையும், ஜீவானந்தத்தையும் மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி சென்னையில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது வளசரவாக்கத்தை சேர்ந்த ஆண்டனி அலெக்ஸ் என்பதை கண்டறிந்தனர்.

இவர் பிரபல பிஸ்கட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக இருப்பதும் தெரியவந்த நிலையில், போலீசார் என ஏமாற்றி மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆண்டனி அலெக்ஸையும், சிறுமியின் இன்ஸ்டாகிராம் காதலன் ஜீவானந்ததையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு மதுரையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.