மலேசியாவின் ‘இந்திரா காந்தி’ நூருல்
Share
*-நக்கீரன்*
கோலாலம்பூர், ஆக.06:
மலேசிய மக்களும் நாளைய அரசியலும் ஒரு பெண் பிரதமரை எதிர்கொண்டால், அவர் அநேகமாக நூருல் இஸாவாகத்தான் இருப்பார். அவருக்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது.., மலேசியாவின் இன்றைய அரசியல் போக்கைப் பொறுத்தவரை;
நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்படும் இவர்,, மலேசிய அரசியலில் சீர்திருத்த இளவரசி என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எப்படி அரசியல் வட்டத்திற்குள் வளர்ந்தாரோ, வாழ்ந்தாரோ அதைப்போல, ஏறக்குறைய நூருலும் ஓர் அரசியல் குடும்பத்தில் தோன்றினார்.
பதின்ம வயதைக் கடந்து இளையவர் என்ற நிலையை எட்டியபோது, இந்தியா-பாகிஸ்தான்-வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்திருந்த ஒன்றுபட்ட இந்தியாவிற்கான முக்கிய முடிவுகளை உயர்நிலைத் தலைவர்கள் எடுத்தபோது உடன் இருந்தவர் இந்திரா காந்தி.
இந்திரா காந்தியின் 19 வயதிலேயே தாய் கமலா நேரு மறைந்ததாலும் அத்தை விஜயலெட்சுமியுடன் முரண்பட்டு இருந்ததாலும் ஜவஹர்லால் நேரு எங்கு சென்றாலும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் மகள் இந்திரா பிரியதர்ஷினியை உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
அதைப்போன்ற நேரடியான அனுபவம் நூருல் இஸாவிற்கு வாய்க்கா-விட்டாலும் மலேசிய அரசியலின் நேரடித் தாக்கம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நேரு சிறையில் இருந்தபொழுது இந்திரா என்னென்ன சிக்கலை எதிர்கொண்டாரோ அதைப்போல நூருலும் தன் தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்தபோது எதிர்கொண்டார்.
வெளிநாட்டில் படிக்கச் சென்ற இந்திரா, பார்சி இனத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் என்பவரைக் காதலித்தார். இதை விரும்பாத நேரு, அண்ணல் காந்தியை துணைக்கு அழைத்து இந்திரா-ஃபெரோஸ் காதலைப் பிரிக்க சதி செய்தார்.
பாவம் காந்தியார்.., அவரால் ஒன்றும் ஆகாத அளவுக்கு இந்தக் காதல் கெட்டியாக இருந்தது. அப்படிப்பட்ட காதல் கணவரை, ராஜீவ்-சஞ்சய் என்ற இரு குழந்தைகள் பிறந்தபின் பிரிந்தார் இந்திரா காந்தி.
இந்திராவைப் போலவே, நூருலும் இரு குழந்தைகளுக்குப் பின், தன் கணவர் ராஜா அகமட் ஷாரியை மணவிலக்கு செய்திருந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது ‘இன் ஷாவ் லூங்’ என்பவரை நேற்று 2022, ஆகஸ்ட் 5-ஆம் நாளில் மறுமணம் புரிந்திருக்கிறார்.
தனி வாழ்க்கை, நல்லறமாம் இல்லறம், பொது வாழ்க்கை, அரசியல் களம் என எல்லாத் தலங்களிலும் தனித்து செயல்படும் பாங்கு கொண்ட புதுமைப் பெண்ணான நூருல் இஸா, இந்திரா காந்தியைப் போலவே பிரதமராகவும் ஆவாரா என்பதை நாளைய மலேசிய அரசியல் தீர்மானிக்கும்.
இரண்டு முன்னாள் துணைப் பிரதமர்களின் மகள் என்ற பெருமை, உலகிலேயே நூருல் இஸாவிற்குத்தான் உண்டெனத் தெரிகிறது. ஆனாலும், தாய் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்-தந்தை அன்வார் ஆகியோரின் அரசியல் நிழலில் அண்டியிருக்க விரும்பாதவர் நூருல்.
இவரின் அரசியல் நுழைவே அதிரடியாக இருந்தது. தலைநகரின் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் 2008, 2013 பொதுத் தேர்தல்களில் இரு கேபினட் அமைச்சர்களை வீழ்த்தி அவர்களை பதவியழக்கச் செய்த அரசியல் வீராங்கனை நூருல் இஸா.
2008 பொதுத் தேர்தல் சமயத்தில் ஹிண்ட்ராஃப் எழுச்சி ஒரு பக்கம் இருந்தா-லும், அம்னோ மகளிர் தலைவியாகவும் மகளிர்-குடும்ப-சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்த டத்தோஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில் ஒரு வலுவான வேட்பாளர் என்பதால் பிரதமர் துன் அப்துல்லா படாவி, இளம்பெண் நூருலால் என்ன ஆகிவிடப் போகிறதென்று, சற்று ஏனோதானோ என்ற மனப்பான்மை-யில் இருந்து விட்டார்.
