LOADING

Type to search

அரசியல்

ரஃபேல் நடால்: என்றென்றும் ராஜா

Share

சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்

சிவாஜி படத்தில் ரஜினி பேசும் ஒரு பஞ்ச் டயலாக்: “சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல”. இது இன்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்கத் துடிப்பவர்கள், தன்னைக் கண்டு அடுத்தவர்களை மிரளவைக்க ஒரு செலவடையாக மாறியுள்ளது.

அந்த படத்தில் தனக்கு எதிராகவும் சமூகத்தில் தவறுகளைச் செய்யும் நபர்களை ஒடுக்கத்தனது பராக்கிரமத்தை நிரூபிக்கும் வகையில் அந்த வசனம் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த செலவடை இன்று அரசியல், விளையாட்டு, அடாவடித்தனம் போன்ற பல விஷயங்களில் பலரால் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக உருவெடுத்துள்ளது. அதாவது ஒரு தனிநபரைக் கண்டாலோ அல்லது அவரது ஆளுமையைக் கண்டாலோ அடுத்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதற்கான அறிகுறியாக அதுவுள்ளது.தேர்தல் ஒன்றில் மிகவும் பிரபலமாக வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால், அவரை எதிர்த்துப் போட்டியிட பலர் அச்சப்படுவது இயற்கையானது. ஆனால் விளையாட்டுக் களம் என்பது வேறு. அங்கு பாலோடு பால் மோதி, தோளோடு தோள் மோதி, பலம் வாய்ந்த காலோடு கால் மோதி, அரங்கில் குழுமியுள்ள ரசிகர்களின் ஆரவாரங்களோடு மோதி, ஆளுகளத்திலிருந்து எழும்பும் புழுதியோடு மோதி இறுதியாக அந்த வெற்றிக் கோப்பையை முத்தமிடும் தருணத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. நேரில் கண்டால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அப்படியான அரிய வாய்ப்பு இந்த எழுத்தாளருக்குப் பலமுறை கிட்டியுள்ளது. அது உலகக் கோப்பை போட்டியானாலும்ம் சரி அல்லது உள்ளூர் போட்டியானாலும் சரி!

கடந்த ஞாயிறு (ஜூன் 5) மாலை தொடங்கி குறைந்தது 48 மணி நேரங்களுக்கு சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த ஒரு பெயர் ரஃபேல் நடால். அன்று உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களால் காணப்பட்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒருமிகவும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக இருந்தது. அவர் கால் இருந்த நிலையில் அவரால் முடியுமா முடியாதா என்கிற கேள்வி அனைத்திலும் பார்க்க மேலோங்கி இருந்தது. அவரால் 14 ஆவது முறையாக அந்த ரோலன் காரோ மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்று கோப்பையை சர்வதேச பார்வைக்காக உயர்த்திப்பிடித்து சாதனைப்படைப்பாரா என்ற ஏக்கம் மேலோங்கியிருந்தது. அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் `சாஷா` ஷெவரேவிற்கு எதிரான போட்டியில், திடீரென காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷெவரேவ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து நடால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அந்த போட்டியில் ஷெவரேவிற்கு காலில் தசைநார்கள் கிழியாமல் இருந்திருந்தால் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பாரா என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினமான விஷயம். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் நார்வேயின் காஸ்பர் ரட்டை எதிர்த்து விளையாடியவை பார்க்கும் போது, அரையிறுதி போட்டி குறித்த ஐயங்கள் களையப்பட்டன என்று நடால் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ரஃபேல் நடால் அந்த செம்மண் தரையில் பெற்ற வெற்றிகள் அபாரமானது மட்டுமல்ல டென்னிஸ் உலகில் காலமெல்லாம் ரசித்து மகிழக் கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. ஏன் அப்படி?

