இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகளை இனிமேல் மூடிவைக்க முடியாது என்பதை அறிவித்த கனடாவின் பிரம்ரன் மாநகரம்
Share
கதிரோட்டம் 24-06-2022
2009 ஆண்டில் மட்டுமல்ல. அதற்கு முன்னரும் பின்னரும் இலங்கை அரசினாலும் ஆயுதப் படைகளினாலும் கொல்லப்பட்டவர்களின் இழப்பின் கொடுமையை ‘இனப்படுகொலை’ என்று எம்மவர்கள் உச்சரிக்க முற்பட்ட போது பல நாடுகளும் தனி நபர்களும் நியாயம் வழங்க வேண்டிய அமைப்புக்களும் அதைவிட இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்கள் சிலர் கூட அதற்கு தடையாக இருந்தாரகள். எங்கள் வாய்களை மூடி வைக்கச் சொன்னார்கள். “அப்படி சொன்னால் அது நாம் பிறந்த மண்ணை அவமானப்படுத்தும் செயல” என்றார்கள் சிலர்.
இவ்வாறாக 2009ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையாலும் ஏனைய மனித உரிமைகளுக்கான உயர் பீடங்களும் இவ்வாறான தமிழினப் படுகொலைகளை ஏற்க மறுத்தும். இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படக் கூடாது என்று எடுத்த தீர்மானங்களும் எம்மையும் எமது மக்களையும் மிகுந்த வேதனைகளுக்கு உள்ளாக்கின.
ஆனால், மேற்குலக நாடான கனடாவில் பிரம்ரன் மாநகர சபை என்னும் உள்ளுராட்சி மன்றம் எடுத்த முனைப்பின் காரணமாக, இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாளாக எழுந்து நிற்கின்றுதா. முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட இலட்சோப லட்சம் ஈழ்த்தமிழருக்கான நினைவுத் தூபியை அமைப்பதற்கான ஆரம்பப் படியாகவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவும் இன்று பிரம்ரன் மாநகர சபையும் அதன் முதல்வர் பெற்றிக் பிரவுண் அவர்களும் அவரது சக சபை அங்கத்தவர்களும் இணைந்து எடுத்த முடிவின் பிரகாரம் இலங்கை அரசின் தமிழ்pனப் படுகொலைகளை இனிமேல் மூடிவைக்க முடியாது என்பதை இந்த மாநகராட்சி மன்றம் உலகிற்கு அறிவித்ததன் மூலம் எமது காயங்களுக்கு மருந்து தடவியதைப் போன்ற உணர்வை எமக்களித்துள்ளுத..
ஆமாம்! இன்று கனடாவின் பிரம்ரன் மாநகரில் எடுக்கப்பெற்ற ஆரம்ப நடவடிக்கைகளின் ஒரு பகுதியான எம்மீது நிகழ்த்தப்பெற்ற இனப்படுகொலைகளை நிரூபிக்கும் அடையாளமான நினைவுத் தூபிக்கான மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்திய நிகழ்வு உள்ளாட்சி அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதும் அங்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும்.
கனடா பிராம்டன் நகரில் அமையப் போகும் ‘தமிழினப்படுகொலை நினைவுத் தூபி’யின் மாதிரி வடிவம் காட்சிபடுத்தப்பெற்றது. அந்தக் காட்சியை எமது மக்கள் உட்பட பலர் கண்டு களித்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததை கண்டதாக பல சாட்சிகள் தோன்றியுள்ளன.
இந்த துணிச்சலான காரியத்தை நிறைவேற்றியதன் மூலம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்தமை மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது. கனடாவில் பேசப்படும் ஒரு அற்புதமான பூங்காவான ‘செங்கூசி பூங்கா’வில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளமை ஓர வரப்பிரசாதம் என்றே நாம் கருத வேண்டியதாகும். இதற்கு காரணம். கோடை காலத்தில் லட்சோப இலட்சம் மக்கள் கூடுகின்ற ஒரு முக்கியத்துவம் பெற்ற இடமாக இது கருதப்படுகின்றது. எனவே இங்கு கூடுகின்றவர்களுள் குறைந்தது இருபத்தைந்து வீதமான மக்களாவது எமது மக்களின் வலிகளுக்குச் சான்றாக விளங்கும் இந்த நினைவுத் தூபியைத் தரிசித்து அது எதற்காக அங்கு நிறுவப்பெற்றுள்ளது என்பதையும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் நாம் நம்பலாம்.
இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை இனவழிப்பு என்று ஐ. நா சபையும், மேற்குலக சமூகங்களும் இற்றைவரை இனப்படுகொலை என்று பேச மறுக்கின்றன.
இந்நிலையில் கனடா பிராம்ரன் மாநகரசபையின் தமிழ் இனத்திற்கான இந்த அங்கீகாரம் ஒரு உயர்ந்த அங்கீகாரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அத்துடன் இந்த தூபியானது இலங்கை அரசிற்கு ஓரு அவமானச் சின்னமாகவே விளங்கும் என்பதையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.