ஆனால், 2013 பொதுத் தேர்தலில் எப்படியாவது நூருலை மண்டியிட வைத்துவிட வேண்டும் என்று அடுத்துவந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், தொகுதியில் களம் கண்ட ராஜா நோங் ச்சிக் ஜைனால் அபிடினைவிட அதிகமாக முயன்றார். கடைசியில், ராஜா நோங் ச்சிக்-தான் அடுத்து உருவான அமைச்சரவையில் பதவி ஏற்க முடியாத நிலைக்கு ஆளானார்.
அதற்கு அடுத்து நடைபெற்ற 2018 பொதுத் தேர்தலில் தன் தந்தையின் தொகுதியான பெர்மாத்தாங் பாவ்-ஐத் தற்காக்க தன் தாய் வான் அஸிஸாவிற்குப் பதிலாக பினாங்கு பக்கம் சென்றுவிட்டார்.
2018 பொதுத் தேர்தலுக்குப் பின் மலேசிய அரசியல் புதிய கோணத்தில் புதிய பாதையைத் தொடங்கிய நேரத்தில், துன் மகாதீர் மேற்கொண்ட வஞ்சக-சூழ்ச்சி அரசியலால் மனம் உடைந்து, நம்பிக்கைக் கூட்டணியில் இணையவும் தலைமை தாங்கவும் வெளிநாடு சென்று மகாதீரை சமாதானப் படுத்தி அழைத்து வந்த முயற்சி யெல்லாம் வீணாகிவிட்டது என்று அறிவித்துவிட்டு அரசியலில் இருந்தும் கட்சி நடவடிக்கையில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டார் நூருல்.
நூருலின் இந்தச் சாடலுக்கு, இன்றுவரை மகாதீர் விளக்கம் சொல்லவில்லை.
மகாதீர் ஒரு மலாய்க்காரரே அல்லர்; அவர் ஓர் இந்தியர்; அவரிடம் மலாய்க்காரர்கள் தங்களின் அரசியல்-பொருளாதார-சமூக சிக்கலை 22 ஆண்டுகளாக ஏமாந்து ஒப்படைத்திருந்தோம் என்று முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சொன்னபோது, தன் தந்தைதான் இந்தியாவின் மலையாள மொழிவழி வந்தவர்; தாய் மலாய்ப் பெண்தான் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு விளக்கம் தந்த மகாதீர், நூருலுக்கு மட்டும் மறுப்போ விளக்கமோ சொல்லவில்லை.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்பெற்ற நூருல், மனிதநேய சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, சிறைவாசிகளின் நலனில் அக்கறை கொண்டவர். இதன் அடிப்படையில்தான், ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மன்றத்தின் 55வது மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான அமர்வில் நூருல் தலையிட்டார்.
விரைவில் நடைபெற இருக்கின்ற 15-ஆவது பொதுத் தேர்தலில், மகாதீர் உள்ளிட்ட அன்வாரின் அரசியல் எதிரிகள் வகுக்கும் தந்திரோபாயம் ஒருவேளை பலித்து, அன்வாரின் பிரதமர் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை நழுவினால், நாட்டு மக்களின் கவனமும் அனுதாபமும் நூருல் பக்கம் 100% திரும்பும்.
அப்படி நடந்தால், ஆணாதிக்க உலகில் இந்திரா காந்தி எப்படி சாதித்தாரோ, அமெரிக்க அதிபர் நிக்ஸனை மடக்கி, பாகிஸ்தானுக்கு எதிராக போர் புரிந்து வங்காள தேசம் என்ற நாட்டை எவ்வாறு உருவாக்கினாரோ?; அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவி அணு ஆயுத சோதனையை எவ்வாறு நிகழ்த்தினாரோ அதைப்போன்ற அதிரடியையும் புதுமையையும் மலேசிய மண்ணில் நூருல் இஸாவும் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
அதற்கேற்ப, அண்மையில் மக்கள் நீதிக் கட்சி என்னும் பிகேஆரில் மீண்டும் உதவித் தலைவராக களம் புகுந்துள்ள இவர், 42 வயதை எட்டியுள்ள நிலையில், 46 வயதான தன் அரசியல் கூட்டாளியை மறுமணம் புரிந்திருக்கிறார்.
அவரின் புதிய மணவாழ்வும் புதிய அரசியல் பயணமும் சிறக்க, கனடாவின் பன்னாட்டு இணைய செய்தித் தளமான உதயன் வாழ்த்துகிறான்!
வாழ்க நூருல்!!