ஏனென்றால், அந்த ஆடுகளம் அப்படி.  செம்மண் ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் சவாலானது மட்டுமல்ல அதில் ஏராளமான அறிவியலும் உள்ளன. இதர ஆடுகளங்களைவிட செம்மண் ஆடுகளத்தில் ஆடுவதற்கு தனித்துவமான சிறப்பியல்புகள் உள்ளது. நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண்ணால் ஆன ஆடுகளம் ரோலன் காரோ மைதானம் மட்டுமே உள்ளது. இந்த போட்டியானது உலகளவில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் கடுமையானது என்று விளையாட்டு மருத்துவர்களும், தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக விளையாட்டுச் செய்திகளை நேரில் கண்டுவரும் செய்தியாளர்களும் கூறுகின்றனர். எனவே அந்த செம்மண் ஆடுகளத்தில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் செம்மண்ணில் ஆடப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியே மிகவும் கடினமானது. மேலும் பந்து தரையில் பட்டதும் அது துள்ளி எழும்பும் வேகம், அது பயணிக்கும் திசை மற்றும் கோணம் ஆகியவை இந்த செம்மண் ஆடுகளத்தில் வித்தியாசமானது. எனவே அதைக் கணித்து கவனமாக ஆடுவதற்கு உடல் மற்றும் மனம் ஒரே நேரத்தில் சீராகச் சிந்தித்து செயல்பட வேண்டும். செம்மண் ஆடுகளம் மிகவும் மென்மையானது, எனவே பந்து அந்த தரையின் மீது பட்டவுடன் அது தனது ஆரம்ப வேகத்தை கணிசமானளவில் இழந்து ஒப்பீட்டளவில் கூடுதலான உயரம் எழும்பும். எனவே திருப்பியடித்து திணறவைக்கும் வகையில் பந்தை அடிப்பது இந்த ஆடுகளத்தில் சற்று சிரமமானது. அடிப்படையில் எல்லைக் கோட்டில் நின்று பிடித்து, நீண்ட நேரம் பந்தை மாறி மாறி அடிக்கும் உத்தியைக் கையாளும் வீரர்களுக்கே இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

“பொறுமை இங்கு தேவைப்படும் மிகப்பெரிய விஷயம், செம்மண் ஆடுகளத்தில் உங்கள் காலின் லாவகம், கூர்மையான சிந்தனை மற்றும் பந்தை எதிராளிக்கும் போடும் முறை ஆகியவை மிகவும் முக்கியம், இங்கு வேகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றிபெற முடியாது, இது கட்டாந்தரையில் ஆடுவது போல் கிடையாது” என்கிறார் ஏழு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பட்டத்தை வென்றுள்ள கிறிஸ் எவர்ட் அம்மையார்.

அவ்வகையில் செம்மண் ஆடுகளம் உடல் வலிமையின் உச்சக்கட்டத்தை பரிசோதிக்கும். எனவே வலைக்கு அருகில் வந்து பந்தை மிகவும் மென்மையாக எதிராளியின் பக்கம் போடுவதற்கு கால்களிலுள்ள ஆடுசதை இடம்கொடுக்க வேண்டும். இளம் வயதில் செம்மண் ஆடுகளத்தில் வெற்றி பெறுவது சுலபம், ஆனால் வயதாகும் போது அதே உடல் வலிமையைத் தக்கவைத்து ஆடுவது சவாலுக்கே சவால் விடுவது போலாகும். ”இந்த ஆடுகளம் உங்கள் புத்திக் கூர்மையை விழித்தெழச் செய்யும்” என்று கூறுகிறார் ஸ்பெயினின் முன்னாள் வீரர் ஹோசே ஹிகிரெஸ்.

ரோலன் காரோ மைதானத்தில் காணப்படும் ஆடுகள் சிவப்பு நிற கூறை ஓடுகளைப் பொடி செய்து சலித்து அந்த செம்மண்ணில் அமைக்கப்படும் ஆடுகளமாகும். அப்படியான களத்தில் பந்து வேகமாக அடிக்கப்படும் போது அது தரையில் பட்டவுடன் அழுத்தத்தைக் கொடுத்து சேலாக நசுங்கியது போன்ற சிறிய அமைப்பை ஏற்படுத்தும், அது பந்து முன்னேறிச் செல்வதிலிருந்து அதன் திசையை மாற்றி மேலே எழும்பும் வகையில் செய்கிறது. இவ்வகையில் பந்து திசைமாறி உயர எழும் போது, ஆடுகளத்தில் ஏற்படும் உராய்வு காரணமாகப் பந்தின் துள்ளி எழும்பும் வேகம் அதிகரித்து அது பயணிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே செம்மண் ஆடுகளத்தில் பந்தின் அந்த துள்ளிக்குதிக்கும் வேகத்தை அனுமானித்து அதற்கேற்ற வகையில் உடல் அசைவுகளை மாற்றியமைத்து பந்தை அடிக்கும் போது இடுப்பு மற்றும் கால்கள் உடலின் சக்தியில் பெரும்பங்கை எடுத்துக்கொள்ளும்.

