LOADING

Type to search

கனடா சமூகம்

ஈழத்துச் சிறப்பிதழை படைக்கும் குழுவினரைப் போற்றுவோம்

Share

கீழ்வானில் எழுந்துவரும்
இளம் பரிதி ஒளிவீச்சின்
செழுங்கதிராய்ச் சிவந்து விடும்,
‘கதிரோட்டம்’ தலை தாங்கி
வாரத்தில் வெள்ளிதோறும்
விருப்புடன் விரிகின்ற உதயன்
தமிழ் ஏட்டின் அகவை
வெள்ளி ஆண்டு கடந்து – மேலும்
ஓராண்டு கூடி வாசிக்கத்தூண்டி
நேசிக்க வைக்கும் பல்சுவைச் செய்திகளை
கவிதை – கட்டுரை, காதல் கதைகள்,
களமாடும் அரசியம் சமூகத் தகவல்களுடன்
வளம் பெருக்கும் வாணிப வர்த்தக
விளம்பரங்களுடன் வேடிக்கை விநோத
சினிமாப் புதினங்களையும் படம் பிடித்து
பளபளப்பாய் பக்கங்கள் கூடிவர
படிப்போரின் ஆவலும் கூடியே வருகிறது!

இற்றைக்குக் கால் நூறு ஆண்டுகள்
முன்பாக, வற்றாத தமிழுற்றில்
மூழ்கிய ஐவர் கைகோர்த்து
தமிழ் பரிதி இதுவென்று! சூரியன்
நாமத்தைத் தாங்கிவரும் ஏடாக
அறிமுகம் செய்து வைத்து,
ஆனந்தம் மிகக் கொண்டார்!

பாண்டவர்கள் ஐவரும்
வேண்டிய தமிழ் ஏட்டை
தலைமையேற்று எழுதுதற்கு
கலையுணர்வு மிகக் கொண்டு
கதை – கவிதை – கட்டுரைகள்
கல்லூரி நாட்களிலே
‘மலையன்பன்’ புனைபெயரில்
எழுதியே புகழ் பெற்ற
இளந்தமிழர் ஆர்.என். லோகேந்திரலிங்கம்
தலைமையிலே ஒப்படைத்து உயர்வு கண்டார்!

தமிழுக்கும் தமிழருக்கும் ஊறு வந்தால்
துடித்தெழுதும் எழுத்தாணிக் காவலன்
இவராமோ! என வியப்புற்ற தமிழரெல்லாம்
தமிழின் விடியலுக்கு உரமூட்டும்
‘கதிரோட்டம்’ எழுதி ‘இதுவரை’
தலை நிமிர வைத்தார்!

கலையுணர்வு மிகக் கொண்டு
அரங்க நிகழ்வுகளை அறிமுகம் செய்து வைப்பார்,
ஆடல் பாடலுடன் அரிதாரம் பூசிவரும்
நாடக வடிவங்கள், நாட்டியப் படைப்புக்கள்
கவியரங்கு – கதை சொல்லல் – மெல்லிசை பாடுதல்,
வானொலி – தொலைக்காட்சி நேர் காணல்கள்,
அதுமட்டுமல்ல, இணையவழி உரையாடல்கள்
ஆண்டுதோறும் தகுதிகண்டு ‘நண்பன் விருதும்,
’உதயன்’ தமிழ்ப்பணியை உலகிற்குப் பறைசாற்றும்
’உதயன் விழா’ விருதும் வழங்கியேதான்,
கடல் கடந்து, தமிழ்கூறும் நல்லுலகில்
கனடாவின் கலைத்தூதுவராகப் பவனி வந்து
பொன்விழாக் காணும் புதிய தமிழரிவர்,
‘மண்பித்து’ மிகுந்துவர
தாய்மண்ணாம் இலங்கையிலே
இலக்கியம் செய்தோர்கள்
ஏடெடுத்து எழுதினோர்கள்
எழுதுகோல் வேந்தர்கள்
ஈழத்து – மலையகத்து மற்றும் மாகாண,
மாநகரத்துப் படைப்பாளிகள்
பலரை நினைவு கூர்ந்து,
பட்டியலை எழுதுங்கால்
ஈழத்தின் வணக்கத்திற்குரிய எழுத்துச் சித்தர்களையும்
வாழும் இலக்கியப் படைப்பாளிகளையும்
வாழ்த்தி வணங்கியேதான், தங்களை வாசிக்க
வைத்தவர்களைப் பதிவு செய்து மகிழ்கிறேன்.

அகஸ்தியர்
அ. முத்துலிங்கம்
தெணியான்
திக்குவெல கமால்
பெனடிகற் பாலன்
தெளிவத்தை ஜோசப்
நெல்லை க.பேரன்
இளங்கீரன்
திமிலைத் துமிலன்
செங்கை ஆழியான்
செம்பியன் செல்வன்
மு. நித்தியானந்தன்
க. நவம்
சிவசேகரம்
செ.யோகநாதன்
திருமலை.நவம்
மு. சிவலிங்கம்
சுபத்திரன்
உ.சேரன்
உருத்திரமூர்த்தி (மகாகவி)
நல்லை அமுதன்
புதுவை இரத்தினதுரை
கொற்தை கிருஷ்ணா
எஸ். பொன்னுத்துறை
கவிஞர். சோ.ப.
ஈழவாணன்
செ. கதிர்காம நாதன்

மாத்தளை சோமு
நந்தினி சேவியர்
டொமினிக் ஜீவா
கே. டேனியல்
சொக்கன்
தேவன்
நீர்வை பொன்னையன்
குறமகள்
பாலேஸ்வரி
காவலூர் ராஜதுரை
காரை சுந்தரம்பிள்ளை
கைலாசபதி
கா. சிவத்தம்பி
சு. வித்யானந்தன்
வறணியூரான்
வ.இ. ராஜரத்தினம்
லெ. முருகபூபதி
என்.கே. ரகுநாதன்
வவுனியா உதயணன்
தையிட்டி அ. ராஜதுரை
நடமாடி கே.வி.ஆர்.
சில்லையூர். செவ்வராஜன்
கமலினி
வல்லை அனந்தராஜா
கமலா பெரியதம்பி
பால மனோகரன்
ஐ. ரி. சம்பந்தன்

இன்னமும் மனதில் புதைந்து நினைவில் வருவதற்கு தாமதமாகிறவர்களுக்கும் – இன்று புதிதாகப் பிறந்து உதயன் ஈழத்துச் சிறப்பிதழை உரமூட்டி அலங்கரிக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

– வீணைமைந்தன்