LOADING

Type to search

மலேசிய அரசியல்

கனடா உதயன் ஆதரவு- மலேசிய ரவாங் ராஜா ஏற்பாடு

Share

மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களின் நாவன்மை நிகழ்ச்சி ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது

– நக்கீரன்

 

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வண்ணம், வான வீதியில் உலா வரும் கனட உதயன் இதழ், வெள்ளிதோறும் உதயமாகும் வார இதழாகவும் பவனி வருகிறது. உதயனின் இத்தகைய செம்மாந்த ஊடகப் பயணம், 26-ஆவது ஆண்டை எட்டியுள்ளதையும் உதயன் ஊடகத்தின் தலைமை ஆசிரியர் திருவாளர் என்.லோகேந்திர லிங்கம் அவர்களின் பத்திரிகை-கலை-சமூகவெளிப் பயணம் பொன் விழாவைத் தொட்டுள்ளதையும் ஒருசேரக் கொண்டாடும் உன்னத விழா கனடா ஸ்கார்பரோ பெருநகரில் இன்று மாலையில் கொண்டாடப்பட இருக்கும்  வேளையில், மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நாவன்மை நிகழ்ச்சியைச் சிறப்பிக்க அதிகாலையில் எழுந்துவிட்டார், இந்த நிகழ்ச்சிக்கு வேரும் விழுதுமாக இருக்கின்ற அண்ணன் லோகேந்திர லிங்கம் அவர்கள் “ஓடும் மான் அழகு; நீந்தும் மீன் அழகு; ஆடும் மயில் அழகு; கூவும் கருநிறக் குயிலும் அழகு; ஆனால் சொல்லில் தமிழ்தான் அழகோ அழகு” என்றெல்லாம் இலகுவாகப் பேசி, கேட்போரின் சிந்தயை கொள்ளை கொள்ளும்வண்ணம் இலக்கிய உரை ஆற்றும் தமிழகப் பேச்சாளர் அரங்க நெடுமாறன் அறிமுகம் செய்து வைத்த மலேசிய இளம் பாடகர் ரவாங் ராஜா ஏற்பாட்டில், கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி இன்று ஓராண்டை நிறைவு செய்வதை எண்ணியெண்ணி மகிழ்வதாக, நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய லோகேந்திர லிங்கம் சொன்னார்.

காலைக் கதிரவன் தரும் புத்துணர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாவன்மை படைக்கத் தயாராக இருக்கும் ஐந்து மாணவச் செல்வங்களைப் பார்க்கும்பொழுது, இன்று புதிதாகப் பிறந்தோமோ என்ற புத்துணர்வு புதுவெள்ளத்தை உள்ளத்தில் பாய்ச்சுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாடகர் ராஜா, ஏதோ போகிற போக்கில் சொல்லி வைத்த மாணவர்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் தந்தாலும், மாதந்தோறும் நிறைவு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியத் தரப்பினரை ஒருங்கிணைத்து நெறியாளர் ஆசிரியர் சரளா சுப்பிரமணியத்தின் பாங்கான ஒத்துழைப்புடன் மாதந்தப்பாமல் நிகழ்ச்சியைப் படைப்பது பெரும்பாடு என்பதை அறிவேன்.
அதை அயராமல் கடந்த 12 திங்களாக மேற்கொண்டு வரும் ராஜாவிற்கு தன் மனப்பூர்வமான நன்றியை வெளிப்படுத்தவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில், அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அடுத்த ஆண்டில் மலேசியாவில் ஒரு சிறப்பான விழாவை உதயன் இதழின் சார்பில் நடத்த எண்ணம் இருப்பதாகவும் லோகேந்திர லிங்கம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ‘விடாமுயாற்சி வெற்றி தரும்’ என்னும் தலைப்பில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச பிளட்சர் தமிழ்ப் பள்ளி மாணவி ரவினாஸ்ரீ நந்த குமார், சிலாங்கூர் மாநிலம் ஷா ஆலம் கிளன்மேரி தமிழ்ப் பள்ளி மாணவி மணிஷா செந்தில் குமார், ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கி பாசாக் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி வர்ஷாஸ்ரீ சுரேஸ் ராவ், மலாக்கா மாநிலம் மெர்லிமாவ் செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ரீ மகேந்திரன், நெகிரி செம்பிலான் மாநிலம் ஜெரம் பாடாங் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி தனுஷா கார்த்திகேசு ஆகிய ஐவரும் உற்சாகப் பெருக்குடனும் தன்முனைப்பு கருத்துகளை பொதிய வைத்தும் பேசினர்.

இனிமை குன்றாமல், இன்முகத்துடன் சரளா வழிநடத்திய இந்நிகழ்வில், மாணவர்களின் பேச்சைத் தொடர்ந்து, அமெரிக்கா வாஷிங்டனைச் சேர்ந்த ‘எனர்ஜைஸ்’ திரு.மகேந்திரன் பெரியசாமி கருத்துரை வழங்கினார்.

காலை வேளையில் மாணவர்களின் பேச்சைக் கேட்டு உற்சாகமும் துள்ளலும் அடைந்தாரோ என்னவோ தெரியவில்லை, விருந்திற்கு அப்பளத்தைப் பொறித்து அடுக்குவதைப் போல அடுக்கு மொழியிலும் மிடுக்கு நடையிலும் மலேசிய கவிமகன் ஐ.உலகநாதன் கவி வரிகளையும் துணை கொண்டு மகேந்திரன் பெரியசாமி பேசினார்.., பேசினார்.., இது கூகுள்வழியான இணையக் கூட்டம் என்பதையும் மறந்து 22 நிமிடங்களைக் கடந்தும் பேசினார். 23-ஆவது நிமிடத்தில் போனால் போகிறதென்று பேச்சை நிறுத்தினார். ஆனாலும், மாணவர்கள் முதல் ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதல் கொண்டு அனைவரும் கேட்க வேண்டிய நல்லுரை; எழுச்சியுரையாகவும் ஊக்க மொழியாகவும்கூட அது அமைந்தது.

மீண்டும் தொகுப்புரை வழங்கிய திரு.லோகேந்திர லிங்கனும் மகேந்திரன் பெரியசாமியை வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து, முன்னாள் தலைமை ஆசிரியர் கோவிந்த சாமி இராமசாமி நன்றியுரை ஆற்றியபின், ஐந்து தமிழ்ப் பள்ளிகளின் சார்பில் தலைமை ஆசிரியர்களும் அவர்களின் சார்பில் மற்ற ஆசிரியர்களும் கருத்து தெரிவித்தனர்.

குழு படப்பிடிப்புடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.