அது மட்டுமல்ல, இளநீர் வெட்டுவது போன்று பந்தை மேல்வெட்டாக சீவும் போது கைகளில் மிகவும் உறுதி தேவை. பந்து நன்றாக மேலெழுந்து வரும் என்பதால் இந்த இளநீர் வெட்டு சாத்தியப்படும், ஆனாலும் பந்து எதிர்பார்க்கப்படும் வகையில் வேகம் குறைந்து வலையைத் தாண்டி தாழ்வாக விழுவது மிகவும் சவாலான சிக்கலான ஒன்றாகும். மேலும் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் இப்படியும் அப்படியும் ஆடுகளத்தில் சுழலும் போது இடுப்பும் காலும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும், அதுவும் செம்மண் ஆடுகளத்திலுள்ள துகள்கள் மிகச்சிறிய உருளைகள்-பால் பியரிங்- போன்று செயல்படுவதால்,  உராய்வு காரணமாக ஒரு வீரர் பந்தை அடிக்கும் திசையில் தன்னை மாற்றிக்கொள்வது பெரும் சவாலானதாகும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு செம்மண் ஆடுகளத்தில் விளையாடுவது இயற்கையுடன் விளையாடுவதற்கு ஒப்பாகும். அதிகமான வெயில் அல்லது லேசான மழை கூட ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும். அதிகமான வெயில் நாட்களில் பந்து காற்றில் வேகமான பயணிக்கும் (பௌதிகம் படித்தவர்கள் இதை அறிவார்கள், அதாவது வெப்பமான காற்றில் ஈரமான காற்றைவிட அடர்த்தி குறைவாக இருக்கும்), அதேவேளை ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது- லேசான மழை அல்லது தூறல் காரணமாக- பந்தில் செம்மண் ஒட்டும், அதனால் வீரர்களால் தாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வேகமாக அடிக்க முடியாது.

பல வகைகளில் கடுமையான சவால்கள் நிறைந்த ரோலன் காரோ மைதானத்தில் 14 முறை வென்று சாதனை படைப்பது சாதாரண விஷயமல்ல அதைத்தான் 36 வயதான ரஃபேல் நடால் செய்துள்ளார். எனவேதான் உலகெங்குமுள்ள டென்னிஸ் வர்ணனையாளர்கள், விமர்சகர்கள், செய்தியாளர்கள், ரசிகர்கள் அனைவரும் நடாலை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர்.

ஜூன் 6 ஆம் திகதி சி என் என் செய்தி சேவையிடம் பேசிய நடால், “ நோவாக் (ஜாக்கோவிச்) 23 முக்கியப் பட்டங்கள் (கிராண்ட் ஸ்லாம்களை) வென்று நான் 22 மட்டுமே பெற்று அதில் தங்கிவிட்டால், நான் கவலைப்பட மாட்டேன். எனது மகிழ்ச்சி மாறவே மாறாது, ஒரு சதவீதம் கூட” என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டும் டென்னிஸ் செய்தியாளர் லுய்ஜி கட்டோ, அது அவரது பெருந்தன்மையைப் பெரியளவிற்கு எடுத்துக்காட்டுகிறது என்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் நடால் வயதானவர் போலிருக்கும் படம் ஒன்றைச் சித்தரித்து 2050 ஆம் ஆண்டு 40 ஆவது முறையாக ரோலன் காரோ மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்ற பிறகு நடால் செய்தியாளர்களிடம் பேசுகிறார் என்று ட்வீட் செய்துள்ளார். ரஃபேல் நடாலின் ஆளுமைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்காது.

அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் மிகவும் பாரதூரமானது.  இரண்டு கால்களிலும், அதிலும் குறிப்பாக இடது காலின் ஆடுசதை தொடங்கி கணுக்கால் பாதம் வரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குறிப்புகளை மேற்கோள் காட்டி செய்திகள் கூறுகின்றன.  இம்முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளை வென்ற பிறகு அவர் தொழில்சார் டென்னிஸ்லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என்று ஏகப்பட்ட ஊகங்கள் நிலவின. ஆனால் முடிந்தளவிற்குத் தொடர்ந்து களத்தில் இருப்பேன் என்று கோப்பையை கையில் வைத்துக்கொண்டு அவர் கூறினார்.

“இது வெற்றி தோல்வி தொடர்பான விஷயமல்ல, யாருக்கும் நிரூபிக்க வேண்டிய விஷயமல்ல, இது நாம் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்வதாகும், நான் டென்னிஸை விரும்புகிறேன்”

இது தான் நடால், என்றென்றும் ராஜா