தமிழர்களை நாட்டைவிட்டு ‘துரத்திய’ தென்னிலங்கை தற்போது சிங்களவர்களையும் ‘துரத்துகின்றது’
Share
கதிரோட்டம் : 10-06-2022
கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக மாங்கனித் தீவு என்ற இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டும் உடைமைகள் அழிக்கப்பட்டும் உயிர்கள் பறிக்கப்பட்டும் தொடர்ச்சியாக. இன்னல்களை அனுபவித்த ஓரு இனமான ஈழத் தமிழ் இனம் அங்கு அடையாளம் காணப்படுகின்றது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்று நாம் எமது விரல்களால் எழுதுவதற்கு கூட ஒரு துளி சான்று எம்மிடத்தில் இல்;லை இந்த விடயம் எமக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தென்னிலங்கை
பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகள் அனைவரும் நன்கு அறிந்த விடயம் என்பதே உண்மை.
தமிழர்கள் என்ற மொழி அடிப்படையிலான காரணத்தால் வடக்கு கிழக்குத் தமிழர்கள் மாத்திரமல்ல. மலையகத் தமிழர்களும் தாக்கப்பட்டார்கள். கடந்த காலங்களில் இலங்கையின் சில பகுதிகளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த தீவிர இனவாதிகளாலும் காடையர்களாலும் தாக்கப்பட்டார்கள். கொன்றழிக்கப்பட்டார்கள்.
எமது மக்கள் பேசுகின்ற மொழியின் காரணமாகவும் நாம் கடைப்பிடிக்கின்ற பண்பாட்டு முறைகள் காரணமாகவும். கல்வியில் ஆர்வம் காட்டி முன்னேற்றம் கண்ட ஒரு சமூகம் என்ற காரணத்தாலும் எமது ஈழத்தமிழினம் சிங்கள இனவாதிகளாலும் அரசியல் இலாபம் தேட முற்பட்ட அரசியல்வாதிகளாலும் ‘குறி’ வைக்கப்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் மத்தியில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற காரணத்தால் எமது இனம் மீண்டும் ‘குறி’ வைக்கப்பெற்றது.
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான எமது இனத்தின் சொந்தங்களான உயிர்கள் பறிக்கப்பட்டன. இதனை இன்னொரு வரியில் சொல்வதனால் “ ஈழத் தமிழ் மக்கள் தென்னிலங்கை இனவாதிகளால் நாட்டைவிட்டு துரத்தப்பட்டார்கள்” என்று கூறலாம்.
இவ்வாறு எம் இன மக்கள் இலங்கையை விட்டு ‘பறந்து’ செல்லத் தொடங்கி நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இலங்கையை ‘அப்பே ரட்ட’ என்ற அர்த்தம் கொண்ட ‘ எங்கள் நாடு- சிங்களவர்களின் நாடு” என்ற வெற்றுக்கோசத்திற்கு கட்டுப்பட்டு நின்ற சிங்கள மக்கள் தற்போது தங்களை வழி நடத்திய தலைவர்கள் ‘பொய்யர்கள்’ மட்டுமல்ல ‘திருடர்கள்’ நாட்டைச் சூறையாடியவர்கள்’ என்று அடையாளம் கண்ட காரணத்தால் அங்கு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். இவ்வாறாக பசி, பட்டினி. வுpலைவாசி உயர்வு, கல்வி கற்கும் நிலை மறுக்கப்பட்டமை ஆகியவை நாட்டின் பெரும்பான்மை மக்களையும் பாரதூரமாக பாதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அவர்கள் நாட்டை விட்டு ‘பறந்து’ செல்லத் தயாராகின்றார்கள் என்ற செய்தி அங்கிருந்து ‘பறந்து’ வந்துள்ளது. கடந்த நாட்களாக இலங்கையில் கடவுச்சீட்டுகளின் தேவை பாரிளளவு அதிகரித்து,
பிராந்திய அலுவலகங்களில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள மக்கள் பெருமளவில் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள ‘முண்டியடிப்பதாக’ தெரிகின்றது.
வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக திணைக்களம் தனது சேவைகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சேவை காலத்தை அதிகரித்த போதிலும் பிராந்திய அலுவலகங்களில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியப்படுகின்றது. இவற்றைப் பார்க்கும் போது தமிழ் மக்களை ‘துரத்தியடித்த’ தென்னிலங்கை, தற்போது, தனது சொந்த மக்களையே ‘துரத்துவதற்கு’ தயாராகிவிட்டது என்று நிதர்சனமாகத் தெரிகின்றது.